For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

26/11 மும்பை தாக்குதல்... கேள்விகள் நிறைய.. விடைகள் எங்கே?

Google Oneindia Tamil News

டெல்லி: மும்பையில், நவம்பர் 26 தாக்குதல் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் விடை காணப்பட முடியாமல் ஏராளமான கேள்விகள் நம்மை சுற்றிச் சுற்றி வந்து கொண்டுள்ளன.

இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய உள்ளூர் தொடர்புகள் குறித்த விடைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. டேவிட் ஹெட்லி மற்றும் அவரது கூட்டாளி தவ்வாஹூர் ராணா ஆகியோரை நம்மால் நம் வசம் கொண்டு வர முடியவில்லை. அதை விட முக்கியமாக இந்த தாக்குதலை திட்டமிட்டு அரங்கேற்றிய முக்கிய தீவிரவாத தலைவர்கள் பாகிஸ்தானில் பத்திரமாக உள்ளனர்.

26/11: More questions than answers

இது நிச்சயம் மிகக் கடினமான விசாரணை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த வழக்கின் முக்கிய விசாரணையை மும்பை குற்றப் பிரிவு போலீஸார் மிகவும் சொதப்பலாக நடத்தினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. சொதப்பல் என்பதை விட சோம்பேறித்தனமான விசாரணை என்று கூட சொல்லலாம். அஜ்மல் கசாப் கொடுத்த வாக்குமூலத்தை மட்டுமே நம்பி முழு விசாரணையையும் நடத்தியுள்ளனர்.

கசாப் என்ன செய்தான் என்பதை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. அவன் செய்த செயல் அனைவருக்குமே தெரிந்ததுதான். எனவே அவனைத் தண்டிக்கவும், நீதியின் முன்பு நிறுத்தவும் திறமையான முறையில் செயல்பட வேண்டியஅவசியமே இல்லை. உண்மையில் பத்து தீவிரவாதிகளையும் பிடித்தது மும்பை போலீஸாருக்கு அதிர்ஷ்டமான விஷயம்தான்.

உள்ளூர் தொடர்பில் பதுங்கிய போலீஸ்:

உள்ளூர் தொடர்புகள் குறித்த விஷயத்தில்தான் மும்பை போலீஸார் சரிவர செயல்படவில்லை. பதுங்கினர். பத்து தீவிரவாதிகளும் மும்பைக்குள் ஊடுறுவ ஒரு பெண் காரணம் என்ற தகவல் சரிவர விசாரிக்கப்படவில்லை. உண்மையில் அந்த பத்து பேரும் நவம்பர் 26ம் தேதி நடந்த தாக்குதலுக்கு ஒரு நாளுக்கு முன்பே மும்பையில் ஊடுறுவி பத்திரமான ஒரு இடத்தில் இருந்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப்படவில்லை. மேலும் பாஹிம் அன்சாரி மற்றும் சபாஹுதீன் அகமது ஆகியோருக்கு எதிரான வலுவான ஆதாரத்தையும், வாக்குமூலத்தையும் பெறத் தவறி விட்டது போலீஸ்.

இந்த இரு இந்தியர்களுக்கும் எதிரான விசாரணையை போலீஸார் துரித கதியில் நடத்தி முடித்துள்ளனர். தீவிரவாதிகள் பத்து பேரும் பயன்படுத்திய மேப்பை உருவாக்கிக் கொடுத்தவர்களே இந்த இருவரும்தான்.

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு 3 மாதங்களுக்குப் முன்னதாக பாஹிம் அன்சாரி மற்றும் அகமது ஆகியோரை உ.பி. போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, ஒரு பெரும் தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டு வருவதாக கூறியிருந்தனர். அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தில், மும்பையில் சில இடங்களை தாங்கள் ஆய்வு செய்ததாக கூறியிருந்தனர். ஆனால் குற்றப் பிரிவு போலீஸாரால் அவர்களிடமிருந்து போதியதகவல்களைத் திரட்ட முடியவில்லை. இதனால் அந்த இருவரையும் சுப்ரீம் கோர்ட்பின்னர் விடுவிக்க வேண்டி வந்தது.

டேவிட் ஹெட்லி:

டேவிட் ஹெட்லி, இந்திய புலனாய்வாளர்களுக்கு மிகவும் மர்மமான மனிதராக இருந்தார். இந்த நபர் இருக்கிறாரா என்பது குறித்துக் கூட முதலில் இந்தியாவுக்குத் தெரியவில்லை. அமெரிக்க அதிகாரிகள் சொல்லித்தான் நமக்கே தெரிய வந்தது. மிகவும் சுலபமாக இந்தியாவுக்கு வந்து பல முக்கிய இடங்களை இந்த ஹெட்லி வேவு பார்த்துச் சென்றுள்ளார். ஹெட்லியும், அவரது கூட்டாளியான ராணாவும், மும்பையில் வேவு பார்த்துச் சென்ற விவரம், தாக்குதல் நடந்து சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகே வெளிச்சத்திற்கு வந்தது.

இந்திய உளவு அமைப்புகள் ஹெட்லி குறித்து தூங்கிக் கொண்டிருந்தன என்று கூட சொல்லலாம். அல்லது அமெரிக்கர்கள் ஹெட்லி குறித்த தகவல்களை, ரகசியங்களை மூடி மறைத்திருந்தனர் என்றும் சொல்லலாம். காரணம் ஹெட்லி ஒரு காலத்தில் சிஐஏ ஏஜென்ட்டாக இருந்தவர் என்பதால்.

கைதுக்குப் பின்னர் ஹெட்லி விரிவான வாக்குமூலத்தை அளித்தார். மேலும் நமது தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவும் கூட அமெரிக்கா போய் வந்தது. ஹெட்லியின் வாக்குமூலத்தையும் பெற்றது. ஆனால் எப்பிஐக்கு அளித்த வாக்குமூலத்திற்கு முற்றிலும் மாறாக நமது குழுவிடம் பேசினார் ஹெட்லி. நம்மால் அதைக் கேட்டு விட்டு வரத்தான் முடிந்தது. வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அமெரிக்க சட்டம் அப்படி.

ஹெட்லியை நமது நாட்டுக்குக் கொண்டு வர முயற்சிப்பதாக அப்போதைய மத்திய அரசு கூறி வந்தது. ஆனால் அதெல்லாம் சுத்தப் பொய் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவரை நம்மால் கொண்டு வரவும் முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும் கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கவும் முடியாது.

ராணா:

ஹெட்லியின் கூட்டாளிதான் இந்த ராணா. இவர் சுற்றுலா ஆவணங்களை ஹெட்லிக்கு தயார் செய்து கொடுத்தவர். உண்மையில் நாம் நினைத்திருந்தால் ராணாவை இங்கே தூக்கிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்தியா ராணாவின் நாடு கடத்தலை வலியுறுத்தவில்லை. அதேசமயம், ராணா தொடரபாக நாம் எடுத்த முயற்சிகளும் கூட தோல்வியிலேயே முடிந்தன. ராணாவுக்கு எதிராக நம்மிடம் ஒரு துளி அளவு கூட ஆதாரம் இல்லை என்பதும் இன்னொரு முக்கிய விஷயம்.

ராணாவுக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த விசாரணையைத்தான் இந்தியா வெகுவாக நம்பியிருந்தது. ஆனால் ராணா மீதான புகாரிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். டென்மார்க்கின் மிக்கி மெலஸ் திட்டம் தொடர்பான வழக்கில் மட்டுமே அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். மும்பை தாக்குதல் புகாரிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் விசாரணை:

பாகிஸ்தானில் நடந்து வரும் விசாரணை குறித்து சொல்லவே தேவையில்லை. இது முடிவே இல்லாத ஒரு விசாரணை. அந்த விசாரணையின் போக்கைப் ார்த்தால், இது முடியவே முடியாது என்று சொல்லி விடலாம். மும்பைத் தாக்குதலின் முக்கிய மூளை ஹபீஸ் சயீத். இவர் சிறையிலும் இல்லை, கட்டுப்படுத்தப்படவும் இல்லை. மாறாக, இந்தியாவுக்கு எதிராக இப்போதும் கூட அவர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் வேலையில் அவர் தற்போது தீவிரமாக உள்ளார்.

தாக்குதல் திட்டத்தை செயல்படுத்திய கமாண்டர்களில் ஒருவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் உள்ளார். ஆனால் அவரது விசாரணை குழப்பமாகவே உள்ளது. அவருக்கு சிறையில் மொபைல் போன் கொடுத்திருக்கிறார்கள். டிவி உள்ளது. சொகுசான அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா கொடுத்த ஆதாரம் போதுமானதாக இல்லை என்று ஏற்கனவே பாகிஸ்தான் கொடுத்து விட்டது. மேலும் தங்களிடம் உள்ள சில சாட்சிகளை விசாரித்துப் பாருங்கள் என்று கூட பாகிஸ்தானிடம், இந்தியா கூறியிருந்தது. ஆனால் அதையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை.

அதேபோல இந்தியக் குழு பாகிஸ்தான் சென்று விசாரிக்க அனுமதி கோரியபோதும் கூட அதை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

மர்மம்:

இந்த வழக்கைப் பொறுத்தவரை உள்ளூர் கோணம் என்பது இன்னும் புரிபடாமல் உள்ளது. மர்மமாகவே உள்ளது. சஜீத் மிர் என்ற முன்னாள் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இந்த வழக்கில் முக்கிய மூளையாக திகழ்ந்தவர். இவர் ஹெட்லியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். தீவிரவாதிகளை பாகிஸ்தானில் இருந்தபடி கட்டுப்படுத்தியவர். ஆனால் இப்படி ஒரு ஆளே இல்லை என்று பாகிஸ்தான் கூறி விட்டது

ஆனால் மிர் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நபர். இவரை அம்பலப்படுத்தினால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ராணுவத்துக்கும் சிக்கலாகி விடும் என்பதால் இவரைக் காப்பாற்றுகிறது பாகிஸ்தான்.

வழக்கு நிலவரம்:

மும்பை குற்றப் பிரிவின் விசாரணை முடிந்து விட்டது. வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி தொடர்ந்து விசாரித்து வருகிறது. அபு ஜின்டால் என்ற முக்கியமான நபர் தேசிய புலனாய்வு ஏஜென்சி வசம் உள்ளார். இவர்தான் 10 தீவிரவாதிகளுக்கும் இந்தி பேசக் கற்றுக் கொடுத்தவர் ஆவார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானுக்குப் போய் விட்டவர். லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்து செயல்பட்டவர். தாக்குதல் நடந்தபோது இவர் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்தி வந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்.

ஹெட்லியை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளது. அவரை நாடு கடத்திக் கொண்டு வரவும் முடியவில்லை. மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தவும் முடியவில்லை.

இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றம் இருந்தது. 2010ம் ஆண்டுக்குப் பிறகு விசாரணை கிட்டத்தட்ட முடங்கி விட்டது. அமெரிக்கத் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. இருப்பினும் கடும் முயற்சிக்குப் பின்னர் சில முன்னேற்றங்களை தேசிய புலனாய்வு ஏஜென்சியால் காண முடிந்தது. ஹெட்லியின் இமெயில் தொடர்புத் தகவல்கள் நம்மிடம் உள்ளன. விரைவில் ஹெட்லிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தயாரித்து அதை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.

ஆனால் இந்த வழக்கின் மிக முக்கிய குற்றவாளிகள் பாகிஸ்தானில் உள்ளனர். அல்லது அமெரிக்காவில் உள்ளனர். எனவே அவர்களைத் தண்டிப்பது என்பது நிச்சயம் கடினமான வேலைதான்.

English summary
Six years after the 26/11 attack there are several questions that remained un-answered. The local link to the attack, the case against Tawwahur Rana who is alleged to have assisted David Headley and more importantly the trial against the masterminds holed up in Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X