For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 ஆண்டுகளுக்கு முன் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்ட நாள் இன்று- ப்ளாஷ்பேக்

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தி 1987-ம் ஆண்டு டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்டிருந்த நாட்கள்தான் ஜூலை 24,25,26.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 1987-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் டெல்லி அசோகா ஹோட்டலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிறைவைக்கப்பட்ட நிலையில் இருந்தார் என வரலாற்று பக்கங்கள் பேசும் அந்த நாட்கள் இந்த ஜூலை 24, 25,26தான்.

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியான வடகிழக்கில் இனப்படுகொலைகளை அன்றைய சிங்கள ஜெயவர்த்தனே கட்டவிழ்த்துவிட்டது. இதனைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டு தமிழர்களைப் பாதுகாப்பதாக கூறி இந்தியா தலையிடத் தொடங்கியது.

அன்றைய இலங்கைக்கான இந்திய தூதர் ஜே.என். தீட்சித் இந்தியா- இலங்கைக்கான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதில் மும்முரம் காட்டினார். இது தொடர்பாக பிரபாகரனுடன் இந்திய தூதரக முதன்மை செயலர் பூரி ஜூலை 19 மற்றும் 20-ந் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எம்ஜிஆரை சந்திக்க விரும்பிய பிரபாகரன்

எம்ஜிஆரை சந்திக்க விரும்பிய பிரபாகரன்

அத்துடன் பிரபாகரனை டெல்லிக்கு அழைத்து வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி விரும்பினார். பிரபாகரனோ டெல்லி செல்லும் வழியில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரை சந்திக்க விரும்பினார்.

திருச்சியில் பிரபாகரன்

திருச்சியில் பிரபாகரன்

இதையடுத்து ஜூலை 24-ந் தேதியன்று யாழ்ப்பாணத்தின் சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பிரபாகரன் மற்றும் தளபதிகள் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அவர்கள் புறப்பட்டனர். அங்கி முதல்வர் எம்ஜிஆரை சந்தித்துப் பேசினர்.

அசோகா ஹோட்டலில்...

அசோகா ஹோட்டலில்...

பின்னர் சென்னையில் இருந்த ஆன்டன் பாலசிங்கத்துடன் பிரபாகரன் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டனர். பிரபாகரனுடன் ஜே.என். தீட்சித், அப்போதைய உளவுத்துறை இயக்குநர் எம்.கே. நாராயணன், இணை செயலர் குல்தீப் சகாத்வே, இலங்கைக்கான இந்திய தூதரக முதன்மை செயலர் பூரி உள்ளிட்டோர் இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக விவரித்தனர்.

மிரட்டிய தீட்சித்

மிரட்டிய தீட்சித்

ஆனால் இந்த விளக்கங்களில் பிரபாகரன் திருப்தி அடையவில்லை. இது இந்திய அதிகாரிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் உச்சகட்டமாக ஜே.என். தீட்சித், நீங்கள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கடி கொடுப்பதாக மிரட்டிப் பார்த்தார். ஜூலை 25-ந் தேதியும் பிரபாகரனுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பிரபாகரன் திருப்தி அடையவில்லை.

டெல்லியில் எம்ஜிஆர்

டெல்லியில் எம்ஜிஆர்

இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ராஜீவ்காந்தியை சந்திப்பதற்கு முன்னர் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசனை நடத்த விரும்பினார். இதையடுத்து முதல்வர் எம்ஜிஆரும் உணவுத்துறை அமைச்சராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும் ஜூலை 26-ல் பிரதமரின் சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர். எம்ஜிஆருடன் ஜே.என். தீட்சித் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. எம்ஜிஆர் முன்னிலையிலும் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

உண்ணாவிரத மிரட்டல்

உண்ணாவிரத மிரட்டல்

இந்த நாட்களில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தளபதிகளை சந்திக்க எவரையும் அனுமதிக்கவில்லை. அப்போதைய திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த வைகோவும் பிரபாகரனை சந்திக்க போராடினார். ஒருகட்டத்தில் தாம் உண்ணாவிரதம் இருக்க நேரிடும் என பிரபாகரன் மிரட்டினார் என்பதெல்லாம் வரலாற்று பக்கங்கள் பேசுகின்றன.

நள்ளிரவில் ராஜீவ் அழைப்பு

நள்ளிரவில் ராஜீவ் அழைப்பு

பின்னர் ஜூலை 26-ல் நள்ளிரவு நேரத்தில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் அழைத்த ராஜீவ்காந்தி இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்தார். அப்போது உடன் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், இந்திய- இலங்கை ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகவும், ராஜீவ்- பிரபாகரன் ஒப்பந்தம் ரகசியமாகவும் இருக்கும் என்றெல்லாம் கூறிப் பார்த்தார்.

சுதுமலை பிரகடனம்

சுதுமலை பிரகடனம்

வேறுவழியே இல்லாமல் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஏற்பதாக கையெழுத்திட்டுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். இதன்பின்னர்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க, 'எங்கள் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்' என்கிற சுதுமலை பிரகடனத்தை ஆகஸ்ட் 4-ந் தேதியன்று பிரபாகரன் வெளியிட்டார்.

இந்தியாவே இனி பொறுப்பு

இந்தியாவே இனி பொறுப்பு

சுதுமலை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரபாகரன், எம் மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

தமிழீழ தனியரசு

தமிழீழ தனியரசு

ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் என அறிவித்தார். இதன்பின்னரான இந்திய அரசின் நிலைப்பாடுகள்தான் இருதரப்பு உறவிலும் மிக மோசமான விரிசல்களை ஏற்படுத்தியது.

English summary
30 years ago LTTE Leader Prabhakaran was under house arrest in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X