குர்கானில் கொடூரம்... பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுபட்ட நிலையில் மாணவன் உடல்!
குர்கான் : குர்கான் அருகே பிரபல பள்ளியின் கழிவறையில் இருந்து குரல்வலை குத்தி கிழிக்கப்பட்ட நிலையில் 7 வயது சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டான்.
குர்கானின் சோஹ்னா சாலையில் பந்த்சியில் உள்ள ரையான் சர்வதேச பள்ளியில் இன்று காலை மாணவன் ஒருவன் கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை சக மாணவன் கண்டுள்ளான். இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் அந்த மாணவன் புகார் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தள்ளனர். அப்போது மாணவன் உடல் அருகே கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆனால் மாணவனின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகமோ, மாணவனின் பெற்றோரோ இது வரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. கழுத்தில் கத்திக் கீறல்களுடன் மாணவன் சடலம் கிடந்ததால் இது மாணவர்களை அதிகம் அச்சுறுத்தி வரும் ப்ளூவேல் விளையாட்டின் தாக்கமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் ப்ளூவேல் சேலஞ்ச் போல இது தெரியவில்லை என்றும் திட்டமிட்டே நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மிகக்கொடூரமான முறையில் 7 வயது மாணவன் மர்மமான முறையில் இறந்திருப்பது சக பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மாணவனின் மரணம் குறித்து போலீசார் இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.