சபரிமலையில் பரபரப்பு.. கோவிலுக்கு செல்ல முயன்ற 10 இளம் பெண்கள்.. போலீசால் தடுத்து நிறுத்தம்
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்கு முயற்சி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 7 இளம்பெண்கள் உட்பட 10 பேர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மண்டல மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை, திறக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம். ஆனால் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நிலுவையில் இருக்கும் காரணத்தால், சபரிமலைக்கு வரக்கூடிய இளம்வயது பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள மாநில அரசு கைவிரித்துவிட்டது.
கடந்த ஆண்டு ஐயப்பன் கோவிலுக்கு வருகை தந்த பெண்களை, வலதுசாரி அமைப்பினர் தடுத்து நிறுத்தி விரட்டி விட்ட, சம்பவத்தையடுத்து கேரள அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 36 வயதான, சுஜாதா உட்பட 7 இளம்பெண்கள் இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.

அவர்கள் நிலக்கல் பகுதியை தாண்டி பம்பை வரை வந்துவிட்டனர். இதன்பிறகு காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அடையாள அட்டைகளை வாங்கி சோதித்து பார்த்தபோது அனைவருக்குமே சுமார் 40 முதல் 45 வயதுக்குள் உள்ளே இருப்பது தெரியவந்தது.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடும் கன்னிச்சாமிங்களே... இதை ஃபாலே பண்ணுங்க
சபரிமலை மரபுப்படி 10 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகளும், 50 வயதுக்கு மேலே உள்ள மூதாட்டிகள் மட்டுமே ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியும். எனவே 7 பெண்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். அவர்கள் பம்பை பகுதியிலேயே காத்திருக்கின்றனர்.
அவர்களுடன் வந்த பிற வயது முதிர்ந்த பெண்கள், சபரிமலை சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர மேலும் 3 இளம் பெண்களும், பம்பைக்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முன்னதாக, நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தாவை அழைத்து, அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய கருத்துகளை, அரசு கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இருப்பினும் இளம்பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!