ஓயாத சகிப்புத்தன்மை விவகாரம்... குஜராத்தில் ஷாருக்கான் சூட்டிங்குக்கு எதிராக வெடித்த போராட்டம்!
பூஜ்-கட்ச்: இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் கட்ச் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகக் குறைந்து வருகிறது என்று அண்மையில் ஷாருக்கான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதனால் ஷாருக்கான் பாகிஸ்தானுக்கே போக வேண்டும் என்று வலியுறுத்தி இந்துத்துவா அமைப்புகள் போராட்டங்களை நடத்தியிருந்தன. இந்நிலையில் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஷாரூக்கின் புதிய திரைப்படத்துக்கான சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூஜ்- கட்ச்சில் இன்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். ஷாருக்கான் படங்களை தீயிட்டும் அவர்கள் எரித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் தங்கியுள்ள ஹோட்டல், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல் தலோக்கியாவின் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ரயீஸ் படத்தின் படப்பிடிப்புதான் குஜராத்தின் கட்ச் பகுதியில் நடைபெறுகிறது. 1980களின் நிழல் உலக தாதாவான குஜராத்தின் அப்துல் லத்தீப்பின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் இது.
இப்படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த மஹீரா கான், ஷாருக்கான் ஜோடியாக நடக்கிறார். இந்த படப்பிடிப்பு நடைபெறும் கட்ச் பகுதியும் இந்தியா- பாகிஸ்தான் எல்லை என்பது குறிப்பிடத்தக்கது.