For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை

By BBC News தமிழ்
|
திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை
Getty Images
திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை

இந்தியாவில் 23 வயதைக் கடந்த ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் அழுத்தம். 'திருமணம்' என்ற வார்த்தை.

"ஒரு பெண் என்னிக்கி இருந்தாலும், இன்னொரு வீட்டுக்கு போகப் போறவதான்", "திருமணம் ஆகாத பொண்ண இவ்ளோ நாள் வீட்டுல வெச்சுகறது நல்லதில்ல" போன்ற வசனங்கள் இன்றைய சூழ்நிலையிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

சில பெண்களுக்கு தனது 20களில் திருமணம் வேண்டாம் என்று தோன்றலாம். சாதிக்க நினைக்கலாம். அல்லது தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கலாம். அல்லது திருமணத்தில் விருப்பமே இல்லாமல்கூட இருக்கலாம். அப்படிப்பட்ட பெண்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் ஏராளம்.

இந்தியாவில் இளம் பெண்களுக்கு 23 அல்லது 25 வயது கடந்துவிட்டால் வீட்டில் திருமணம் என்ற பேச்சு தானாக வந்துவிடும். பெண்களுக்கு பெற்றோர் தரும் அழுத்தம். பெற்றோருக்கோ, இந்த சமூகம் தரும் அழுத்தம்.

"திருமணம் வேண்டாம்"

வீட்டில் திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன், "கல்யாணத்துக்கு என்ன அவசரம். இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்று கூறாத பெண்கள் குறைவுதான்.

இந்தியாவில் பெண்கள் திருமணம் என்றால் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறார்கள்?

பிரச்சனை திருமணம் அல்ல. யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்பதே.

காதலிக்கும், காதலித்து திருமணம் செய்யவிருக்கும் பெண்களைத் தவிர, மற்ற அனைவரிடமும், ஒரு விதமான பயமும், பதற்றமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்திய உளவியல் இதழில் (Indian Journal of Psychiatry) வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், திருமணம் செய்து கொண்ட ஆண்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், திருமணமான பெண்கள் அதிக மனச்சோர்வு (depression) அடைவதாகவும் ஆதாரங்கள் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோருக்கே அதிக உரிமை

பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதில், இந்தியாவை பொறுத்தவரை, மணமக்களைவிட பெற்றோர்களுக்கே உரிமை அதிகம் என்று நம்பப்படுகிறது. காதல் திருமணங்கள் நடந்தாலும், அதை சில பெற்றோர்கள் ஒப்புக் கொண்டாலும், பலர் பல காரணங்களால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

என்னை பெற்று வளர்த்தார்கள் என்பதற்காக, நான் எப்படி, யாருடன் வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் அளித்தது என்ற கேள்வி பல பெண்களின் மனதில் அமைதியாக வந்து போகிறது.

திருமணம்
Getty Images
திருமணம்

அப்படி யாரென்று தெரியாத ஒரு நபருடன் திருமணம் செய்து கொள்ள முடியாது, என் குடும்பமும் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இந்தியாவிற்கு வர மறுக்கும் ஒரு பெண்ணின் கதைதான் இது.

இந்தியாவிற்கு வர மாட்டேன்…

தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், மங்களூரு அருகே உள்ள சூரத்கல்லை சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம். பெற்றோரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்துவிட்டு மேற்படிப்புக்காக நார்வே நாட்டுக்கு சென்றார். போனவர் இந்தியாவிற்கு இன்றுவரை திரும்பவில்லை. திரும்பிவரும் யோசனையும் இல்லை என்கிறார் அவர். ஏன்?

அதை அவரே விவரிக்கிறார்.

மங்களூரு அருகே உள்ள தனியார் பல்கலைகழகத்தில் மேற்படிப்பு படித்து வந்தேன். அங்கு என் கல்லூரி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை.

சூரத்கல்லில் இருந்து என் பல்கலைக்கழகத்துக்கு சுமார் 50 கிலோ மீட்டர். போக ஒரு மணி நேரம், வர ஒரு மணி நேரமாகும். தினமும் பயணித்து வீட்டிற்கு வந்து படித்து, என் ப்ராஜெக்டுகளை செய்ய எனக்கு நேரம் மிகக் குறைவாகவே இருந்தது.

பயணமே என் பாதி சக்தியை எடுத்துக்கொண்டது. கல்லூரி அருகிலேயே வீடு எடுத்து தங்கி படிக்க என் பெற்றோர் அனுமதிக்கவில்லை. எனக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை.

என் குடும்பம் பழமைவாத அடிப்படை கொண்டது. அப்போதில் இருந்தும், அதற்கு முன்னிருந்தும் சரி திருமணம் செய்து கொள்ளும்படி என்னை அவர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை
Getty Images
திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை

நிறைய சாதிக்க வேண்டும், உலகில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்று என் மனம் நினைக்க, ஒரு பக்கம் திருமணம் என்ற வார்த்தையால் தாங்க முடியாத அழுத்தத்தை அனுபவித்து வந்தேன்.

அழுத்தம் என்ற சொல் சிறிதாக இருக்கலாம். ஆனால் பிடிக்காத ஒன்றை அல்லது அப்போதைக்கு என் வாழ்க்கைக்கு திருமணம் வேண்டாம் என்று நான் முடிவு செய்திருந்த நிலையில், அவர்கள் என்னை வற்புறுத்தியது எனக்கு மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியது.

திருமணம் என்றால் எனக்கு பயம் என்று கூற மாட்டேன். ஆனால் நாம் யாரை எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மற்றொருவர் முடிவு செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எனக்கு என்ன வேண்டும் என்று கேட்க என் வீட்டிலும் தயாராக இல்லை. இதைவிட்டு எப்படி வெளியேறுவது என்று யோசித்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு என் பல்கலைக்கழகம் மூலமாக எனக்கு வந்தது. போகும் போதே மீண்டும் இந்தியாவிற்கு வந்து விடக்கூடாது என்று முடிவெடுத்தே நான் சென்றேன்.

நார்வே நாட்டில் உள்ள சிறு கிராமம்தான் வோல்டா. 2016, ஜனவரி மாதம் 9ஆம் தேதி, என் பல்கலைகழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நண்பருடன் அங்கு சென்றேன். முதல் வெளிநாட்டு பயணம்.

வோல்டா, நார்வே
BBC
வோல்டா, நார்வே

நார்வேயில் உள்ள வோல்டா பல்கலைக்கழகத்தில் ஊடக தயாரிப்பு சம்மந்தப்பட்ட படிப்பை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு மிகவும் ஆர்வமுள்ள, பிடித்தமான துறை அது. என் வாழ்க்கையில் நான் எடுத்து மிகச்சிறந்த முடிவு இந்தியாவை விட்டு சென்றது.

நார்வேயில் படித்த அந்த ஆறு மாதங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், மீண்டும் இந்தியாவிற்கு செல்ல வேண்டும், என் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பு என்னை சற்று துயரப்படுத்தியது.

நான் திரும்பி வந்தவுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் முடிவு செய்து வைத்திருந்தனர். நான் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தனர்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை திருமணம் என்பது மட்டுமே செட்டில் ஆவது கிடையாது.

நார்வேயிலேயே தங்கி விட்டால், நான் என் மீது கவனம் செலுத்த முடியும் என்று நினைத்தேன். குறைந்தது நான் இங்கு சுதந்திரமாக இருக்க முடியும். வேலை கிடைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதெல்லாம் இரண்டாவதுதான்.

திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை
BBC
திருமணத்துக்கு பயந்து இந்தியா வர மறுக்கும் இளம்பெண்ணின் கதை

ஊடகத்துறையில் வேலை இந்தியாவிலும் கிடைக்கும். இங்குதான் பணி என்று கிடையாது. ஆனால், இந்தியாவிற்கு சென்றால் நான் நிறைய விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்.

நார்வேயில் என் படிப்புக்கான விசா 8 மாதங்களுக்கானதுதான். ஆனால், எனக்கு இந்தியா திரும்ப விருப்பமில்லை. நார்வேயில் நான் படித்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், நண்பர்களிடம் என் சூழ்நிலையை எடுத்து சொல்லி அங்கேயே தங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன்.

இந்தியா செல்ல வேண்டாம் என்று நான் எடுத்த முடிவு சரியா இல்லையா என்று யோசிக்கவில்லை. என்னுடன் வந்த நண்பர், அவர் செல்வதற்கான விமான டிக்கெட்டை எடுத்துவிட்டார். எனக்கோ பதற்றம் தொற்றிக் கொண்டது.

2016ல் மே மாதம் என் படிப்பு முடிந்தது. நான் அங்கேயே தங்கி வேலை தேடலாம் என்று முடிவெடுத்தேன்.

ஆனால், அதற்கான நடைமுறைகள் அவ்வளவு எளிதல்ல. நார்வே நாட்டு விதிகள் கண்டிப்பானது. எனக்கு அந்நாட்டு மொழி தெரியாது. என் போர்ட் ஃபோலியோவும் பெரிதாக இல்லை.

ஒரு செமஸ்டர் (6 மாதங்கள்) தங்கி படிக்க, 55,000 நார்வேஜியன் க்ரோனர்களை வங்கி இருப்பாக காண்பிக்க வேண்டும். அதாவது, இந்திய மதிப்பின் படி சுமார் 4.6 லட்சம் ரூபாய். இல்லையென்றால் அங்கு வேலை பார்ப்பதற்கான ஆவணங்கள் வேண்டும்.

ஆஸ்லோ, நார்வே
BBC
ஆஸ்லோ, நார்வே

அடிப்படை மொழியை தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமானது.

என் நண்பர்களின் உதவியுடன் அங்கிருந்த ஊடக மையம் ஒன்றில் புகைப்படக் கலைஞராக வேலை கிடைத்தது. மேலும், கேஃபிடேரியா ஒன்றில் பணியாளராகவும் பகுதி நேரத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஆவணங்களை வைத்து தொடர்ந்து வோல்டாவில் தங்குவதற்கான விசா கிடைத்தது.

நான் மீண்டும் இந்தியா வரப்போவதில்லை என்று என் பெற்றோரிடம் எப்படி சொல்லப் போகிறேன் என்று தெரியாமல் விழித்தேன். நான் இங்கு ப்ராஜெட் செய்கிறேன். அதனால் தற்போதைக்கு இந்தியா வரமாட்டேன் என்று பொய் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நான் இங்கு வேலை செய்கிறேன் என்றும் அதை வைத்து என் செலவுகளை சமாளித்துக் கொள்வேன் என்று கூறி வருகிறேன்.

ஒவ்வொரு முறையும் நான் அவர்களை தொடர்பு கொண்டு பேசும்போது, அவர்கள் கேட்கும் கேள்வி, "நீ எப்போ இந்தியாவுக்கு வர?" என்பதுதான். இரண்டரை வருடங்களுக்கு பிறகும் இன்று வரை அக்கேள்வி தொடர்கிறது.

ஆனால், நான் என் பெற்றோரை பிரிந்திருக்கிறேன் என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. அவர்களைப் பற்றி நினைக்காத நாளில்லை. அவர்கள்தான் என்னைப் படிக்க வைத்தார்கள். அவர்களால்தான் நான் இங்கு இருக்கிறேன்.

கடந்த ஆண்டு அவர்களை சந்திக்க இந்தியா சென்றேன். அப்போதுதான் தெரிந்தது அங்கு எதுவும் மாறவில்லை என்று. மீண்டும் அதே திருமணம் என்ற பேச்சு.

நான் அங்கு சென்ற இரண்டாவது நாள், எனக்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று கூறினர். பிறகு விரைவில் என் அண்ணணுக்கும் திருமணம் முடித்து விடலாம் என்றார்கள்.

எனக்கு திருமணம் வேண்டாம். மேலும் ஒரு வருட கால அவகாசம் வேண்டும் என்று கூறி மீண்டும் நார்வே வந்துவிட்டேன்.

பெர்கன்
BBC
பெர்கன்

எனக்கு திருமணமே வேண்டாம் என்று நான் கூறவில்லை. எனக்கும் திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு.

ஆனால், அது யாருடன் என்றுதான் எனக்கு பிரச்சினை. எனக்கு யாரென்று தெரியாத, என் பெற்றோர் கை காண்பிக்கும் நபரை என்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது.

அங்கு என் கருத்தை புரிந்துகொள்ள ஆளில்லை. எனக்கு ஒருவரை பிடிக்குமென்றால் அது குறித்து பேசக்கூட எனக்கு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. என் வாழ்க்கை மிகக் கடினமாகத் தோன்றியது.

அதிலிருந்து வெளிவர நான் நார்வேயில் இருப்பதுதான் சரி. சில சமயங்களில் அதிக பொய் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் பெற்றோரிடம் நான் பொய் சொல்லியது போல, யாரிடமும் இவ்வளவு பொய் சொல்லியதில்லை. இதற்கு எனது சூழ்நிலைதான் காரணம்.

என் பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்ததால், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? எப்போதும் இங்கு குடும்பம் மற்றும் சமூகம்தான் முன்னிறுத்தப்படுகிறது. மனிதர்கள் இல்லை.

இந்தியாவில் அனைத்து குடும்பங்களும் பெற்றோரும் இது போன்றுதான் என்று நான் சொல்லவில்லை. குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ அதை செய்ய ஆதரவு அளிக்கும் பல பெற்றோர்களும் இங்கு உண்டு.

ஆனால் இந்தியாவில் பல பெண்களுக்கு சுதந்திரம் என்றாலோ, சொந்தக் காலில் நிற்பது என்றாலோ என்னவென்று கூட தெரியாது.

"ஐ மிஸ் இந்தியா". என் நாட்டின் உணவு, பருவ மழை, கதகதப்பு என அனைத்தையும் பிரிந்திருப்பது வருத்தமாக உள்ளது. இதையெல்லாம் மிஸ் பண்ணுவதால், நான் அங்கு இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.

எதிர்காலம் குறித்து எனக்கு எந்த திட்டமிடுதலும் இல்லை. நாம் திட்டமிட்டாலும் அதன்படி எதுவும் நடக்கப்போவது இல்லை. இந்த நிமிடத்தை முழுமையாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன பிடிக்குமோ அதைச் செய்ய வேண்டும். இன்றைக்காக வாழ வேண்டும். நாளை பற்றிய யோசனை இல்லை.

ஆனால், இந்தியா வந்து வாழ வேண்டும் என்ற ஆசையும் அவ்வப்போது தலை தூக்கும்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
என்னை பெற்று வளர்த்தார்கள் என்பதற்காக, நான் எப்படி, யாருடன் வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் அளித்தது என்ற கேள்வி பல பெண்களின் மனதில் அமைதியாக வந்து போகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X