ரூ.57 திருடியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட தபால்காரர்: 29 ஆண்டுகள் கழித்து நிரபராதி என தீர்ப்பு
கான்பூர்: ரூ. 57.60 திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட தபால்காரர் குற்றமற்றவர் என்று 29 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஹர்ஜிந்தர் நகர் பகுதி தபால் நிலையத்தில் வேலை பார்த்தவர் உமாகாந்த் மிஸ்ரா. கடந்த 1984ம் ஆண்டு அவர் ரூ.697.60 மணி ஆர்டர் பணத்தை கொடுக்கச் சென்றார். உமாகாந்த ரூ.300 ரொக்கத்தை உரியவர்களிடம் கொடுத்துவிட்டு மீத பணத்தை மூத்த அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் ரூ.57.60 திருடிவிட்டதாக கடந்த 1984ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தாபல் துறை அவரை சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த 29 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் உமாகாந்த் குற்றமற்றவர் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பத்திரிக்கையாளர்கள் சந்தித்தபோது அவர் அழுதுவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டேன். சுமார் 26 ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன். என்ன சொல்வது செய்வது என்றே தெரியவில்லை என்றார்.