டயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் போபாலில் அவசர தரையிறக்கம், பெரும் விபத்து தவிர்ப்பு
போபால்: டெல்லியில் இருந்து போபால் வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று 100 பயணிகளுடன் இன்று காலை டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு வந்தது. போபால் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் டயர் ஒன்று வெடித்தது.

இதையடுத்து விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி வரை பல்வேறு நிறுவனங்களின் 17 விமானங்களின் டயர்கள் வெடித்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா ராஜ்யசபாவில் கடந்த மாதம் தெரிவித்தார்.
2012ம் ஆண்டில் மூன்று முறையும், 2013ம் ஆண்டில் 4 முறையும், 2014ம் ஆண்டில் 7 முறையும் விமானங்களின் டயர்கள் வெடித்துள்ளன. 2012ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் டயர்கள் 5 முறை வெடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.