For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சன் டி.வி. இடம், கலாநிதியின் ரூ100 கோடி டெபாசிட் உள்ளிட்ட 11 சொத்துகள் முடக்கம் இதற்குதான்...

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் சன். டிவி. இடம், கலாநிதி மாறனின் ரூ100 கோடி டெபாசிட், தயாநிதி மாறனின் டெபாசிட் என ரூ742.54 கோடி மதிப்பிலான 11 சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விரைவில் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் 2011-இல் புகார் அளித்தார்.

Aircel-Maxis deal: Enforcement Directorate attaches Rs 742 crore assets of Marans

இந்த வழக்கில் 2011ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதிதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன், அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும், சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (மொரீஷியஸ்) அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் (பிரிட்டன்) ஆகிய நான்கு நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது.

ஏர்செல் நிறுவனப் பங்குகளை வாங்கியதற்கு கைமாறாக, கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் பிரிட்டன், மொரீஷியஸ் நாடுகளில் உள்ள தனது துணை நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ.549 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. அதே பிரிட்டன் நிறுவனம், மொரீஷியஸ் நாட்டில் உள்ள தனது துணை நிறுவனம், ஒரு மென்பொருள் நிறுவனம் ஆகியவற்றின் மூலமும் சன் டைரக்ட் நிறுவனத்தில் கூடுதலாக சுமார் ரூ.193 கோடியை முதலீடு செய்தது.

ஆனால் இந்த முதலீடுகளுக்கு, மத்திய நிதித் துறையின் கீழ் உள்ள அன்னிய முதலீடுகள் மேம்பாட்டு வாரியம் விதிகளை மீறி அனுமதி அளித்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால் அன்னிய செலாவணி மோசடி குற்றப் பிரிவு 3, இந்திய குற்றவியல் சட்டம் 120 பி பிரிவு 13(2), 13 (1) (டி) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7 ,12 ஆகியவற்றின் கீழ் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள கலாநிதி மனைவி காவேரி கலாநிதி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்துடன் தொடர்புடைய மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்துகளில் ரூ.742.54 கோடி அளவுக்கான சொத்துகளை நேற்று முடக்கி வைத்து மத்திய அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முடக்கப்பட்ட சொத்துகள் விவரம்

1) தயாநிதி மாறன் மற்றும் பலரின் நிரந்தர வைப்புத் தொகை ரூ.7.47 கோடி

2) சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை ரூ31.34 கோடி

3) செளத் ஏசியா எஃப்.எம் (எஃப்.எம் ரேடியோ) நிறுவனத்தின் நிரந்தர வைப்புத் தொகை ரூ6.19 கோடி

4) செளத் ஏசியா எஃப்.எம் நிறுவனத்தின் பரஸ்ர நிதி முதலீடு ரூ 15.14 கோடி

5) கலாநிதி மாறனின் நிரந்தர டெபாசிட் தொகை ரூ100 கோடி

6) கலாநிதி மாறன் பரஸ்பர நிதி முதலீடு - ரூ 2.78 கோடி

7) கலாநிதி மனைவி காவேரி கலாநிதியின் நிரந்தர வைப்பு நிதி- ரூ1.30 கோடி

8) காவேரி கலாநிதியின் பரஸ்பர நிதி முதலீடு ரூ1.78 கோடி

9) கல் கம்யூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலம் மற்றும் கட்டிடம் - ரூ175.55 கோடி

10) சன் நெட்வொர்க் குழுமத்தின் கட்டிடம் (சன் டி.வி. இடம்) மற்றும் காலி இடம் - ரூ266 கோடி

11) சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தின் கலாநிதி மாறனின் பங்குகள் - ரூ139 கோடி

இதில் சன் டைரக்ட் (டி.டி.ஹெச்) நிறுவனத்தில்தான் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதன் பங்குதாரர்களாக இருப்பவர்கள் கலாநிதி மற்றும் அவரது மனைவி காவேரி. இருவரும் 80% பங்குகளை வைத்துள்ளனர்.

சன் குழுமத்துக்குச் சொந்தமான எஃப்.எம். நிறுவனத்தில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்துக்கு 60%, ஏ.ஹெச். மல்டிசாப்ட் நிறுவனத்துக்கு 20%, மொரீசியசின் செளத் ஏசியா மல்டிமீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு 20% பங்குகள் உள்ளன.

சன் டிவி நெட்வொர்க்கில் கலாநிதி மாறனுக்கு 75% பங்குகள் உள்ளன. கல் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் கலாநிதி மாறனுக்கு 90%; காவேரி கலாநிதிக்கு 10% பங்குகள் உள்ளன.

தயாநிதி மாறனால் ஏர்செல் மிரட்டப்பட்டு அதை வாங்கிய மேக்சிஸ் நிறுவனமானது, மொரீசியஸ் உள்ள மல்டிசாப்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றின் மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தது;

இதில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளது என்பதுதான் அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு. இதனடிப்படையிலேயே தயாநிதி, கலாநிதி மாறனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

English summary
In a fresh trouble for former Union telecom minister and DMK leader Dayanidhi Maran and his brother Kalanidhi, the Enforcement Directorate (ED) on Wednesday attached properties worthRs 742 crore in connection with its probe into the 2G scam investigations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X