இனி 3 இல்லை! அமராவதி மட்டும்தான் ஆந்திராவின் தலைநகர்! "நாளைய முதல்வர்" சந்திரபாபு நாயுடு அதிரடி
அமராவதி: ஆந்திர மாநிலத்திற்கு தலைநகரம் என்றால் அது அமராவதிதான் என்றும் இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் முதல்வராக நாளை பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு இதை அறிவித்துள்ளார். இனி 3 தலைநகரங்கள் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் ஆகிய 3 தலைநகரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதை தற்போது முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு மாற்றியுள்ளார்.
ஆந்திரா சட்டசபைக்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. பாஜக, ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை சந்தித்தது. அதில் 135 இடங்களில் தெலுங்கு சேதம் மட்டும் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளது.
அது போல் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 இடங்களில் வென்று ஆட்சியை இழந்தது. நடிகையும் சுற்றுலா துறை அமைச்சருமாக இருந்த ரோஜா நகரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் ஆந்திராவின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார்.
இதற்காக விஜயவாடாவில் இன்று தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் சட்டசபை தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக பதவியேற்க சட்டசபை தலைவர் பதவி முக்கியம். ஆளுநரின் அழைப்பின்படி நாளை முதல்வராக பதவியேற்கிறார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. இந்த நிலையில் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமராவதிதான் நம் தலைநகர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுப்போம்.
ஆந்திராவின் வணிக தலைநகராக விசாகப்பட்டினம் அமையும். 3 தலைநகரை ஏற்படுத்தியதாக மக்களுடன் விளையாட கூடாது. விசாகப்பட்டினத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ராயலசீமாவையும் முன்னேற்றுவோம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக அளவில் வென்றது. இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3 தலைநகரங்களை ஜெகன்மோகன் ரெட்டி உருவாக்கினார். அதில் விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகர் என்றும் அமராவதி சட்டசபை தலைநகரம் என்றும் கர்னூல் நீதித் துறை தலைநகரம் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமராவதியை மாநில தலைநகராக உயர்த்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி அரசு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் அங்கு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆந்திரா சட்டசபை தேர்தலின்போது அமராவதியின் வளர்ச்சியை மீட்டெடுப்பேன் என நாயுடு உறுதியளித்திருந்தார்.
தேசிய அரசியலில் கிங் மேக்கரான சந்திரபாபு நாயுடு, கடந்த ஆண்டு ரூ 300 கோடி ஊழல் தொடர்பாக ஆந்திர மாநில சிஐடி போலீஸார் கைது செய்தனர். 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் அதே ஆண்டு அக்டோபர் மாதம் வெளியே வந்தார். இந்த ஒரு கைதுதான் ஜெகன்மோகன் ரெட்டியின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications