For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி" - தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது?

By BBC News தமிழ்
|

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

அகில இந்திய அளவில் மூத்த தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. கிட்டத்தட்ட அவரது வயதை ஒத்த வாஜ்பாயும் வியாழக்கிழமை நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். இது மனதிற்கு பெரும் வேதனையை தருகிறது.

பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயி ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பேசக்கூடியவர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப் பற்றி சொல்லும் ஆவணங்களாக விளங்குகின்றன.

அயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரமும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தன. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறவர்கள்கூட வாஜ்பாயி அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள். Right Man in the Wrong Party (தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர்) என்று பலர் இவரைச் சொல்வதுண்டு.

தன் இளமைக் காலத்தில் இவரும் எல்.கே. அத்வானியும் தில்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு, அரசியல் பணிகளை மேற்கொண்டார்கள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத் துறை அமைச்சராக வாஜ்பாய் இருந்தார். அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீரமைத்தவர் அவர்.

1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி "எங்கள் துர்கா தேவியே" என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு அமைந்தன.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்
BBC
ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

தில்லியில் வைகோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன், எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாயி.

ஆனால், வைகோ "வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பாயி, " ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வர்த்தகத்துறை அமைச்சராக இல்லையா..." என்றபோது, வை.கோ. வேண்டவே.. வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். ஒரு கூட்டணிக் கட்சியை ஒரு பிரதமர் எப்படி மதித்தார் என்று கண்கூடாக அப்போது பார்த்தேன்.

வாஜ்பாய் அவர்களது ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் மாறுதல் குறித்த நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு "ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன்.

பின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், பொதுத்தேர்தல் வந்தது. இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறு விஷயம்.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்
BBC
ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

கடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ. நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைக்கு பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வருகை தந்திருந்தபோது, விமான நிலையத்தில் வைகோவும் கலைஞரும் சந்தித்தார்கள். 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் கலைஞர் அவர்களை அன்றைக்குத்தான் சந்தித்தார்.

பிரதமர் வாஜ்பாயியின் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரானார். அப்போது சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தான் எழுதிய கடிதத்தை வைகோ என்னிடமிருந்து வாங்கி பிரதமரிடம் "சேது சமுத்திர கேனால்...." என்று சொல்லி கொடுக்க முயற்சித்தார். அப்போது தன் கைகளைக் காட்டி, "கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே... இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்" என வைகோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார் வாஜ்பாயி.

திட்டமிட்டவாறு அன்று மாலை எழுச்சி மிகுந்த கூட்டம் நடைபெற்றது. கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தன. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பாய் இதைப் பார்த்தவுடன் வைகோவிடம் "சாப்பிடலாமா" என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின், சமையல்காரரைப் பார்த்து "நன்றாக இருந்தது" என்று சந்தோஷத்தோடு பாராட்டவும் செய்தார்.

இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாஷ்சிங் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் "நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்" என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்
BBC
ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பாய்

ஒரு முறை தீப்பட்டித் தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வைகோ அவர்கள் சென்றிருந்தார். அப்போது அவர் சிவகாசி தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.

பிரதிநிதிகளை சந்திக்கவந்த வாஜ்பாய் அவர்கள் அனைவரோடும் தேநீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருந்த நிலையிலும் இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். இவர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் .

சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக் குழு அமைத்தது, நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற தங்க நாற்கரச் சாலைகளை உருவாக்கியது போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர்.

1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயியும் கலந்து கொண்டார். அப்போது அவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹுகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.

ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி
Getty Images
ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன். அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பாய் "இட்லி, தோசை சாப்பிடலாம்" என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் "சாப்பிடலாமே" என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.

காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், "எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி" என்றார் வாஜ்பாய். மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பாயிடமும் பஹுகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.

வாஜ்பாய் அவர்கள் தில்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொருத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.

https://www.youtube.com/watch?v=v0P4M-3_Vkg

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
'தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் வாஜ்பாயி. ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை அவர் மேற்கொண்டார்'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X