
இம்ரான் கானை கொல்ல சதி! உளவு துறை கொடுத்த பரபர ரிப்போர்ட்.. ஹை அலர்டில் ராணுவம்.. என்னாச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்து வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் இருந்து வந்தது. அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முயன்றன.
இதில் இம்ரான் கானின் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து கொண்டதால், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்தியாவை பாருங்க.. பெட்ரோல், டீசல் விலை எப்படி குறைஞ்சிருக்கு.. பாகிஸ்தான் அரசை வறுத்த இம்ரான் கான்

கொலை செய்ய சதி
இருந்த போதிலும், தன்னை பதவியில் இருந்து நீக்கச் சர்வதேச சதி இருந்ததாக அமெரிக்காவை மறைமுகமாகச் சாடினார். மேலும், ஷெபாஸ் ஷெரீப்பிற்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றையும் அவர் நடத்தினார். அதாவது பிரதமர் பதவியில் இல்லாமல் போனாலும் தொடர்ந்து ஆக்டிவ் அரசியலில் இருந்து வந்தார். இதற்கிடையே இம்ரான் கானை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இம்ரான் கான்
இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மக்கள் கூட்டம் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், "இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள வீட்டிற்கு இம்ரான் கான் விரைவில் வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், இம்ரான் கான் தரப்பில் இருந்து எங்களுக்கு எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

படைகள் குவிப்பு
அவரது குடியிருப்பு பகுதியில் சிறப்பு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எந்தக் கூட்டம் கூடவும் அங்கு அனுமதி இல்லை. இம்ரான் கானுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவோம். மேலும் இம்ரான் கானின் பாதுகாப்புக் குழுக்களிடமிருந்தும் பரஸ்பர ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறோம்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

தாக்குதல்
இது தொடர்பாக இம்ரான் கானின் மருமகன் ஹசன் நியாசி கூறுகையில், "இம்ரான் கானுக்கு எதுவும் நடந்தால், அது பாகிஸ்தான் மீதான தாக்குதலாகவே கருதப்படும். இதற்குப் பதில் ஆக்ரோஷமாக இருக்கும்" என்றார். கடந்த ஏப்ரல் மாதம் முதலே இம்ரான் கானை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகவும் இதை அந்நாட்டின் பாதுகாப்பு முகமைகள் கண்டுபிடித்துள்ளதாகவும் ஃபவாத் சவுத்ரி கூறியிருந்தார்.

பாதுகாப்பு
அதேபோல இம்ரான் கான் கூட்டணி கட்சிகளும் இதே கருத்தைத் தான் முன்வைத்துள்ளனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஆனால் இதுவரை அவர் எப்படியோ தப்பித்துக்கொண்டார் என்றும் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்தனர். மேலும், பேரணிகளில் குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்ட போதிலும், 'அல்லாஹ் விரும்பும் போது எனது மரணம் வரும்' என்று கூறி இம்ரான் கானே அதை மறுத்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.