For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா முழுவதும் வியாதியாக நீடித்து வரும் சமாதி அரசியலுக்குச் சமாதி கட்டுவோம்!

இந்தியா முழுவதும் வியாதியாக் நீடித்து வரும் சமாதி அரசியலுக்கு சமாதி கட்ட வேண்டிய தருணம் இது.

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

தில்லி பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது அமைச்சரவையில் இருந்த குடிநீர் விநியோகத் துறை அமைச்சர் கபில் மிஸ்ராவை நீக்கிவிட்டார். அதையடுத்து, கபில் மிஸ்ரா மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறியுள்ளார்.

மறைந்த தலைவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலோ, எரியூட்டப்பட்ட இடத்திலோ, அல்லது அவரது அஸ்தி வைக்கப்படும் இடத்திலோ அவருக்கு நினைவிடம் அமைப்பது நமது மரபு. தில்லி, ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் உடல் எரியூட்டப்பட்ட இடம் நினைவிடமாக மாற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

Article on new trend of politics

அதைப் போல் பெரியார் நல்லடக்கம் செய்யப்பட்ட பெரியார் திடலில் உள்ள பகுதி, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்ட மெரீனா கடற்கரைப் பகுதிகள், காமராஜர், இராஜாஜி, பக்தவத்சலம் ஆகிய தேசிய தலைவர்களின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள கிண்டியில் உள்ள பகுதிகள் அவரவர் நினைவிடங்களாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக ஓர் அரசு பதவியேற்ற உடனே அந்த ஆளும் கட்சியின் தலைவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது மரபாக இருக்கிறது. இது தேசிய அளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகாத்மா காந்தி எரியூட்டப்பட்ட இடத்திற்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டுத் தலைவர்களும் அவர்களது பயணத்தின்போது வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அத்துடன், தங்களது தலைவர்களின் நினைவுதினங்களிலும் அந்தந்த கட்சியினர் அந்த தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதும் வழக்கம்.

நினைவிடங்கள் இவ்வாறு அஞ்சலி செலுத்துவதற்காகவே அமைந்தாலும், அந்த இடங்களைத் தங்களது புதிய அரசியல் பயணத்துக்குத் தொடக்கமாகக் கடைப்பிடிப்பது தமிழகத்தில் புதியதல்ல.

1987ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்த பிறகு, கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மையார் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணியும் இயங்கத் தொடங்கின. இருந்தாலும் பல தலைவர்கள் எம்ஜிஆரை மட்டுமே தங்களது தலைவராக அறிவித்தனர்.

Article on new trend of politics

அந்த நேரத்தில் பிளவுபட்ட அதிமுகவின் ஓர் அணியின் தலைவராக வி. என். ஜானகி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னொரு அணியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டார்.

எச்.வி. ஹண்டே போன்ற சில தலைவர்கள் இரு தலைக் கொள்ளி எறும்பைப் போல் இருந்தனர். கட்சியின் தலைமையகம், பொதுக்குழு, செயற்குழு ஆகியவை முறைப்படி ஜானகி ஆதரவாளர்களிடமே அப்போது இருந்தது.

திடீரென்று ஒரு நாள் கட்சியின் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அப்போது, "எனக்கு ஒரே தலைவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். அவர் தொடங்கிய அண்ணா திமுக இயக்கத்தில் தலைவர் என்ற பதவி கிடையாது. அவ்வாறு வி.என். ஜானகி அம்மையாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்க முடியாது. எனவே, கட்சிப் பதவியிலிருந்து விலகுகிறேன்" என்றார். தொடர்ந்து, "என் ராஜிநாமா கடிதத்தை எனது தலைவரான எம்ஜிஆரிடம்தான் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், அதை புரட்சித் தலைவரின் சமாதியில் வைக்கிறேன்" என்று அறிவித்தார்.

Article on new trend of politics

ஆனால், ஓரிரு தினங்களில் அவர் ஜெயலலிதா தலைமையிலான அணியில் இணைந்தார். அத்துடன் அவரது சமாதி அரசியல் சில தினங்களிலேயே முடிந்துவிட்டது.

தமிழகத்தில்தான் சமாதி அரசியல் நடக்கும் என்று கூற முடியாது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்த என்.டி. ராமாராவ் தனது 70 வயதில் லட்சுமி சிவ பார்வதி என்ற பேராசிரியைத் திருமணம் செய்துகொண்டார். இது அவரது குடும்பத்தில் பெரிய புயலைக் கிளப்பியது. என்.டி.ஆரின் குடும்பத்தினர் அதைக் கடுமையாக ஆட்சேபித்தனர். லட்சுமி சிவபார்வதிக்கு குடும்பத்திலோ, அரசியலிலோ இடமளிக்கவே கூடாது என்று உறுதியாக இருந்தனர்.

என்டிஆர் இருந்தபோதே அவரது கட்சி அரசியல், குடும்பம் ஆகிய இரண்டிலும் லட்சுமி சிவபார்வதிக்கு இடம் தரக் கூடாது என்று குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர்.

இதனிடையில், முதலமைச்சர் பதவியை இழந்தார். சில மாதங்களில் அதாவது 1996ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி என்டிஆர் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் பஞ்சாரா ஹில்ஸ் என்ற இடத்தில் எரியூட்டப்பட்டது. அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் லட்சுமி சிவ பார்வதி உண்ணாவிரதம் இருந்தார்.

என்டிஆரின் அரசியல் கட்சியிலும் குடும்பத்திலும் தனக்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் போராடினார்.

ஆனால், அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் இறுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். எனினும், அரசியலிலோ என்டிஆர் குடும்பத்திலோ அவரால் இணையவே முடியாமல் போனது.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் சமாதி அரசியல் அரங்கேறியது தமிழகத்தில்தான்.

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, சில மணி நேரத்திலேயே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். அதையடுத்து, ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுவரையில் எல்லாமே சுமுகமாகவே நடந்துகொண்டிருந்தது. ஆனால், திடீரென்று சசிகலாவை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் ஓ.பி.எஸ். தலைமையிலாந அமைச்சர்களே குரல் எழுப்பியது ஓ.பி.எஸ்ஸுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது. எனினும், கடைசியில் அவர் பதவியிலிருந்து இறங்கினார். அதையடுத்து, அவரது அரசியல் நிலைப்பாடுகளில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.

Article on new trend of politics

திடீரென்று கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி அவர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அங்கே சுமார் முக்கால் மணி நேரம் தியானம் செய்தார். அவரது செயல் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தியானம் முடிந்து நிருபர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்., "நான் வலுக்கட்டாயமாக முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நிர்பந்திக்கப்பட்டேன். பல வகையிலும் அவமானப்படுத்தப்பட்டேன்" என்று கொட்டித் தீர்த்தார். அதையடுத்து அவர் சசிகலா குடும்பத்தினருக்கு பெரிய எதிர்ப்பை ஏற்படுத்திவிட்டார்.

இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அதில், சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் நபராகக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது.

Article on new trend of politics

சிறைத் தண்டனையை அனுபவிக்க, பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையும் கெடு வந்தபோது, சென்னையிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலா திடீரென்று ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று வணங்கினார். கண்ணில் நீர் வழிய அவர் மூன்று முறை ஏதோ கூறி சமாதியின் மீது அடித்து சூளுரைத்தார்.

தில்லி ராஜ்காட் பகுதியில் கபில் மிஸ்ரா சபதம் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால், அங்கே நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, தன்னைப் பதவியிலிருந்து இறக்கிய அரவிந்த் கேஜ்ரிவால் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றார் என்று அரசியல் வெடிகுண்டை வீசியிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு தில்லி அரசியலில் பல விறுவிறுப்பான காட்சிகளுக்குத் தொடக்கமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இனிமேல், அரசியல் தலைவர்களின சமாதிகள், நினைவிடங்கள் அரசியல் களங்களில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Columnist Paa Krishnan sees a new trend of politics is emerging by victim politicians’ stroke in Memorials of leaders to draw the attention. Kapil Mishra’s press meet at Gandhi’s Samadhi and OPS open address in Jayalalitha’s samathi create a new trend, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X