
‘அண்ணாமலை’ படத்தின் அசாம் ரீமேக்.. பாதம் அளவு தண்ணீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர்
கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற பாஜக அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா, பாதம் அளவு தேங்கிக்கிடந்த தண்ணீரில் படகில் சென்றது நகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டித்தீர்த்த அதிதீவிர மழை காரணமாக 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கலின்போது பங்கேற்ற திமுக எம்.பிக்கள்.. இவங்களும் இருக்காங்களா?
பிரமபுத்திரா மற்றும் பராத் நதிகளில் தண்ணீர் நிரம்பி கரை உடைந்து நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உல்ளனர்.

கடும் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டும் 45.34 லட்சம் மக்கள் தத்தளித்து வருவதாகவும், கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கும் பார்பட்டா மாவட்டத்தில் 10.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

126 பேர் உயிரிழப்பு
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. கனமழை வெள்ளம் சூழ்ந்ததால் அசாம் மாநிலத்தில் 74,706 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. நேற்றைய தகவலின் படி கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 17 பேர் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களாவர்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ஆனால், அசாமில் ஆளும் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிடவில்லை என்றும், அசாம் அரசு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களை உபசரிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

படகில் சென்ற பாஜக அமைச்சர்
இந்த நிலையில், அசாம் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா என்பவர், பராக் பல்லத்தாக்கு பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்றுள்ளார். வெள்ளம் வடிந்து பாதம் அளவு தேங்கிய நீரில் நடந்து செல்லாமல் படகில் அவர் சென்றிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அண்ணாமலையின் படகு சவாரி
இதற்கு முன் சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனுடன் பார்வையிட சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முழங்கால் அளவுக்கும் குறைவான தண்ணீரில் படகில் சென்றதும், அங்கு மக்களை சந்தித்து படப்பிடிப்பு நடத்தியதும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.