சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் திடீர் கைது! காரணம் என்ன? குஜராத்தில் பரபர சம்பவம்
காந்திநகர்: குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி நேற்று நள்ளிரவில் திடீரென்று அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து 2 ட்வீ ட் டெலிட் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் உள்ளார்.
இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது.
அடபாவமே... காங்கிரஸ் வேட்பாளரை முந்திய நோட்டா.... பீகார் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் சம்பவம்

திடீர் கைது
இவர் தொடர்ச்சியாக பாஜகவின் செயல்களை கண்டித்து வருகிறார். மேலும் தலித் மக்களின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் ஜிக்னேஷ் மேவானி நேற்று இரவு 11.30 மணியளவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் இவர் இருந்தார். அப்போது அங்கு வந்த அசாம் போலீசார் திடீரென அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.

வழக்கு என்ன
ஜிக்னேஷ் மேவானி எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்த எந்த விவரங்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜிக்னேஷ் மேவானியுடன் இருந்தவர்கள் கூறுகையில், ‛‛கைது நடவடிக்கை எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. எப்ஐஆர் நகலையும் காண்பிக்கவில்லை. அசாமில் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறி அவரை அழைத்து சென்றனர்'' என்றனர்.

2 ட்வீ ட் டெலிட்
பாலன்பூரில் இருந்து ஜிக்னேஷ் மேவானியை அகமதாபாத் அழைத்து சென்ற அசாம் போலீசார் இன்று கவுகாத்திக்கு அழைத்து செல்கின்றனர். இருப்பினும் அவர் கைது செய்தற்கான காரணம் என்னவென்று இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக செய்திருந்த ட்விட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பதிவு தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளது.

மோடியின் பயணத்தில் கைது
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக குஜராத் சென்றுள்ளார். ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் தான் ஜிக்னேஷ் மேவானியின் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யார் இந்த ஜிக்னேஷ் மேவானி
இந்த ஆண்டு இறுதயில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் பாஜகவுக்கு சவாலாக உள்ள நபர்களில் ஒருவர் தான் இந்த ஜிக்னேஷ் மேவானி. ஊனாவில் தலித் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இவர் நடத்திய பேரணியில் எதிர்பார்த்ததை விட ஏராளமானவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கத்தது.