For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேகதாது, கலசா பண்டூரி திட்ட விவகாரம்: தமிழகம், கோவாவுக்கு எதிராக கர்நாடகாவில் பந்த்- பொதுமக்கள் அவதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு; கர்நாடகாவின் மேகதாது அணை மற்றும் கலசா- பண்டூரி நீர்ப்பாசனத் திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் தமிழக, கோவா அரசுகளைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் காரணமாக காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டதோடு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கியதால் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதேபோல கோவா மாநிலத்தில் பாயும் மகதாயி ஆற்றில் கலசா- பண்டூரி என்ற இடத்தில் கர்நாடகா கால்வாய் அமைக்க கோவா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபி கடலில் கலக்கிறது மகதாயி (கோவாவில் மான்டோவி நதி என பெயர்) நதி. இதில் கலசா-பண்டூரி என கால்வாய்கள் அமைத்து, சுமார் 7.56 டிஎம்சி தண்ணீரை ஹூப்ளி, பெல்காம் போன்ற வட கர்நாடகா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு கோவா அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

1008 அமைப்புகள் ஆதரவு

1008 அமைப்புகள் ஆதரவு

மேகதாது மற்றும் கலசா பண்டூரி நீர்ப்பாசனத் திட்டங்களை எதிர்க்கும் தமிழகம் மற்றும் கோவா மாநில அரசுகளைக் கண்டித்து இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த பந்த்துக்கு 1080 கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

அரசு ஊழியர்கள் ஆதரவு

அரசு ஊழியர்கள் ஆதரவு

மேலும் இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசு ஊழியர்கள் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தால் பெங்களூரு,மைசூரு, ஹூப்ளி, பெலகாவி உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. அனைத்து இடங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பேரணிகள், போராட்டங்கள்

பேரணிகள், போராட்டங்கள்

கர்நாடகாவின் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி கிடந்தன. பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி , தார்வாட், தும்கூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் , ரயில் மறியல், கறுப்புக்கொடி ஏற்றம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர் . பல்லாரி வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டன. பள்ளிகள் அடைக்கப்பட்டன.

பேருந்து மீது கல்வீச்சு

பேருந்து மீது கல்வீச்சு

பெங்களூருவில் தனியார் பேருந்துகள் சில இயக்கப்பட்டன. இதனால் போராட்டக்காரர்கள் கலாசிபாளையம் என்ற பகுதியில் தனியார் பேருந்து மீது கல்வீசியதில் டிரைவர் காயமடைந்தார். போலீசார் உடனடியாக அங்கு சென்று போராட்டக்காரர்களை விரட்டினர்.

வாட்டாள் நாகராஜ்

வாட்டாள் நாகராஜ்

இந்த முழு அடைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், கர்நாடகாவில் வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் பாசனத்துக்கு நீரில்லாமல் பயிர்கள் சருகாகி கொண்டிருக்கின்றன. பெங்களூரு,மைசூரு, ஹூப்ளி உள்ளிட்ட பல இடங்களில் குடிக்க நீரில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை

கடும் வறட்சியின் காரணமாக இரு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தென் கர்நாடகாவின் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்காக மேகேதாட்டுவில் கர்நாடக அரசு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. வட கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக கலசா- பண்டூரி திட்டத்தை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது. கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக நிறைவேற்றப்படும் திட்டங்களை தமிழக அரசும் கோவா அரசும் அரசியல் உள் நோக்கத்துடன் எதிர்க்கின்றன.

கர்நாடகாவின் நலன்

கர்நாடகாவின் நலன்

வீணாக கடலில் கலக்கும் காவிரி, மகதாயி ஆகிய நதிகளின் நீரை கன்னட மக்கள் குடிநீராக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது. எக்காரணம் கொண்டும் இந்த திட்டத்தை கால தாமதம் செய்யாமல் மத்திய அரசும், மாநில அரசும் நிறைவேற்ற வேண்டும். கர்நாடகாவின் நலனை கெடுக்க முயற்சிக்கும் தமிழக, கோவா அரசுகளை கண்டித்து கன்னட அமைப்புகளின் சார்பாக இன்று முழு அடைப்பு நடை பெறுகிறது என்றார்.

இந்த பிரச்னையில் அரசியல் கட்சியினர் யாருக்கும் அக்கறை இல்லை. இதனை யாரும் மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை . பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் அரசியல் கட்சியினர் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். கோவா மாநில முதல்வருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு நடத்த வேண்டும் என்றார்.

முடங்கிய மக்கள்

முடங்கிய மக்கள்

புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் . ஆனால் இன்று பந்த் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றாலும், போராட்டக்குழுவினர் வாகனங்களை மறித்த காரணத்தால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மாலையில் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

போக்குவரத்து நிறுத்தம்

போக்குவரத்து நிறுத்தம்

முழு அடைப்பையொட்டி கர்நாடகாவில் இருந்து தமிழகம், கோவா ஆகிய மாநிலங்களுக்கான போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டன. இதேபோல கர்நாடகாவில் இருந்து செல்லும் பால், தயிர், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதும் நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்குமேல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

எல்லையில் பேருந்துகள்

எல்லையில் பேருந்துகள்

பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறுத்தப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் இருந்து மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. அதேபோல ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளும் பன்னாரி அருகே நிறுத்தப்பட்டன மாலை 6 மணிக்கு மேல் அவை இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.

English summary
The 12 hour bandh in Karnataka observed by several pro-Kannada outfits with the demand of the implementation of the Kalasa Banduri and Mekedatu projects on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X