• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கார் பார்க்கிங்கில் தூங்கியதற்கு மன்னிப்பு கோரினார் அதிபர் பைடன்

By BBC News தமிழ்
|

Biden Apologizes After National Guard Troops Are Sent to Parking Garages
EPA
Biden Apologizes After National Guard Troops Are Sent to Parking Garages

பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடலில் குவிக்கப்பட்ட நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையினர், அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தூங்கும் புகைப்படம் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் அந்தப் படைத் தலைவருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார்.

இம்மாத தொடக்கத்தில் கேபிட்டல் கட்டடத்தில் அப்போதைய அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பைடன் பதவியேற்பை ஒட்டி ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்கலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை அளித்திருந்தது.

இதையடுத்து, பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது வாஷிங்டன் டி.சி.யில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வியாழக்கிழமை வெளியான சில புகைப்படங்களில் கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பிறகு, கேப்பிட்டல் கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் படுத்து உறங்குவதைக் காட்டின.

சில அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து கோபப்பட்டனர். சில மாநில ஆளுநர்கள் துருப்புகளை திரும்ப அழைத்தனர்.

இதையடுத்து, நேஷனல் கார்டு பீரோ தலைவரை அழைத்த அதிபர் பைடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்றும் அவரிடம் கேட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதல் சீமாட்டி என அழைக்கப்படும் அதிபரின் மனைவி ஜில் பைடன் படையினர் சிலரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் இருந்து அவர்களுக்காக கொண்டுவந்த பிஸ்கட்டை பரிசளித்தார்.

நேஷனல் கார்டு படையினரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் ஜில் பைடன்.
Reuters
நேஷனல் கார்டு படையினரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் ஜில் பைடன்.

"என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன்," என்று அவர் கூறினார்.

கார் பார்க்கிங்கில் சில பாதுகாப்புப் படையினர் உறங்க நேர்ந்த புகைப்படத்தைப் பார்த்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களே விமர்சனம் செய்தனர்.

https://twitter.com/SenatorTimScott/status/1352462624328454149


https://twitter.com/AOC/status/1352452462255419392


பல நாள்களாக உஷார் நிலையில் வைக்கப்பட்ட பிறகு, கார் புகையிலும், கழிப்பறை வசதி இல்லாத நிலையிலும் அவர்கள் உறங்க நேர்ந்தது குறித்து பலரும் தங்கள் கவலைகளை வெளியிட்டிருந்தனர்.

பலரும் நெருக்கமாக உறங்குவதைக் காட்டும் புகைப்படங்கள், கொரோனா தொற்று குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியது.

கொரோனா தொற்று

ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் வெள்ளிக்கிழமை பேசிய பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர், அங்கே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படையினரில் 100 முதல் 200 வரையிலானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால், இது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இது மோசமான செயல் என்றும், இனி இது நடக்காது என்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும், செனட் பெரும்பான்மைத் தலைவருமான சக் ஷுமர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சையை அடுத்து, தங்கள் மாநிலத்தை சேர்ந்த படையினரை திரும்ப வரும்படி உத்தரவிட்ட ஆளுநர்களில் ஃப்ளோரிடா மாநில ஆளுநர் ரான் டீ சான்டிசும் ஒருவர்.

பொலிடிகோ தளத்துக்குப் பேசிய செனட்டர் ராய் பிளன்ட், செனட் விதிகள் குழு இந்தப் பிரச்னை பற்றி விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார்.

அவர்கள் ஏன் கேப்பிட்டல் கட்டடத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர் என்பது குறித்து முரண்பட்ட செய்திகள் வருகின்றன.

மீண்டும் நாடாளுமன்றம் கூடும் நிலையில், அங்கே நடமாட்டம் அதிகரித்துவிட்டதால், கேப்பிட்டல் போலீஸ் கேட்டுக்கொண்டற்கு இனங்கவே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்று நேஷனல் கார்ட்ஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம் பேசிய கேப்பிட்டல் போலீஸ் தற்காலிக தலைவர் யோகானந்த பிட்மன் "நேஷனல் கார்டு படையினரை கேப்பிட்டல் கட்டடத்தில் இருந்து வெளியேற்றும்படி கோரவில்லை" என்று கூறியுள்ளார்.

எனினும், அவர்களை கேப்பிட்டல் கட்டடத்தில் இருந்து வெளியேற்றும் முடிவு வியாழக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. அவர்கள் மீண்டும் கேப்பிட்டல் கட்டடத்துக்குள்ளேயே வரவழைக்கப்பட்டனர்.

தரையில் உறங்கும் பாதுகாப்புப் படையினர்.
EPA
தரையில் உறங்கும் பாதுகாப்புப் படையினர்.

நேஷனல் கார்டு படையினர் போதிய இடைவெளியில் இருந்து பணியாற்றவும், பணியில் இருந்து அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளவும் தேவையான ஏற்பாடு செய்துள்ளதாக யு.எஸ். நேஷனல் கார்டு மற்றும் கேப்பிட்டல் போலீஸ் வெள்ளிக்கிழமை விடுத்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வில் இருக்கும் படையினர் ஓட்டல் அறைகளிலோ, வேறு தங்குமிடங்களிலோ தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்த அந்த அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்துள்ளது.

வரும் நாள்களில் 19 ஆயிரம் படையினர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவர். மீதி 7 ஆயிரம் பேர் மட்டும் தொடர்ந்து வாஷிங்டனில் இருப்பார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
 
 
 
English summary
Biden Apologizes After National Guard Troops Are Sent to Parking Garages
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X