For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 கோடி ரூபாய் ஊதியத்தில் கூகுளில் வேலை பெற்ற பிகார் பெண்

By BBC News தமிழ்
|

மாதம் ஒன்பது லட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. இது இளைஞர் ஒருவரின் கனவோ, லட்சியமோ அல்ல. அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைக்கும் அதிகபட்ச ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்பை பெற்றிருப்பவர் பிகார் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் மதுமிதா குமார்.

பிரபலமான தொழில் நுட்ப நிறுவனமான கூகுள், ஆண்டுக்கு ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் என்ற ஊதியத்தில் மதுமிதாவிற்கு வேலை கொடுத்திருக்கிறது.

கூகுளின் சுவிட்சர்லாந்து அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று வேலைக்கு சேர்ந்துவிட்டார் மதுமிதா.

இதற்கு முன்னர் பெங்களூருவில் உள்ள ஏ.பி.ஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார் அவர்.

சமீபத்தில் அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெர்சிடஸ் போன்ற நிறுவனங்களிலிருந்தும் வேலையில் சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறுகிறார் மதுமிதா.

வெற்றி கொண்டாட்டம்

மகளின் வெற்றியைக் கோலாகலமாக கொண்டாடுகிறார் தந்தை.

பாட்னாவுக்கு அருகில் உள்ள காகூல் பகுதியில் வசிக்கும் மதுமிதாவின் குடும்பம்தான் தற்போது அங்கு விவாதங்களின் மையப்புள்ளி. ஒருகாலத்தில் மகளை பொறியியல் படிக்க அனுப்பவே அவரது தந்தை தயாராக இல்லை என்பதை கேட்கும்போது வியப்பாக உள்ளது.

மதுமிதாவின் தந்தை சுரேந்திர் குமார் ஷர்மா தனது அன்றைய மனோபாவத்தை நினைவுகூர்கிறார்: "என்ஜினீயரிங் துறை பெண்களுக்கு ஒத்துவராது என்று நான் சொன்னேன், ஆனால் அந்தத் துறையில் பல பெண்கள் வருவதை பார்த்தேன். அதன்பிறகு மதுவை 2010ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்த்தேன்."

ஜெய்ப்பூர் ஆர்யா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த மதுமிதா, 2014இல் கணினி பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். பாட்னாவின் டி.ஏ.வி, வால்மி பள்ளியில் பணிரெண்டாம் வகுப்புவரை படித்தார்.

அப்துல் கலாமை பார்த்து ஊக்கம் பெற்றார் மதுமிதா

குடும்பத்தில் ஏன் பரம்பரையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் முதல் நபர் மதுமிதா. இந்த ஆண்டு பிப்ரவரியில்தான் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணமாக அமெரிக்கா சென்றார் மது.

மதுமிதாவின் முதல் வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அவர் தந்தை சுரேந்திர் இவ்வாறு கூறுகிறார்: "நம் ஊரில் இருக்கும் வேறு பல வீடுகளைப் போலவே, வெளிநாட்டிற்கு செல்வது எங்கள் குடும்பத்திலும் மிகப் பெரிய சாதனை". சரி, சில நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என்று அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், திரும்பி வந்த தங்கள் மகள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இனிமேல் தனியாக இருக்கவேண்டும் என்பதை இப்போதுதான் குடும்பத்தினர் உணர்கின்றனர்.

இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, மதுமிதாவுக்கு ஊக்கம் கொடுத்தது யார் என்று கேட்டோம்.

"இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி, ஏ.பி.ஜே அப்துல் கலாம்தான் மதுமிதாவின் ஆதர்ச மனிதர். கலாம் எழுதிய புத்தகங்கள், அவரது சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் மதுமிதாவுக்கு அவருடைய எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உத்வேகம் அளித்தன" என்று சொல்கிறார், சோன்புரில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு ஆணையராக பணியாற்றும் மதுமிதாவின் தந்தை சுரிந்தர் குமார் ஷர்மா.

ஐ.ஏ.எஸ் பணியை விரும்பிய மதுமிதா

பள்ளி நாட்களில், கணிதத்தையும் இயற்பியலையும் விரும்பிப் படித்த மதுமிதா, விவாதப் போட்டிகளில் அதிகளவில் பங்கெடுப்பார். முதலில் ஐ.ஏ.ஸ் அதிகாரியாகும் விருப்பம் கொண்டிருந்தார் மதுமிதா.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 86 சதவிகித மதிப்பெண் பெற்றார் அவர். நாட்டின் சிறந்த கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த மதிப்பெண் சராசரியானது என்றே கருதப்படுகிறது.

ஆனால், தற்போது மதுமிதா அடைந்திருக்கும் உச்சம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மட்டுமே ஒருவரின் திறமையையும், பதவியையும் முடிவு செய்யாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
"இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான விஞ்ஞானி, ஏ.பி.ஜே அப்துல் கலாம்தான் மதுமிதாவின் ஆதர்ச மனிதர். கலாம் எழுதிய புத்தகங்கள், அவரது சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் மதுமிதாவுக்கு அவருடைய எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி உத்வேகம் அளித்ததன"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X