For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிகாரில் 'கதையை முடிக்க' முயலும் மான்ஜி: முதல்வராக முயலும் நிதிஷ்- 'மீன் பிடிக்க' முயலும் பாஜக!

By Chakra
Google Oneindia Tamil News

பாட்னா: பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் முதல்வராக உள்ள ஜிதன்ராம் மான்ஜி சட்டசபையை கலைக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், மான்ஜியைத் தூக்கிவிட்டு மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.

மான்ஜிக்கு முன் நிதிஷ்குமார் தான் முதல்வராக இருந்தார். கடந்த பிகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற நிதிஷ்குமார், நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியை சந்தித்ததையடுத்து, அதற்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.

Bihar political crisis deepens, JDU MLAs likely to elect Nitish as leaders, Manjhi may seek Assembly dissolution

மேலும் தனக்கு பதில் மான்ஜியை முதல்வராக்கினார். ஆனால், முதல்வரான மான்ஜி கட்சியின் தலைவர் சரத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோரை திட்டமிட்டு புறக்கணிக்க ஆரம்பித்தார். தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்த அவருக்கும் சரத்யாதவ், நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மான்ஜியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சரத்யாதவும், நிதிஷ்குமாரும் முடிவு செய்தனர். அவரை பதவி விலகுமாறு மறைமுகமாக பலமுறை கட்டளையிட்டனர். ஆனால் மான்ஜி பதவி விலக மறுத்து விட்டார்.

அத்துடன் நிதிஷ்குமார் ஆதரவு அமைச்சர்களுக்கு பிரச்சனை தர ஆரம்பித்தார். நேற்றிரவு 2 அமைச்சர்களை நீக்கவும் ஆளுநருக்கு சிபாரிசு செய்தார். இதனால் பிகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கட்சித் தலைவர் சரத்யாதவ் இன்று கூட்டியுள்ளார். பாட்னாவில் நடக்கும் இக் கூட்டத்தில் மான்ஜியை முதல்வர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டு நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் 100 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட முதல்வருக்கே அதிகாரம் உண்டு என்றும், எனவே இன்றைய கூட்டத்தில் எடுக்கும் முடிவு செல்லாது என்றும் மான்ஜி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மான்ஜியை பதவியில் இருந்து மட்டுமல்லாமல் கட்சியை விட்டே நீக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளார். இதனால் கட்சி உடையும் நிலை உருவாகியுள்ளது.

இந் நிலையில் திடீரென இன்று பிற்பகலில் நிதிஷ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் மான்ஜி. அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை. வெளியே சிரித்த முகத்துடன் வந்தார் மான்ஜி.

ஆனால், நிதிஷை சந்தித்துவிட்டு வந்தபின் மான்ஜி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டினார். அதில் சட்டசபையைக் கலைக்கலாம் என்ற அவர் சொன்னதை 21 அமைச்சர்கள் ஏற்கவில்லை, வெளிநடப்பு செய்துவிட்டனர். வெறும் 7 அமைச்சர்கள் மட்டும் ஒப்புக் கொண்டனர். இதனால் அந்தத் தீர்மானத்தை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும் அவர் சட்டசபையை கலைக்குமாறு ஆளுநர் திரிபாதிக்கு பரிந்துரை செய்துவிட்டார். இதைச் செய்துவிட்டு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி செல்லக் கூடும் என்று தெரிகிறது.

இந் நிலையில் இன்று நிதிஷ்குமார் கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மான்ஜிக்குப் பதிலாக நிதிஷே முதல்வர் வேட்பாளராக (சட்டசபை கட்சித் தலைவர்) தேர்வு செய்யப்பட்டார். மேலும் சட்டசபையைக் கலைக்க மான்ஜி எடுத்த முடிவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதரவே கிடைக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் ஆளுநருக்கும் தகவல் தெரிவிக்கும் தீர்மானமும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிகாரில் மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் 5 எம்எல்ஏ இடங்கள் காலியாக உள்ளன. இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க 119 எம்எல்ஏக்கள் தேவை.

இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 115 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த கட்சிக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 24 எம்.எல்.ஏக்கள் ஆதரவும், காங்கிரசின் 5 எம்எல்ஏக்கள் ஆதவும், ஒரு கம்யூனிஸ்ட் எம்எல்ஏவின் ஆதரவும் உள்ளது. இதனால் மொத்தம் 145 எம்எல்ஏக்கள் நிதிஷ்குமாரிடம் உள்ளனர்.

அதே போல பாஜகவுக்கு 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு ஆதரவாக 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்தில் மான்ஜி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. 25 பேர் அவர் பக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இன்று நிதிஷ்குமார் நடத்திய கூட்டத்தில் 100 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதைப் பார்த்தால் மான்ஜியிடம் 7 பேர் கூட இல்லை என்பது தெளிவாகிறது.

உண்மையிலேயே 25 பேர் மான்ஜிக்கு ஆதரவு தந்தால், பாஜக ஆதரவுடன் 118 எம்எல்ஏக்கள் கொண்ட அணியாக இது இருக்கும். எனவே சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும் நிலை வந்தால் இரு தரப்பும் சுமார் சம பலத்துடன் இருக்கும் நிலை உருவாகும்.

இதற்கிடையே டெல்லியில் பிகார் நிலவரம் குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவுடன் பிகார் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மொத்தத்தில் பிகார் அரசு தப்புமா அல்லது கவிழுமா என்பது குறித்து பெரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இப்போதைய நிலையில் அடுத்த அரசியல் நடவடிக்கை பிகார் ஆளுநர் திரிபாதி எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

திரிபாதி மத்தியில் உள்ள பாஜக அரசு சொல்வதைக் கேட்டு அரசைக் கலைக்க பரிந்துரைத்தாலும் ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி அதை ஏற்க வாய்ப்பில்லை. அவர் அதைத் தடுத்து நிறுத்தி, சட்டசபையில் நிதிஷ்குமாரை மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

English summary
Bihar is heading for political instability with the ruling Janata Dal United legislative party meeting at around 4 pm on Saturday in Patna where former chief minister Nitish Kumar will be elected as the new leader forcing the incumbent Chief Minister Jitan Ram Manjhi to resign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X