For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் இந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசி சொந்த காசில் சூனியம் வைக்கும் பாஜக!

By Jeyarajaseker A
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் எப்படியும் வென்று அம்மாநிலத்தில் கால் வைத்துவிடலாம் என கனவு காணுகிறது பாஜக.. ஆனால் இந்துத்துவா எனும் கொள்கை மூலமாக சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட நிலையை நோக்கித்தான் பாஜக போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர் கேரள அரசியல் பார்வையாளர்கள்.

பாஜக தனது வரலாற்றில் முதன் முறையாக கேரளாவில் இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரசின் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுக்கு மாற்றாக 3-வது அணியாக தேர்தல் களத்தில் நிற்கிறது. இந்த தேர்தலில் எப்படியாவது 10 தொகுதிகளுக்கும் அதிகமாக கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக தலைமையும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைமையும் மும்முரமாக உள்ளன.

BJP falls in its own Hindutva trap in Kerala

காங்கிரஸ் - இடதுசாரிகள் என்ற இருதுருவ அரசியல் நிலைப்பாட்டில் கேரளாவில் பாஜகவுக்கு 6.3% சதவீதம் என்ற அளவுக்குதான் வாக்கு வங்கி உள்ளது. இவற்றையெல்லாம் தகர்த்து எப்படியேனும் கேரள சட்டசபையில் தனது கணக்கை துவக்க திட்டம் வகுத்துள்ளது பாஜக.

கேரளாவில் தங்களுக்கு எதிராக நிலவும் இந்நிலையை சமாளிக்க திணறிக்கொண்டிருந்த பாஜகவுக்கு கிடைத்த திறவுகோல்தான் வெள்ளாபள்ளி நடேசனின் நட்பு. ஈழவ சமுதாய நலனுக்காக ஸ்ரீ நாராயணா தர்ம பரிபாலன யோகம் என்ற அமைப்பு 1903 ம் ஆண்டு கேரளாவில் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக கருதப்படும் ஸ்ரீ நாராயண குருவால் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை தற்போது நடத்தி வருபவர் அரசியலில் பெருவிருப்பு கொண்ட வெள்ளாபள்ளி நடேசன்.

கேரளா மாநிலத்தில் 23% ஈழவா சமுதாய வாக்கு வங்கி தனக்கு உள்ளதாக கூறிக்கொள்ளும் வெள்ளாபள்ளி நடேசனை பாரத் ஜன சேனா என்ற கட்சியை தொடங்க வைத்தது பாஜக. வெள்ளாபள்ளி நடேசனும் கட்சியை தொடங்கி மகன் துஷார் வெள்ளாபள்ளியை தலைவராகவும் முடி சூட வைத்து அழகு பார்த்தார்.

தற்போதைய தேர்தலில் வெள்ளபள்ளி நடேசனின் பாரத் ஜன சேனாவுடனான கூட்டு சேர்ந்திருப்பதன் மூலம் எப்படியும் சில தொகுதிகளைக் கைப்பற்றலாம் என்பது பாஜக கணக்கு. தொடக்கத்தில் எப்படியும் குறைந்தது பாஜக 3 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டது.

ஆனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிரமான இந்துத்துவா பிரசாரம், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களை கடுமையாக வெறுப்படைய வைத்ததுடன் தாமரையை மலர விடக்கூடாது என்ற உறுதிமிக்க நிலைப்பாட்டையும் எடுக்க வைத்துள்ளதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் கே பி ஜெயதீப்.

கட்சித் தொண்டர்கள் வலுவாக இருந்தபோதும் காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் தொகுதிகளில் பாஜகவின் யுக்திகள் அக்கட்சிக்கு தொடர்ச்சியான தோல்வியையே தந்துள்ளன. 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் சிகே பத்மநாபன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சேர்க்களம் அப்துல்லாவிடம் 13,186 வாக்குகள் வித்தியாசத்தில் மஞ்சேஸ்வரத்தில் தோல்வியடைந்தார்.

அதுபோல காசர்கோடு தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சிடி அகமெத் அலியிடம் 19,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் பாஜகவின் பிகே கிருஷ்ணதாஸ். இந்த தொகுதிகளில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

2006ம் ஆண்டு மஞ்சேஸ்வரம் தொகுதியில் 4,800 வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் நாராயண்பட்டை தோற்கடித்தார் சிபிஐ- ன் சிஎச் குன்ஹம்பு. காசர்கோடு தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் சிடி அகமெத் அலி பாஜக வேட்பாளரை 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2011-ம் ஆண்டிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கே காசர்கோடு, மஞ்சேஸ்வரம் தொகுதிகளில் பாஜகவை வீழ்த்தி வென்றது.

ஆனால் தற்போதைய தேர்தலில் எப்படியும் வெல்வோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் பாஜக தலைவர் கும்மாணம் ராஜசேகரன். கேரளாவில் நிச்சயம் பாஜக கணக்கை தொடங்கும் என அடித்து சொல்கிறார். ஆனால் எப்படி வெற்றி பெறப்போகிறோம் என்றோ அல்லது சிறுபான்மை மற்றும் இடதுசாரி தொண்டர்களின் வாக்குகளை எப்படி வளைக்கப் போகிறோம் என்பது குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை.

அதே நேரத்தில் தீவிரமான இந்துத்துவா பிரச்சாரத்தால் பாஜக நிச்சயம் தோல்வியை தழுவும் என்று கூறுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். காசர்கோடு, மஞ்சேஸ்வரம், நேமம் மற்றும் வட்டியூர்காவு ஆகிய தொகுதிகள் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கருதுகிறது பாஜக தலைமை. மேலும் வெற்றியை தீர்மானிக்கும் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 25 தொகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது பாஜக.

கேரளா மக்கள் தொகையில் 13% உள்ள நாயர் சமூகத்தினரும் உயர் ஜாதியினரும் பொதுவாகவே பாஜகவை ஆதரிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் நாயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஈழவா சமூக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதுபோல ஈழவ சமூகத்தினர், நாயர் சமூக வேட்பாளர்களை விரும்புவதில்லை. இதுதான் கேரளாவின் கள யதார்த்தம்.

இந்த யதார்த்தங்களை புறந்தள்ளி ஈழவா சமூகத்தின் வெள்ளாபள்ளி நடேசனுடனும் நாயர்களுடனும் ஒருசேர கை கோர்த்து கொண்டு நம்பிக்கையோடு இருக்கிறது பாஜக. அதே நேரத்தில் தீவிரமான இந்துத்துவா பிரசாரத்தையும் பாஜக முன்னெடுக்கிறது.

ஈழவா சமூகத்தினர்தான் இடதுசாரிகளின் வாக்கு வங்கிகள். இப்படி தீவிர இந்துத்துவாவை பாஜக பேசுவதால் ஒட்டுமொத்த ஈழவா வாக்குகளும் அப்படியே இடதுசாரிகளுக்கு போய்விடும் என்கிற நிலைதான் உள்ளது. பாஜக இந்துத்துவா கோஷத்தை முன்னெடுக்குமானால் பிற சமூகத்தினர் பாஜகவை வீழ்த்துவதற்கான அஸ்திரங்களை கையில் எடுப்பார்கள். இதனால் பாஜகவின் கனவு மீண்டும் கேரளாவில் பலிக்கப் போவதில்லை என்கிறார் கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சி கௌரிதாசன். கேரளா இன்னமும் இந்துத்துவா பிராண்டை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதேவேளையில் பாஜக வேறு சில யுக்திகளை கையாண்டால் மட்டுமே அவர்களால் நிலைபெறவும் நடுநிலையாளர்களின் வாக்குகளைப் பெறவும் முடியும். அதே வேளையில் 2016 தேர்தல் பாஜகவுக்கு கேரளாவில் ஒரு பெரிய எழுச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் கௌரிதாசன்.

அதே நேரத்தில் வங்கி கணக்குகளை வேண்டுமானால் பாஜக கேரளாவில் துவக்கலாமே தவிர சட்டசபையில் கணக்கை தொடங்க முடியாது என்று கிண்டலடித்துள்ளார் மூத்த அரசியல்வாதி ஏ கே ஆண்டனி. பாஜகவின் பரிதாபகரமான இந்த நிலையில் கேரளாவில் இந்து அமைப்புகளின் கூட்டமைப்பான இந்து நாடாளுமன்றமோ, வெள்ளாபள்ளி நடேசனின் பாரத் ஜன சேனா போட்டியிடும் 37 தொகுதிகளிலும் இடதுசாரிகளை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்த இந்து நாடாளுமன்றத்தை தங்கள் பக்கம் பாஜக வளைக்காமல் போனால் கேரள சட்டசபையின் பார்வையாளர் மாடத்தில்தான் அக்கட்சியினர் அமர முடியும் என்பதுதான் கள யதார்த்தம்.

English summary
BJP cannot open account in kerala assebly by its own hindutva policy. But with 2016 Assembly poll, BJP will emerge as a political force in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X