For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சு சாமி வருகை, ஆர்எஸ்எஸ் அதிருப்தி... கீர்த்தி ஆசாத் விவகாரம்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

கீர்த்தி ஆசாத் பாஜக விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாய் காவிக் கட்சிக்குள் நெருக்கடியை முற்றச் செய்து கொண்டிருக்கின்றது.

டிசம்பர் 23 ம் தேதி மாலை பாஜக விலிருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார், பிஹார் மாநிலம் தர்பங்கா மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த கீர்த்தி ஆசாத். பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பகவத்ஜா ஆசாத்தின் மகன்தான் கீர்த்தி ஆசாத். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், டெல்லி சட்டமன்றத்தின் கோல் மார்க்கெட் தொகுதியிலிருந்தும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றியிருக்கிறார் ஆசாத்.

BJP and Kirti Azad issue

புகழ்பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரது குடும்பத்திலிருந்து வந்த கீர்த்தி ஆசாத், 1993 ல் பாஜக வில் சேர்ந்தார். ‘1993 ம் ஆண்டு காலக் கட்டங்களில் பாஜக வை யாருமே பெரியதோர் கட்சியாக மதித்தது கிடையாது. நான் அப்போதே பாஜக வில் எந்த பதவியையையும் எதிர்பார்க்காமல் சேர்ந்தேன். இப்போது என்னை குறை சொல்லுபவர்கள், எதிர்ப்பவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்' என்று தான் சஸ்பெண்ட் செய்யப் பட்ட நாளன்று தொலைக் காட்சி பேட்டியொன்றில் கூறினார் ஆசாத்.

கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப் பட்ட விவகாரம் பாஜக வில் தற்போது ஓரங் கட்டப்பட்டிருக்கும் மூத்த தலைவர்களை மீண்டும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு விஷயத்தை மோடிக்கு எதிராக கையில் எடுப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

மார்க்க தர்ஷக் மண்டல் என்ற பெயரில் இந்த மூத்த தலைவர்கள் - எல்.கே. அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்தகுமார் - கடந்த ஒரு வருடமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மோடியால் கடந்த ஒன்றரை வருடங்களாக ஓரங்கட்டப்பட்டவர்கள். பாஜக விலிருக்கும் ஒரு கடை நிலை ஊழியனுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த நால்வர் அணிக்குக் கிடையாது என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிஹாரில் பாஜக தோற்றபோது இவர்கள் கூடி முடிவுகளை அலசி ஆராய்ந்தனர். ஒரு அறிக்கையையும் கூட விடுத்தனர். ஆனால் அதைத் தவிர இவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

இப்போது கீர்த்தி ஆசாத் விவகாரத்திற்காக நால்வர் அணி வியாழக்கிழமை மீண்டும் கூடியது. விவாதித்தது. ஆனால் அதிகாரபூர்வமாக எதனையும் செய்யாமல் கலைந்து சென்று விட்டது. நால்வர் அணிக்கும் மோடிக்கும் மட்டுமல்ல, அருண் ஜெட்லிக்கும் கூட ஆகாது. தான் சஸ்பெண்ட் செய்யப் பட்ட உடனேயே கீர்த்தி, "விவகாரத்தை நான் மார்க் தர்ஷக் மண்டலிடம் கொண்டு செல்வேன்," என்றார்.

விவகாரத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு ஊதி, ஊதிப் பெரியதாக்கவே ஆசாத் முடிவு செய்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவானது. விஷயம் நால்வர் அணியுடன் இருந்திருந்தால் கூட பாஜக வுக்கு தலைவலி கூடியிருக்காது. தற்போது சுப்புரியமணியன் சுவாமியும் இதில் சேர்ந்துவிட்டார். எங்கெல்லாம் அரசியல் குழப்பங்கள் உருவாகிறதோ அங்கெல்லாம், சம்மன் இல்லாமலேயே ஆஜராகி விடும் அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி இந்த களேபரத்திலும் உள்ளே குதித்து விட்டார். ‘கீர்த்தி ஆசாத் பாஜக அனுப்பியிருக்கும் நோட்டீசுக்கு எதிராக தனது பதிலை தயாரிக்க நான் அவருக்கு உதவுவேன். கீர்த்தி ஆசாத் ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவரை பாஜக விலிருந்து நீக்கியிருப்பது சரியல்ல. எனக்கு கீர்த்தி ஆசாத்தை அவர் சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே தெரியும். நானும் ஆசாத்தின் தந்தையும் நல்ல நண்பர்கள்,' என்றெல்லாம் வழக்கம் போலவே வார்த்தை ஜாலங்களில் விளையாடிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

தனக்கு உதவ சு சுவாமி முன் வந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ள ஆசாத், தான் சு சுவாமியின் ஆதரவை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமியைப் பொறுத்த வரையில் விவகாரம் மிகவும் எளிதானது. தற்போதய பாஜக வில் சு சுவாமியின் பரம எதிரி அருண் ஜெட்லிதான். பல வருடங்களாகவே ஜெட்லிக்கும் சு சுவாமி க்கும் ஆகாது. நிதியமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த சு சுவாமி க்கு அது ஜெட்லிக்கு போனது ஜீரணிக்க முடியாத விஷயம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஜெட்லியை நைச்சியமாக சீண்டிப் பார்க்க சு சுவாமி தவறியதே இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான ஊழல் குற்றச் சாட்டுக்கள் பற்றிய விசாரணை குறித்து கருத்து தெரிவித்த சு சுவாமி, இவர்கள் மீதான விசாரணையில் தற்போதய நிதியமைச்சகம் போதிய கவனமும், அக்கறையும் காட்டவில்லை என்று கூறியிருந்தார். இது பலரது புருவங்களையும் அப்போதே உயர்த்தியது குறிப்பிடத் தக்கது.

இன்று அந்த சு சுவாமி தான் கீர்த்தி ஆசாத் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். சு சுவாமி ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு ஜெயலலிதா சிறைக்குப் போனதிலிருந்து, கடந்த வாரம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஊழல் வழக்கில் நீதி மன்றத்திற்கு வரையில் சான்றுகள் உள்ளன. ஜெயலலிதா வை இன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் சொத்து குவிப்பு ஊழல் வழக்கின் சூத்திரதாரியே சு சுவாமிதான். சு சுவாமி இந்த வழக்கில் 1996 செப்டம்பரில் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் கொடுத்த தனிப் புகார்தான், ஆல மரமாய் வளர்ந்து இன்று ஜெயலலிதா வின் அரசியல் வாழ்வையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே சு சுவாமி யின் கடந்த கால வரலாற்றை பின்புலமாய் கொண்டு பார்த்தால் கீர்த்தி ஆசாத் விவகாரத்தில் அவர் தயவுடன் அடுத்தடுத்து அரங்கேறப் போகும் காட்சிகள் புரியும்.

இதில் மற்றோர் முக்கியமான விஷயம், பாஜக வை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரசிக்கவில்லை என்பதுதான். காரணம், தற்போதய பாஜக அரசின் செயற்பாடுகள் பற்றிய எந்த குற்றச் சாட்டையும் ஆசாத் கூறவில்லை. மத்திய அமைச்சர்கள் எவரது செயற்பாட்டிலும் அவர் குறை கூறவில்லை. மாறாக டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்ததாக புகார் கூறியதற்காக எப்படி ஒருவரை பாஜக சஸ்பெண்ட் செய்ய முடியும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் ஸின் வாதம்.

‘இந்த விவகாரத்தை இன்னமும் சாதுர்யமாக, கீர்த்தி ஆசாத்தை சஸ்பெண்ட் செய்யாமல் பாஜக கையாண்டிருக்கலாம். மாறாக, ஆசாத்தை சஸ்பெண்ட் செய்திருப்பதன் மூலம் விவகாரத்தை நடுத் தெருவுக்கு பாஜக கொண்டு வந்து விட்டது. எதிர்கட்சிகளுக்கும் பாஜக வை சரமாரியாக சாட ஒரு வாய்ப்பையும் கொடுத்து விட்டது. இது நிச்சயம் பொது மக்கள் மத்தியில் ஓரளவுக்கு பாஜக மீது அதிருப்தியைத் தான் ஏற்படுத்தும்' என்று தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் பெயர் கூற விரும்பாத ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர்.

இன்னோர் பக்கம் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராக அருண் ஜெட்லி தொடர்ந்திருக்கும் அவதூறு வழக்குகளில் ஆம் ஆத்மி க்கு ஆதரவாக ஆஜராகப் போவது ராம் ஜெத்மலானி. இவர் 1999 - 2004 ம் ஆண்டு பாஜக ஆட்சிக் காலத்தில் சொற்ப காலம் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவர். பின்னர் ஜெத்மலானி தனது பதவியை இழந்தார். இதற்கு காரணம் அருண் ஜெட்லிதான் என்று இன்னமும் நம்புகிறார் ஜெத்மலானி. ‘இந்த வழக்கில் நான் ஆம் ஆத்மி க்காக ஆஜராவேன். அருண் ஜெட்லி ஒரு மோசடி பேர் வழி. ஒரு நாள் அவர் நிச்சயம் ஜெயிலுக்குப் போவார்' என்று ஜெத்மலானி கொடுத்த பேட்டியானது இன்றைய தேசிய நாளிதழ்களில் வந்துள்ளது. எந்தளவுக்கு கீர்த்தி ஆசாத் விவகாரம் பற்றியெறிந்து கொண்டிருக்கின்றது என்று இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பக்கம் ஜெட்லியால் பாதிக்கப் பட்ட பாஜக வின் முன்னாள் மற்றும் இன்னாள் பெருந்தலைகள்... மற்றோர் பக்கம் பாஜக வின் தாய் ஸ்தாபனமான ஆர்எஸ்எஸ் ஆசாத் விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது.

ஆனால் இதில் உடனடியாக தலையிட்டு, ஆசாத் தின் சஸ்பெண்ட் உத்தரவை மோடியால் வாபஸ் பெறச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. காரணம் அருண் ஜெட்லியைப் பகைப்பது மோடிக்கு அவ்வளவு சுலபமானதல்ல. கடந்த ஒன்றரை வருடங்களில் மோடி அரசின் எல்லா முக்கியமான துறைகளிலும் கொள்கை வகுப்பு மற்றும் ஆட்சியின் மீதான எல்லா விமர்சனங்களுக்கும், அறிவுபூர்வமாக பதில் சொல்லிக் கொடுண்டிருப்பவர் அருண் ஜெட்லி மட்டும்தான். அவரது வாதத்திறன் மிகவும் பிரசித்திப் பெற்றது. எதிர்கட்சிகளாலும் சிலாகித்துப் பாராட்டப் படுவது. தர்க்க ரீதியாக அருண் ஜெட்லியின் வாதங்களை எதிர் கொள்ளுவது எவருக்கும் அவ்வளவு எளிதான காரியமல்ல.

மற்றோர் விஷயம், 2002 ம் ஆண்டின் குஜராத் இன கலவரங்களுக்குப் பிறகு, 2014 வரையில் 12 ஆண்டுகள் மோடி மீது சுமத்தப் பட்ட எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் சட்டரீதியாக அவற்றை உச்ச நீதி மன்றத்தில் அவர் எதிர்கொள்ள தூண் போன்று நின்று உதவியவர் அருண் ஜெட்லிதான். ஒரு மாமாங்கம் மோடியின் சட்ட போராட்டங்களில் - இது வெறும் 2002 குஜராத் கலவரங்கள் மட்டும் சம்மந்தப் பட்டதன்று. பின்னர் 2005 - 2007 ம் ஆண்டு காலகட்டங்களில் குஜராத்தில் நிகழ்ந்த இர்ஷாத் ஜஹான், பிரஜாபதி, ஷோராபூதீன், ஹரேன் பாண்டியா போலி என்கவுண்டர்களிலும் - அப்போதய குஜராத் மாநிலத்தின் முதலைமச்சராக இருந்த மோடி அரசு காப்பாற்றப்பட சட்ட மூளையாக இருந்து செயல்பட்டவர்தான் அருண் ஜெட்லி. கடைசியாக ஒரு இளம் பெண் குஜராத்தில் பல மாதங்கள் வேவு பார்க்கப் பட்டு அந்த விவகாரம் சம்மந்தமான ஆடியோ டேப்புகள் சந்தி சிரித்த போதும் மோடியை காப்பாற்றியது அருண் ஜெட்லிதான். தனக்கு திருமணமாகி விட்டதென்ற தகவலை தான் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்பு மனுக்களில் தெரிவிக்காத மோடி, 2014 நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வெளிப்படையாகத் தெரிவிக்க ஒப்புக் கொண்டதே அருண் ஜெட்லி கொடுத்த சட்ட ஆலோசனையின் பேரில்தான் என்று சொல்லுகின்றனர் பாஜக மூத்த தலைவர்கள்.

இப்போது புரிகிறதா? அருண் ஜெட்லி மீதான, அவர் கிரிக்கெட் சங்கத் தலைவராக பணியாற்றிய போது நடந்தததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் சம்மந்தமாக கீர்த்தி ஆசாத் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க மோடியும், பாஜக தலைவர் அமீத் ஷா வும் ஏன் சுலபத்தில் ஒப்புக் கொண்டனர் என்ற விஷயம்?

இதில் மற்றோர் கேலிக் கூத்து ஒரு எம் பி யை சஸ்பன்ட் செய்யும் அதிகாரம் பாஜக வின் பார்லிமெண்டரி போர்டுக்குத்தான் உண்டு. ஆனால் அமீத் ஷா என்ன அதிகாரத்தின் கீழ் இதனைச் செய்தார் என்பதுதான் கட்சியின் மூத்த தலைவர்களுக்கே விளங்காததாக உள்ளது. ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்துள்ளதாக நாளும், பொழுதும் மார் தட்டிக் கொண்டிருக்கும் பாஜக இன்று கீர்த்தி ஆசாத் விவகாரத்தை மக்கள் மன்றத்தில் எவ்வாறு நியாயப் படுத்தி, அரசியல் விளக்கம் கொடுக்கப் போகிறதென்று தெரியவில்லை.

English summary
Recently BJP suspended its controversial MP Kirti Azad. But RSS, the mother body of BJP is unhappy over the way the party handled the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X