கோவா அரசியலில் பரபரப்பு! ஆளுநர் தனியாக சந்தித்த பாஜகவின் விஸ்வஜித் ரானே! காத்திருக்கும் ட்விஸ்ட்?
கோவா: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், திடீரென அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஸ்வஜித் ரானே ஆளுநரைச் சந்தித்துள்ளார்.
நடந்து முடிந்து 5 மாநில தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது பாஜக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதேநேரம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் அடுத்து யார் முதல்வர் என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள்.. முதல்வர் பிரமோத் சாவந்த் வெற்றி

கோவா
நாட்டிலேயே சிறிய மாநிலமான கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பாஜக 20 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களில் வெல்ல முடியவில்லை என்றாலும் கூட, உள்ளது. மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அங்கு பாஜக மீண்டும் ஆட்சிய அமைக்க உள்ளது.

ஆளுநருடன் சந்திப்பு
தற்போது கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் முதல்வராக உள்ளார். அங்குள்ள பாஜக நிர்வாகிகளும் பிரமோத் சாவந்திற்கு ஆதரவாகவே உள்ளனர். அதேநேரம் தற்போது சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள விஸ்வஜித் ரானேவும் முதல்வர் ரேசில் உள்ளார். தேசிய பாஜக உயர்நிலைக் குழுவின் ஆதரவு விஸ்வஜித் ரானேவுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் விஸ்வஜித் ரானே திடீரென கோவா ஆளுநரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

என்ன காரணம்
தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஆளுநரை சந்தித்ததாகத் தெரிவித்த விஸ்வஜித் ரானே, பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதேநேரம் விஸ்வஜித் ரானே ஆளுநரைச் சந்தித்துக் குறித்து கோவா பாஜக தரப்புக்கு எதுவும் தெரியாது என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரமோத் சாவந்த் முதல்வராகத் தொடர்வாரா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்குத் தெரியாது என்றே விஸ்வஜித் ரானே பதில் அளித்தார்.

பிரமோத் சாவந்த்
கோவா மாநிலத்திற்கு புதிய முதல்வர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் முதல் சில சுற்றுகளில் முதல்வராக இருந்த பிரமோத் சாவந்த் பின்னடைவேயே சந்தித்திருந்தார். சன்குலிம் தொகுதியில் போட்டியிட்ட பிரமோத் சாவந்த் வெறும் 650 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ் சக்லானியை தோற்கடித்திருந்தார்.