
மஹாராஷ்டிரா: சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வராததால் மகளுக்கு உறவுக்காரரை திருமணம் செய்துவைத்த தந்தை
(இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.)
திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்காரருக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பங்கரா என்ற கிராமத்தில் ஏப்ரல் 22ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான சுபநிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. அன்று மாலை மணமகள் மற்றும் உறவினர்கள் மணமகனின் வருகைக்காக காத்திருந்தனர். இரவு 8 மணி வரை மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்நிலையில், மணமகன் அவரது நண்பர்களுடன் மதுபோதையில் தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இரவு 8 மணிக்கு மண்டபத்திற்கு மதுபோதையில் வந்த மணமகனும் அவரது நண்பர்களும் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மணப்பெண்ணின் தாயார் "எங்கள் மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டோம்" என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் வெகு நேரமாக மணமகன் வராததால், உறவினருடன் பேசி திருமணத்திற்கு வந்திருந்த வேறு ஒருவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
பிரதமர் பதவியே இலக்கு - மாயாவதி
நாட்டின் பிரதமராக விரும்புகிறேனே தவிர குடியரசுத் தலைவராக அல்ல என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
- பாஜகவின் பேபி ராணி மெளரியாவை மாயாவதியுடன் ஒப்பிடுவது ஏன்?
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
முன்னதாக, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர பகுஜன் சமாஜ் கட்சி உதவியதாகவும் இதற்கு பிரதிபலனாக மாயாவதிக்கு குடியரசுத் தலைவர் பதவியை பாஜக அளிக்கக்கூடும் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, "அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச முதல்வராவதற்கு நான் இடையூறாக இருப்பதால், என்னை குடியரசுத் தலைவராக்க வேண்டுமென்று சமாஜ்வாதி கட்சி கனவு காண்கிறது.
நான் உத்தர பிரதேச முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ வர வேண்டுமென விரும்புகிறேனே தவிர, குடியரசுத் தலைவராக அல்ல.
எனது லட்சியத்தை பிரதமர் அல்லது உத்தர பிரதேச முதல்வரால் தான் நிறைவேற்ற முடியுமே தவிர குடியரசுத் தலைவரால் அல்ல. தலித்துகள், இஸ்லாமியர்கள், உயர் சாதி ஏழைகள் ஆகியோர் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்தால், கட்சித் தலைவரை முதல்வராக மட்டுமல்ல, பிரதமராக கூட உயர்த்த முடியும். மாறாக, சமாஜ்வாதி கட்சி அதன் சுயநல அரசியல் நோக்கங்களுக்காக என்னை குடியரசுத் தலைவராக்க வேண்டுமென கனவு காண்கிறது. அந்தக் கனவு பலிக்காது" என்றார்.
பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் கை சிதைந்தது
திருபுவனை அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் கை சிதைந்ததாக 'தினத்தந்தி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
திருவண்டார்கோவில் பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரா (வயது 55), கட்டட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை மதகடிப்பட்டு பகுதியில் கட்டட வேலைக்கு செல்வதற்காக புதுச்சேரியில் இருந்து சன்னியாசிக்குப்பம் சென்ற தனியார் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் சந்திரா ஏறினார்.
திடீரென்று பேருந்து புறப்பட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார்.
இதில் அவரது இடது கை சிதைந்து ரத்தம் கொட்டியது. தற்போது அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இலங்கையில் மக்கள் எதிர்ப்பை சிவப்பு எச்சரிக்கையாக ஏற்று ஜனாதிபதி, அரசாங்கம் பதவி விலக வேண்டும்"
இலங்கையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராஜபக்ஷக்களின் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் நாடு அடிபணியும் காலம் கடந்துவிட்டது. எனவே, பணத்தைக் கொண்டு எந்தவொரு போராட்டத்தையும் இனி அவர்களால் முடக்க முடியாது.
சுமார் 300 பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கைகோர்த்துள்ளனர். எனவே, மக்களின் கோரிக்கைக்கு தலைவணங்கி அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்.
நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தினை அரசாங்கம் அதற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையாகக் கருத வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடையாது. ராஜபக்ஷக்கள் எவரும் அற்ற இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதுகுறித்து அவதானம் செலுத்துவோம்" என்றார்.
பதவி விலக்கினால் கௌரவக் குறைச்சல் - மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தகவல்
தற்போதைய அரசியல் நெருக்கடியின்போது பிரதமரையும் அமைச்சரவையையும் பதவி விலகுமாறு ஆளுந்தரப்பில் இருந்தே அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் பிரதமர் இருப்பதாகவும், இதனால் ஒரு சில ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடம் மஹிந்த ராஜபக்ஷ தனது கோபத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிய வருவதாக 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், "பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து தன்னை பதவி விலக்குவது தனக்கு கௌரவக் குறைச்சல் என்பதைப் போன்றும் சில கருத்துகளை பொருளாதார நெருக்கடி நிலைமையை அடுத்து உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளால், அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள இந்நிலையில், அடுத்ததாக எவ்வாறான தீர்மானங்களை எடுப்பது என்பது தெரியாது அரசாங்கம் தடுமாறிக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஆளுந்தரப்பு முக்கிய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், பிரதமரையும் அமைச்சரவையையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனராம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நீண்ட காலமாக அரசியலில் இணைந்து நீண்ட காலமாக அரசியலில் இணைந்து பணியாற்றிய சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர், தற்போது பிரதமரை சந்திப்பதைக் கூட தவிர்த்து வருவதாகவும் தெரியவந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=SlICQl01yHE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்