For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘கேமிராவே என் ஆயுதம்’ - குப்பை சேகரிக்கும் பெண்மணியின் வெற்றிக் கதை!

By BBC News தமிழ்
|

"ஒரு நாள் போலீஸ்காரர் என் கையில் விலை உயர்ந்த கேமிரா இருப்பதை கண்டார். என்னிடம் எதுவும் கேட்காமல் அவர் என்னை அறைந்தார்."

மஹாராஷ்ட்ரா நாசிக் பகுதியை சேர்ந்த குப்பை சேகரிக்கும் மாயா கொட்வே இப்படியாகத்தான், அதாவது இந்த அடியுடன்தான் புகைப்பட பயிற்சியை தொடங்கினார்.

"நாசிக்கில் உள்ள ஓர் அமைப்பு குப்பை பொறுக்கும் எங்களில் சிலரை தேர்ந்தெடுத்து புகைப்பட கருவியை கையாளும் பயிற்சி அளித்தது. எங்களுக்கு பயிற்சி அளிக்க காரணமும் இருந்தது. அதாவது, எங்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் எங்களின் வாழ்நிலையை நாங்களே குறும்படமாக எடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்." என்கிறார் அவர்.

விலையுயர்ந்த கேமிரா எப்படி இருக்கும்?

ஒரு நாள் பயிற்சியின் போது நடந்த நிகழ்வொன்றை நினைவு கூர்கிறார். "எங்களுக்கு பயிற்சி முடிந்தவுடன், ஒரு நாள் எங்களுக்கு பயிற்சி அளித்த பயிற்றுநர்கள் எங்களை குப்பைக்கூடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சில புகைப்படங்களையும், காணொளிகளையும் எடுத்தோம். பின் அனைவரும் தேநீர் அருந்த சென்றனர். ஆனால், நான் செல்லாமல் அங்கேயே தங்கி புகைப்படம் எடுத்தேன். அப்போது இரண்டு போலீஸார் அங்கே வந்தனர். விலையுயர்ந்த புகைப்படக் கருவியில் புகைப்படம் எடுப்பதை கண்டவுடன், என்னிடம் எதுவும் கேட்காமல் என்னை அடித்தனர். என் போன்ற குப்பை பொறுக்கும் ஒரு பெண்ணிடம் எப்படி இப்படியான விலையுயர்ந்த கேமிரா இருக்கும்? நான் ஒரு திருடி என்று அவர்கள் நினைத்து இருக்கலாம்." என்கிறார் மாயா.

இன்று கேமிராவே என் ஆயுதம்

முன்பு கையில் கேமிரா இருந்ததால் போலீஸாரால் நான் தாக்கப்பட்டேன். ஆனால், இன்று அந்த கேமிராவே என் ஆயுதமாக இருக்கிறது என்கிறார் மாயா.

சிறு வயதில் மாயா தன் தாயுடன் குப்பை பொறுக்கும் பணியை மேற்கொண்டார். அவருக்கு முறையான கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மாயா கொட்வே
BBC
மாயா கொட்வே

"எங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான், நாங்கள் குப்பை பொறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். ஆனால், மக்கள் எங்களையும் குப்பையாகவே கருதுகின்றனர். நாங்கள் சாலையில் நடந்து செல்லும் போது, அவர்கள் தங்கள் மூக்கினை மூடிக் கொள்கிறார்கள். அது எங்களுக்கு சங்கடத்தினை ஏற்படுத்துகிறது. சங்கடம் மட்டும் அல்ல மனவலியையும் ஏற்படுத்துகிறது. நான் யோசிப்பேன், நாங்கள் குப்பைகளை அகற்றுகிறோம். பிறர் நல்வாழ்வு வாழ குப்பைகளை சுத்தம் செய்கிறோம். பின் ஏன் மக்கள் எங்களை மோசமாக நடத்துகிறார்கள்? இது மாற வேண்டும், ஆனால் என்னால் எப்படி இதனை மாற்ற முடியும்?" மாயா நினைவுகூர்கிறார்.

புகைப்பட கருவி மூலமாக

இந்த யோசனைதான் அவரை நாசிக் வளர்ச்சிக்கான அபிவியக்தி ஊடக நிறுவனத்தில் சேர தூண்டியது. 2011 ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் அவருக்கு புகைப்பட கருவியை கையாளும் பயிற்சி அளித்தது.

"நான் எப்போதும் பள்ளிக்கு சென்றதில்லை. எனக்கு எழுத, படிக்க தெரியாது. உங்களுடைய எண்ணம் பலரை சென்று சேர வேண்டுமானால், உங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இதற்காக நான் வேறொரு வழியை கண்டறிந்தேன். புகைப்பட கருவி மூலமாக என் எண்ணத்தை சொல்ல தொடங்கினேன்." என்கிறார் மாயா.

"மேலும் அவர், குப்பை பொறுக்கும் பெண்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால்,யாரும் எங்களுக்கு எதுவும் செய்வதில்லை. எங்கள் பிரச்சனைகள் வெகுஜன மக்களுக்கு தெரியுமா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. அதனால், எங்கள் பிரச்சனைகள் குறித்து நானே படன் எடுக்க எண்ணினேன். உங்கள் பிரச்சனைகள் என்னவென்று நீங்கள் சொல்லும் போது யாரும் கேட்கவில்லை என்றால், உங்கள் பிரச்சனைகள் என்னவென்று நீங்கள் காட்ட வேண்டும். அதைதான் நான் செய்தேன்" என்கிறார் அவர்.

ஏளனம் செய்தனர்

மாயாவிற்கு புகைப்பட கருவியை கையாளும் பயிற்சியை அளித்த அமைப்பானது, சிறிது காலத்திற்கு பின் அவர்களது பயிற்சி திட்டத்தை நிறுத்தியது. மாயாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதன் காரணமாக, குப்பை சேகரிப்பவர்களுக்கு நியாயத்தை கொண்டு வரும் மாயாவின் முயற்சிகள் தடைப்பட்டன.

"நான் கற்றவை அனைத்தும் வீணாகிவிடுமோ என்று அஞ்சினேன். ஆனால், 'வீடியோ தன்னார்வலர்கள்' என்ற அமைப்புடன் 2013 ஆம் ஆண்டு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. காணொளிகள் மூலம் சமூக நீதியை வென்றெடுப்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம். நான் அவர்களுக்காக வேலை செய்ய தொடங்கினேன். முதன்முறையாக இந்த காணொளி சார்ந்த என் பணிக்காக ஊதியமும் பெற்றேன்." என்கிறார் மாயா.

மாயாவின் முதல் காணொளி

"என்னுடைய முதல் காணொளியை என் வீட்டின் அருகே எடுத்தேன். கழிவு நீர் குழாய் உடைந்து, கழிவு நீர் எங்கள் பகுதி முழுவதும் சூழ்ந்தது. நான் இதனை படம் பிடித்தேன். மக்கள் என்னை கண்டு சிரித்தனர். நான் பைத்தியம் ஆகிவிட்டேன் என்றனர். ஆனால் படம் பிடித்து முடித்தவுடன், பிறருக்கு அந்த காணொளியை காட்டினேன். அவர்களுக்கு அந்த காணொளி மிகவும் பிடித்துவிட்டது. பின் அந்த காணொளியை எடுத்துக் கொண்டு அரசு அலுவலகத்திற்கு சென்றோம். அந்த காணொளியை காட்டி நியாயம் கோரினேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, அலுவலர்கள் வந்தனர். கழிவு நீர் குழாயை சரி செய்தனர். என் புகைப்பட கருவி வென்ற முதல் தருணம் அதுதான். எனக்கு நம்பிக்கை ஏற்பட்டதும் அப்போதுதான்." என்கிறார் மாயா.

தொழிற்நுட்பங்களை புரிந்து கொள்ளுதல்

மாயா அனைத்து தொழிற்நுட்பங்களையும் கற்று கொண்டார். அவரிடம் பேசிய போது அவர் சரளமாக பல படத்தொகுப்பு மென்பொருள் குறித்து பேசுகிறார்.

முன்பெல்லாம் தொழிற்நுட்பம் குறித்தெல்லாம் அதிகம் கவலை கொள்ள மாட்டேன். படத்தொகுப்பு குறித்தெல்லாம் தெரியாது. ஆனால், காலம் செல்ல செல்ல தொழிற்நுட்பத்தின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டேன். குறைந்த வார்த்தைகளில் சொல்லி அதிக விளைவை ஏற்படுத்த தொழிற்நுட்பம் முக்கியம் என்பதை அறிந்து புரிந்து, அவற்றை கற்க தொடங்கினேன். ஆனால், படத்தொகுப்பு குறித்து பயிற்சி அளிக்கும் தரவுகள் எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்தது. என்னால் எதனையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

மெல்ல மெல்ல போராடி அனைத்தையும் கற்றேன். இப்போது என் விருப்பம் மற்றும் கனவெல்லாம் இன்னொரு மாயாவை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

தொடர்புடைய செய்திகள்:

BBC Tamil
English summary
"நான் எப்போதும் பள்ளிக்கு சென்றதில்லை. எனக்கு எழுத, படிக்க தெரியாது. உங்களுடைய எண்ணம் பலரை சென்று சேர வேண்டுமானால், உங்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இதற்காக நான் வேறொரு வழியை கண்டறிந்தேன். புகைப்பட கருவி மூலமாக என் எண்ணத்தை சொல்ல தொடங்கினேன்."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X