For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஒன்றரை மாதத்தில் உடைந்தது

By BBC News தமிழ்
|
Check Dam built in the Then Pennai River broke in an one and half month
BBC
Check Dam built in the Then Pennai River broke in an one and half month

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை திறந்து ஒன்றரை மாதத்தில் உடைந்துள்ளது. இதுதொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை பொறியாளர் உட்பட நான்கு பொறியாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு.

விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில், கடந்த 2019ஆம் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, தடுப்பணை திறக்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்த தடுப்பணை கரைப்பகுதி, ஒன்றரை மாதத்திற்கு உள்ளாகவே உடைந்து நீர் வெளியேறியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக தென்பெண்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமார்‌ 14 அடி உயரம் கொண்ட தடுப்பணை முழுவதும் நிரம்பும் அளவிற்கு நீர் வழிந்தோடியது. ஒரு மாதத்திற்கு மேலாகத் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருந்தது. குறிப்பாக இந்த தடுப்பணை மூலமாக தேக்கி வைக்கும் நீரானது எனதிரிமங்கலம் அடுத்த நீர் வரப்புகளான சுமார் 14 ஏரிகளுக்குமே செல்கிறது. மேலும் விழுப்புரம் தளவானூர் அடுத்துள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.

தடுப்பணை
BBC
தடுப்பணை

இந்த நிலையில் அணைக்கட்டின் எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள கரைப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தடுப்பணையில் இருந்து நீர் வெளியேறியது. உடைப்பு குறித்துத் தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஜவகர் மற்றும் உதவி செயற் பொறியாளர் சுமதி ஆகியோர் தலைமையிலான பொதுப் பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆறு மதகுகள் வழியாகச் சேமிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றினர்.

இதன் காரணமாக தடுப்பணையை ஒட்டியுள்ள ஆற்றுப் பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, இருப்பினும் உபரி நீர் செல்லக்கூடிய தென்பெண்ணை ஆற்று பகுதியாக இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை. இருந்தபோதிலும் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக சேமிக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் தடுப்பணையை ஒட்டி இருக்கக் கூடிய தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தடுப்பணை
BBC
தடுப்பணை

தடுப்பணை உடைப்பு குறித்து விளக்கமளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தை இணைக்க தடுப்பணை கட்டப்பட்டது. அதைக் கட்டி நிறைவடையும் தறுவாயில் ணை நிரம்பியது. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பணை கட்டி திறப்பதற்கு முன்பாகவே இங்கே பெய்த தொடர் கன மழை காரணமாக மூன்று முறை நிரம்பி இருக்கிறது. அணை உடைந்தது என்பது தவறு, எனதிரிமங்கலம் பகுதியில் இருக்கும் தடுப்புச் சுவர் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டதால், இவ்வாறு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர்," என்றார் அவர்.

"இந்த விபத்து இயற்கையாக ஏற்பட்டதா அல்லது சில மனித தவறுகளால் ஏற்பட்டதாக என்பது குறித்து உயர்மட்ட குழுவிலிருந்து பொதுப்பணி செயலாளர் உட்பட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதே சூழலில் மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணை என்பது நன்றாக இருக்கிறது, தற்போது தடுப்புச் சுவரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சீர் செய்யப்படும்," என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் உட்பட நான்கு பொறியாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது, விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 5.35 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

சேதம்
BBC
சேதம்

தடுப்பணை கட்டுமானப் பணியில் கவனக்குறைவாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சென்னை நீர்வளத்துறையை சேர்த்த தலைமை பொறியாளர் கே.அசோகன், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.சுரேஷ், குடிநீர் வடிகால் உட்கோட்ட செயற்பொறியாளர் எ.ஜவஹர் மற்றும் உதவி செயற்பொறியாளர் பி.சுமதி ஆகிய நான்கு பேர் மீதும் தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதி 17(b) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியிடம் பேசியபோது, "புதிதாக கட்டப்பட்ட இந்த தடுப்பணை ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. திறந்து 33 நாட்களில் உடைந்துவிட்டது. தரமில்லாமல் கட்டப்பட்டதால் இந்த தடுப்பணை சாதாரண மழை தண்ணீருக்கே விழுந்துவிட்டது. குறிப்பாக 40, 50 சதவீத கமிஷனுக்காக இதுபோன்ற பணியை செய்ய ஒப்பந்ததாரர்களிடம் வேலை கொடுக்கின்றனர். அவர்கள் பெரும் குறைந்த பணத்தை கொண்டு எவ்வாறு தரமுள்ள தடுப்பணை கட்ட முடியும். இதில் தற்போது சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மூலம் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Check Dam built in the Then Pennai River broke in an one and half month
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X