• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது.

By BBC News தமிழ்
|
வெற்றிலை
Getty Images
வெற்றிலை

"கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்" என்பது பாரதியின் பாடல். அத்தகைய சிறப்பு பெற்ற காவிரிக்கரை கும்பகோணம் வெற்றிலைக்கு 'புவிசார் குறியீடு' பெற தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விண்ணப்பித்துள்ளது.

புவிசார் குறியீடு பெறுவதன் முக்கியத்துவம்

தனித்தன்மையோடு, குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பும் சந்தை மதிப்பும் ஏற்படுத்தும் வகையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு பெறும் பொருட்களை, அதே பெயரில் வேறு இடத்தில் உற்பத்தி செய்ய முடியாது. விற்பனை செய்யவும் கூடாது என்கிற சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது.

புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது, இதற்கான அட்டவணை இந்த பொருள் எந்த ஊரில் அல்லது வட்டாரத்தில் அல்லது மாவட்டம் முழுவதும் தயாரிக்கப்படுகிறது என்று ஆராய்ந்து அந்த ஊரின் பெயர் மற்றும் வட்டாரம், மாவட்டம், மாநிலம் பெயர் குறிப்பிட்டு அதற்கான வரைபடமும் வைக்கப்படும்.

அந்த ஊர் அல்லது வட்டாரங்களில் மட்டும்தான் இந்த பெயரை பயன்படுத்தி தயாரித்து விற்பனை செய்ய முடியும். இதன்மூலம் பொருள் தயாரிக்கும் உரிமையாளர்கள் ஒரு வட்டத்திற்குள் வருவார்கள். அவர்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் உறுதித்தன்மை , தரம் அங்கு மட்டும்தான் கிடைக்கும் என்கிற நம்பகத்தன்மை ஏற்படும். புவிசார் குறியீடு பெற்ற பிறகு அதை வாங்குவோர் எண்ணிக்கை கூடினால், பொருள் உற்பத்தி பெருகும். சிறு, குறு நடுத்தர பொருள் தயாரிப்போர் நிலையும் உயரும் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

வெற்றிலை
BBC
வெற்றிலை

இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) 1999 நிறைவேற்றப்பட்டு, கடந்த 2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. அதன்படி, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, ஈரோடு மஞ்சள், பத்தமடை பாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

அந்தவரிசையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்று வட்டாரங்களில் விளையும் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அண்மையில் விண்ணப்பித்துள்ளது.

ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு

உலக வர்த்தக உடன்படிக்கையில் 156 நாடுகள் உறுப்பினர் நாடுகளாக உள்ளன. இந்த உறுப்பு நாடுகள் அனைத்தும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை அங்கீகாரம் செய்கின்றன.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவசாயம் சார்ந்த பொருட்களை மற்றும் உணவு சார்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குகிறது.

அந்த வகையில் கும்பகோணம் வெற்றிலை ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யவும் வழிபிறக்கும் என்கிறார் தமிழ்நாடு அரசின் புவிசார் குறியீடு பொறுப்பு அலுவலர் , புவிசார் குறியீடு அட்டர்னியாக உள்ள வழக்குரைஞர் சஞ்சய் காந்தி.

தொடர்ந்து சஞ்சய் காந்தி பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கும் முன்பு ஒரு பி.எச்டி செய்வதைப் போல ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். அப்படித் திரட்டி இது வரை 26 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளேன்" என்றார்.

குறிப்பாக, புவிசார் குறியீடு பெற அந்த பொருளின் தனித்துவம், தயாரிப்பு முறை, தரம், புவியியல் , வரலாற்று பின்னணி உள்ளிட்டவை மிக முக்கியம்.

தமிழ்நாட்டில் உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்களில் பாக்குவெட்டிகள் கிடைத்துள்ளன. இவை மத்திய காலத்தை சேர்ந்தவை (கிபி.10-முதல் 14 ம் நூற்றாண்டு) இக்காலம் முதலே காவிரி படுகையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கம் இருந்ததை இந்த அகழ்வாராய்ச்சி உறுதி செய்துகிறது.

எனவே தான் பல நூறாண்டுகளாக காவிரி டெல்டாவில் பயிரிடக்கூடிய கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்திருப்பது என்பது முதல் நிலைதான். அடுத்த 2 நிலைகளுக்கு பிறகே புவிசார் குறியீடு உறுதி செய்யப்படும்.'' என்கிறார் சஞ்சய் காந்தி.

விவசாயிகள் நம்பிக்கை, மகிழ்ச்சி

காவிரி ஆற்று படுகையில் விளைவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் இந்த வெற்றிலை. கும்பகோணம் பகுதியில் அதிகம் விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை என பெயர் பெற்று விளங்குகிறது. குறிப்பாக, கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள திருவையாறு, ராஜகிரி, பாபநாசம், பண்டாரவாடை, ஆவூர், உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து வெற்றிலை விவசாயியும் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாருமான திருப்பந்துருத்தி சுகுமாறன் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழகம் விண்ணப்பித்துள்ளது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்ற பயிர்கள் போல் இல்லாமல் வெற்றிலைப் பயிர் சாகுபடி செய்ய காப்பீடு, அரசு உதவிகள் கிடைப்பதில்லை.

சாகுபடி பணி தொடங்கி 8, 9 மாதங்களுக்குப் பிறகுதான் வருவாய் ஈட்ட முடியும். அதுவரை செலவினம் தொடரும். லட்சக் கணக்கில் செலவு செய்தாலும் கனமழை பெய்து பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைப்பதில்லை.

மிகுந்த சிரமங்களுக்கு இடையே தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறோம். பலரும் வெற்றிலை சாகுபடியில் இருந்து விலகி விட்டனர். இத்தகைய சூழலில் புவிசார் குறியீடு கிடைத்தால் வெற்றிலை விவசாயிகளுக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும். நாங்களும் ஊக்கம் பெறுவோம். எனவே வேளாண் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி எங்களுக்கு புது நம்பிக்கையளித்துள்ளது என்கிறார்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொடர் முயற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய (CARDS) இயக்குநர் கே.ஆர்.அசோக் பிபிசி தமிழிடம் கூறுகையில்,

"வேளாண்மை சார்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தனி அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தனி சந்தை மதிப்பு கிடைக்கிறது. ஆகையால், வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை மையத்தின் மூலம் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது வரை ஈரோடு மஞ்சள், சிறுமலை வாழை, மதுரை மல்லி, மலபார் மிளகு, கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ராமநாதபுரம் முண்டு சில்லிக்கு (குண்டு வர மிளகாய்) ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளோம். இப்போது தனித்துவம் பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு விண்ணப்பித்துள்ளோம்.

தொடர்ந்து வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறும் பணியில் பல்கலைக்கழக அறிவுசார் சொத்துரிமை மேலாண்மை மையத்தின் மூத்த பேராசிரியை அஞ்சுகம் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளார்." என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், வீணை, தலையாட்டி பொம்மை, சுவாமிமலை வெண்கல சிலை உள்பட 9 கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. வேளாண்மை உற்பத்தி பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு பெறப்படவில்லை. சீரக சம்பா அரிசியைத் தொடர்ந்து

தற்போது கும்பகோணம் வெற்றிலைக்கும் கன்னியாகுமாரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீட்டுக்கு சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார் சஞ்சய் காந்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Chennai Agricultural University applies for geographical indication list for kumbakonam betel leaves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion