தீபாவளி ஸ்பெஷல்.. பானை செய்யும் தொழிலாளி கண்டுபிடித்த ‘மேஜிக் விளக்கு’.. குவியும் ஆர்டர்கள்!
ராய்பூர்: தீபாவளி பண்டிகையையொட்டி சத்தீஸ்கரைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி வடிவமைத்துள்ள மேஜிக் விளக்கு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சந்தையில் புதுப்புது பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி ஒருவர் மண் விளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கொண்டகோன் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சக்ரதாரி. பானை செய்யும் தொழிலாளியான இவர், தீபாவளி பண்டிகையையொட்டி 24 மணி நேரம் எரியக் கூடிய மண் விளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.

மேஜிக் விளக்கு
ஆன்லைனில் பல வீடியோக்களை பார்த்து, தனது திறமைகளை பயன்படுத்தி இந்த விளக்கை அவர் வடிவமைத்துள்ளார். இந்த விளக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது தொடர்ந்து 24 மணி நேரம் எரியக் கூடியது. எனவே இதனை மேஜிக் விளக்கு என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சந்தையில் அறிமுகம்
மேஜிக் விளக்கின் மேற்பகுதியில் எண்ணெய் ஊற்றி வைக்க தனியாக ஒரு கூடு உள்ளது. அதில் இருந்து மெல்லி டியூப் வடிவத்திலான உருளையின் வழியே தீபம் எரியும் பகுதிக்கு எண்ணெய் தானாகவே சென்றுவிடும். இதன் மூலம் இந்த விளக்கு தொடர்ந்து 24 மணி நேரம் வரை எரிய வகை செய்யப்பட்டுள்ளது. இந்த விளக்கை அவர் சமூகவலைதளங்கள் மூலம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தீபாவளி
தீபாவளி என்றாலே தீப ஒளி என்பது தான் பொருள். எனவே அன்றைய தினம் மக்கள் வீடுகளை விளக்குகளால் அலங்காரப் படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். அகல் விளக்கு ஏற்றினால் விரைவில் எண்ணெய் தீர்ந்து விடும் என்பதாலேயே மின்சார விளக்குக்கு பலர் மாறி வருகின்றனர்.

மகிழ்ச்சி
இந்த சூழ்நிலையில் அகல் விளக்கே 24 மணி நேரம் தொடர்ந்து எரியக்கூடிய வகையில் உள்ளதென்பதால், இந்த மேஜிக் விளக்கிற்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. பாரம்பரியமான முறையில் அதே சமயம் பார்ப்பதற்கும் அழகாக இருப்பதால் இந்த விளக்கை மக்கள் விரும்பி வாங்குவதாக கூறி, அசோக் சக்ரதாரி மகிழ்ச்சியில் இருக்கிறார்.