For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார் பாணியில் உ.பி.யில் பகுஜன் சமாஜ்- காங்கிரஸ் கை கோர்க்கிறது?

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டதைப் போல உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மகா கூட்டணியை அமைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் பீகாரைப் போல ஒரு மகா கூட்டணியை அமைப்போம் என பகுஜன் சமாஜ் கட்சிக்கு தூண்டில் போட முயற்சிகிறார் முதல்வர் அகிலேஷ் யாதவ். ஆனால் இப்படியான ஒரு மகா கூட்டணியின் தலைவரான தந்தை முலாயம்சிங் யாதவ் சில மாதம் முன்புவரை இருந்தார் என்பதை அகிலேஷ் மறந்துவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம்தான் அனைத்து ஜனதா பெயரிலான கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரண்டு 'ஜனதா பரிவாராக' உருவெடுத்து முலாயம்சிங் யாதவை தலைவராக்கின. இதில் சமாஜ்வாடி கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்டவையும் இணைந்திருந்தன. இந்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பீகார் தேர்தலை எதிர்கொள்ளவும் சபதமேற்றன.

ஆனால் செப்டம்பர் மாதமோ, இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முலாயம்சிங் யாதவ். இருந்தபோதும் பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஐக்கிய ஜனதாதளம்- ராஷ்டிரிய ஜனதாதள கூட்டணிக்குக் கிடைத்தது.

பீகாரில் இப்படி ஒரு மகா கூட்டணி மூலம் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே ஒரு மகா கூட்டணி உருவாக வேண்டும் என்ற கருத்து பரவி வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டு பகுஜன் - காங்கிரஸ் கூட்டணி, சட்டசபை தேர்தலை எதிர்கொண்டபோதும் பெரிய அளவு பயனில்லாமல் போனது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இருப்பினும் காலங்கள் மாற கால்குலேஷன்களும் மாறிக் கொண்டிருக்கின்றன..

பகுஜன், காங்கிரஸ் வாக்கு வங்கி

பகுஜன், காங்கிரஸ் வாக்கு வங்கி

2012ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 25.9% வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 11.7% வாக்குகளையும் பெற்றிருந்தன.

இந்த இரு கட்சிகளின் வாக்கு சதவீதம் இணையும் போது சமாஜ்வாடி மற்றும் பா.ஜ.கவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சமாஜ்வாடி கட்சியின் வாக்கு சதவீதம் 29.1%; பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் 15%.

மோடி அலையும் வாக்கு சதவீதமும்

மோடி அலையும் வாக்கு சதவீதமும்

கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 15%-ல் இருந்து 42.6% ஆக உயர்ந்தது. இதற்கு காரணம் நாடு முழுவதும் வீசியதாக சொல்லப்பட்ட மோடி அலை. ஆனால் இந்த மோடி அலை தொடரவில்லை என்பதை டெல்லி, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

சரிந்த பா.ஜ.க. வாக்கு வங்கி

சரிந்த பா.ஜ.க. வாக்கு வங்கி

2014 லோக்சபா தேர்தலில் டெல்லியில் 46.6%; பீகாரில் 29.9% வாக்குகளை பா.ஜ.க. பெற்றிருந்தது. ஆனால் சட்டசபை தேர்தலில் டெல்லியில் 32.1%; பீகாரில் 24.5% ஆக குறைந்து போனது.

தற்போதைய நிலையில் 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 15% முதல் 42%-க்கும் இடையேயான வாக்கு சதவீதத்தைப் பெறுவது உறுதியாகி உள்ளது.

பகுஜன் சமாஜ் நிலை

பகுஜன் சமாஜ் நிலை

அதேபோல் 2014 லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியிருந்த போதும் அதன் வாக்கு சதவீதம் சுமார் 20% என்பது உறுதியாக இருக்கிறது. பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் 42.6%-ல் இருந்து சரிவை எதிர்கொள்ளும் போது அந்த சரியும் வாக்குகள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அது அமைக்கப் போகும் கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்

சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்

அதே நேரத்தில் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் விரும்புவதைப் போல நிச்சயமாக பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடியுடனான கூட்டணியை விரும்பாது. 1993ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. முலாயம்சிங் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆதரவு அளித்தார்.

ஆனால் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மிக மோசமான மனக் கசப்பு வன்முறையாக வெடித்தது. 1995ஆம் ஆண்டு லக்னோ அரசு விருந்தினர் மாளிகையில் மாயாவதியை சமஜ்வாடி தலைவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தீராத கோபத்தில் இன்னமும் இருக்கிறார் மாயாவதி.

இச்சம்பவத்துக்கு முலாயம்சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே இரு கட்சிகளிடையேயான கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்கலாம் என்பது மாயாவதி நிலைப்பாடு.

பீகார் நிலவரம் வேறு

பீகார் நிலவரம் வேறு

ஆனால் பீகாரில் அப்படி அல்ல.. நிதிஷ்குமாருக்கும் லாலுவுக்கும் இடையேயான மிக சரியான தெளிவான புரிதல் இருந்தது.. இருவரும் பரஸ்பர எதிரிகளாக ஹிட் அஜெண்டாவுடன் செயல்படாமல் நட்புசக்திகளாக இருந்ததால் அவர்களால் வெல்ல முடிந்தது.

கணிசமான பிராமணர் வாக்குகள்

கணிசமான பிராமணர் வாக்குகள்

2007 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உதவின. அது சமாஜ்வாடி கட்சியின் யாதவ்- தாகூர் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த பிராமணர் வாக்குகளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வந்துவிடவில்லை. சுமார் 10% வாக்குகள் ஷிப்ட் ஆன நிலையில் சமாஜ்வாடி கட்சியை வீழ்த்த முடிந்தது.

சமாஜ்வாடி- காங். கசப்பு உறவு

சமாஜ்வாடி- காங். கசப்பு உறவு

சமாஜ்வாடி- பகுஜன் உறவு எப்படி ஒட்ட முடியாத ஒன்றாக இருக்கிறதோ அதேபோல் காங்கிரஸ்- சமாஜ்வாடி உறவும் இருக்கிறது. 1989ஆம் ஆண்டு ஜனதா தளத்தின் தலைவராக இருந்த போது பா.ஜ.க. உதவியுடன் முதல் முறையாக முதல்வரானார் முலாயம். அதன் பின்னர் பா.ஜ.க.வை எதிர்த்தார்; பாபர் மசூதி விவகாரத்தில் 'மவுலானா முலாயம்' என பேசப்படும் வகையில் முஸ்லிம்களை ஆதரித்தார். அதே நேரத்தில் 1999ஆம் ஆண்டு வாஜ்பாயின் 13 நாள் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸுடன் கை கோர்க்க முலாயம்சிங் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சமாஜ்வாடியுடன் போவதைவிட பகுஜன் கட்சியுடன் கூட்டணி அமைப்பதையே காங்கிரஸ் விரும்பும்.

முஸ்லிம் வாக்குகள்

முஸ்லிம் வாக்குகள்

உத்தரப்பிரதேசத்தில் மிக முக்கியமானது முஸ்லிம்கள் வாக்குகள். காங்கிரஸும்- பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்தால் பெரும்பகுதியான முஸ்லிம் வாக்குகள் அந்த அணிக்கு தாவிவிடும்.

இதை சமாஜ்வாடி கட்சி நன்கே உணர்ந்திருக்கிறது. அதனால்தான் மகா கூட்டணியைப் பற்றி பேசிவருகிறார். முஸ்லிம்கள் மத்தியில் தாத்ரி சம்பவங்கள், முசாபர்நகர் வன்முறைகள் ஆறாத வடுவாக இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகள் இதே அச்சத்துடன் வாழப் போகிற அவர்களது வாக்குகளை நிச்சயம் சமாஜ்வாடி கட்சி இழக்கத்தான் நேரிடும். இது காங்கிரஸ்- பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு பெரும் பலமாகவும் அமையும்.

காங்- பகுஜன் கூட்டணி அமைந்தால்

காங்- பகுஜன் கூட்டணி அமைந்தால்

ஆக காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்தால்

  • இரு கட்சிகளுக்கும் இயல்பாக இருக்கும் சுமார் 30%க்கும் மேற்பட்ட வாக்குகள்
  • இதனுடன் பா.ஜ.க.வுக்கு தற்போது உள்ள வாக்கு சதவீதத்தில் இருந்து பிரியும் வாக்குகள்
  • முஸ்லிம்கள் வாக்குகள்
  • இணைந்தால் நிச்சயம் இந்த கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றவே வாய்ப்பிருக்கிறது. ஆகையால் பீகாரைப் போல உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகா கூட்டணி அமைத்தால் அகிலேஷையும் பாஜகவையும் வீழ்த்திவிட முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
Political analysts said that , if BSP- Congress to develop Maga alliance it should capture the power in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X