
"டார்கெட் கோவா.." வியூகம் வகுத்து களமிறங்கிய ப.சிதம்பரம்.. புத்துணர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
பானஜி : தமிழகத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சட்டமன்ற தேர்தலை ஒட்டி அக்கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் கோவா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ் உறுப்பினர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ,மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த நிலையில் அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
5 மாநில தேர்தல்.. அரசியல் பேரணிகளுக்கு வரும் பிப். 11 வரை தொடரும் தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு!
கோவா சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கோவா தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்காகவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பாஜக போராடி வரும் நிலையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

கோவாவில் ப.சிதம்பரம்
கடந்த முறை இழந்த சட்டசபையை இந்தமுறை எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வியூகம் வகுக்க கோவா தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவா மாநிலத்தில் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் கடந்த 5 மாதங்களாக தீவிர அரசியல் பணியாற்றி வருகிறார். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறை கோவா செல்லும் அவர் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று அதிக அளவிலான கூட்டங்களை நடத்தி உரையாற்றி வருகிறார் உறுப்பினர் சேர்க்கை முதல் வேட்பாளர் தேர்வு வரை அவரது வியூகம் தான் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 நிமிடங்களில் ஆட்சி
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவாவில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்த போதிலும் கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தவறியதற்காக தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொண்ட சிதம்பரம் இந்த முறை பெரும்பான்மை கிடைத்தால் ஐந்து நிமிடங்களில் கட்சி ஆட்சியமைக்கும் என கூறியது தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேர்தல் வியூகம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோவா பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உடன் இணைந்து பல நுட்பமான திட்டங்களை வகுத்து வருகிறார் ப சிதம்பரம். கடந்த நான்கு மாதங்களாக சிதம்பரம் கோவாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருவதோடு தொகுதி அளவிலான தலைவர்களை சந்தித்து தேர்தல் யுக்திகளைப் பற்றி விவரித்து வருகிறார் மேலும் கட்சி உறுப்பினர்களை அதிகரிக்கவும் நம்பகமான ஊழியர்களை சேர்ப்பதற்காகவும் சிதம்பரம் அதிக கவனம் செலுத்தி வருவதாக காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

காங்கிரஸ் பாராட்டு
இது குறித்து பேசிய கோவா மாநில முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை சிதம்பரம் கோவாவில் நான்கு நாட்கள் முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்றும் பூத் கமிட்டிகள், மாவட்ட குழுக்களை ஏற்படுத்தி கட்சி தொண்டர்களை சந்தித்து அவர்கள் பிரச்சினை என்ன என்பதை அவர் அறிய முயன்றதாகவும், தொகுதி தலைவர்களையும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை சிதம்பரம் சந்தித்து உரையாடியதன் காரணமாக கட்சி வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

விரல் நுனியில் தகவல்கள்
கடந்த செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து விஷயங்களையும் சிதம்பரம் தனது கை விரல் நுனியில் வைத்திருந்ததாகவும் பிரசுரங்களை வடிவமைப்பது முதல் பிரசாரத்தின் முறையை தீர்மானிப்பது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது வரை சிதம்பரம் களத்தில் இறங்கி பணியாற்றியதையும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார் என உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் கூறியுள்ளனர்.