
ஒழுங்கா ”பாஜக”வோடு கூட்டணி வையுங்க! - முதல்வர் உத்தவுக்கே உத்தரவு போட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ
கவுஹாத்தி: மக்கள் விருப்பப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடர உத்தவ் தாக்கரே முன்வர வேண்டும் என மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏவுமான தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
மகாராஷ்டிரா அரசியல்.. உத்தவ் தாக்கரேவின் ட்விஸ்ட்.. மனைவி மூலம் பேச்சுவார்த்தை..!

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்துள்ளது.

தகுதிநீக்க நோட்டீஸ்
இதற்கிடையே மகாராஷ்டிரா அரசுக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராகவும், தலைமையின் உத்தரவை மீறி கூட்டத்தை புறக்கணித்த 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி துணை சபாநாயகரை சிவசேனா கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை துணை சபாநாயகர் அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம் தடை
இந்நிலையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் அனுப்பி வைத்த தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு, துணை சபாநாயகர், சட்டசபை செயலர் உட்பட அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் அதுவரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ. கடிதம்
இந்த நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏவுமான தீபக் கேசர்கர் 4 பக்க கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்துத்துவத்தை பாதுகாப்பதாகவும், தாங்கள் கிளர்ச்சியாளர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சிவசேனாவின் சுயமரியாதையை காப்பதற்காகவே போராடுவதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் விருப்பப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தொடர உத்தவ் தாக்கரே முன்வர வேண்டும்." என்று வலியுறுத்தி இருக்கிறார்.