For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சிவாஜி உயிரோடு இருந்தாரா... அவரிடம் விசாரணை நடந்ததா".. திருதிருவென விழித்த ஜெ. வக்கீல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாசித்த சொத்துப்பட்டியல், செலவு பட்டியல், என பெங்களூரு நீதிமன்றமே சுறுசுறுப்பாக இருந்தது.

அரசு தரப்பு இறுதி வாதம் முடிந்த உடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் இறுதி வாதம் தொடங்க வேண்டும் என்று நீதிபதி குன்ஹா உத்தரவிட்டும் சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது ஜூன் 20 ஆம் தேதியன்று ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் தொடங்கியது.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தனது வாதத்தை அதிரடியாக தொடங்கி தனது கட்சிக்காரர் தரப்பில் இருந்த நியாயங்களை அடுக்கினார். தொடக்கத்திலேயே தனிமனித சுதந்திர பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக ஜெயலலிதாவின் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினார்கள் என்றார். ஐந்து நாட்கள் ஆய்வு என்ற பெயரில் மீடியாக்களை அனுமதித்து படம் பிடித்து வெளியிட்டது தவறு என்று கூறிய அவர், வீட்டு உரிமையாளர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருக்கும்போதுதான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை அப்பட்டமாக மீறினார்கள்.

வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் சேர்த்தார் என்ற வழக்குக்கு கைதுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்களிடம் விசாரித்து இருக்கலாம் என்று கூறிய அவர், அடுத்தடுத்த நாட்களில் அவர் வாதிட்டது அனைவரையும் வாயடைக்கச் செய்தது. அவரின் வாதங்களை மேற்கொண்டு படியுங்களேன்.

திருமணத்திற்கு ரூ.6 கோடி

திருமணத்திற்கு ரூ.6 கோடி

இந்திய வரலாற்றிலேயே முதன்முதலில் இந்த வழக்கில்தான், ஒரு திருமணத்துக்கு ஆன செலவுகளை மதிப்பீடு செய்திருப்பதாக நான் கருதுகிறேன். இந்த வழக்கில் சுதாகரனின் திருமணத்துக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து எப்படி துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியும்?

ராம்குமாரின் செலவு

ராம்குமாரின் செலவு

சுதாகரனின் திருமணச் செலவை ஜெயலலிதா செய்ததாகப் பொய் சாட்சிகள் மூலம் ஜோடித்து இருக்கிறார்கள். ஆனால், இந்தத் திருமணச் செலவை நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார்தான் செய்தார். அதற்கு, வருமான வரியும் கட்டியுள்ளார்.

ஆசி வழங்க சென்றார்

ஆசி வழங்க சென்றார்

''சுதாகரனுக்கும், சத்தியலட்சுமிக்கும் 7.9.1995ல் திருமணம் நடந்தது. அன்று மணமக்களை வாழ்த்துவதற்காக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த என் மனுதாரர் ஜெயலலிதா அழைக்கப்பட்டார். இதைத் தெரிந்து கொண்ட அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரை வரவேற்க, சென்னை எம்.ஆர்.சி நகர் சாலைகளில் அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் வைத்தனர்.

பந்தல் செலவு இலவசம்

பந்தல் செலவு இலவசம்

திருமணப் பந்தலுக்கு 5,21,23,532 ரூபாய் செலவு ஆனதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அலங்காரப் பந்தலை சினிமா துறையில் புகழ்பெற்ற சினி ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அமைத்ததாகக் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. 1999ல் வருமானவரித் துறை அறிக்கையில் தோட்டா தரணி, ‘எனக்கு இரண்டு குடும்பத்தினரும் வேண்டப்பட்டவர்கள். அதனால் நான் பணம் எதுவும் வாங்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளித்தட்டுக்கள்

வெள்ளித்தட்டுக்கள்

கட்சித் தொண்டர்களுக்கு வழங்கிய சாப்பாடு, மினரல் வாட்டர், தாம்பூலத்துக்கான செலவுகளை சிலர் ஏற்றுக்கொண்டதற்கு ஏற்கெனவே சாட்சியம் அளித்துள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்ட முக்கிய வி.ஐ.பி.களுக்கு 100 வெள்ளித்தட்டுகளை சுதாகரனின் சகோதரர் பாஸ்கரன் வாங்கிக் கொடுத்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

இலவசக் கச்சேரி

இலவசக் கச்சேரி

திருமணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியும், மாண்டலின் சீனிவாசனின் சங்கீத நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. சிவாஜி குடும்பத்து விழா என்பதால் அந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை என்று சாட்சியளித்துள்ளனர்.

சிவாஜி வீட்டுத் திருமணம்

சிவாஜி வீட்டுத் திருமணம்

வி.என்.சுகாதரனின் திருமணத்துக்கு 6 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது தவறானது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத் திருமணம் என்பதால், அவரது குடும்பத்தினர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினர். சிவாஜி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சிவாஜியின் இரண்டாவது மகன் பிரபு நடித்த படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்ததன் மூலம் கிடைத்த பணம் முழுவதும் இந்தத் திருமணத்துக்காக செலவு செய்துள்ளனர். இதை அவர்கள் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளித்துள்ளனர்" என்றார் குமார்.

சிவாஜியிடம் விசாரணை

சிவாஜியிடம் விசாரணை

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்தத் திருமணம் நடைப்பெற்ற சமயத்தில் சிவாஜி உயிரோடு இருந்தாரா?" என்று கேட்டதும், குமார் யோசித்தார். அரசு வழக்கறிஞர் மராடி எழுந்து, ''சிவாஜி உயிரோடு இருந்தார்" என்றார். நீதிபதி, ''வழக்கு சம்பந்தமாக சிவாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டதா?" என்று கேட்டார். அதற்கு குமார், இல்லை என்று கூறினார்.

உறவினர்கள் அல்ல

உறவினர்கள் அல்ல

தொடர்ந்து வாதிட்ட குமார், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எனது கட்சிக்காரரான ஜெயலலிதாவின் உறவினர்கள் அல்ல. 3 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன், என் கட்சிக்காரரான ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல.

பினாமி சொத்துக்கள்

பினாமி சொத்துக்கள்

1988 பினாமி சட்டப்படி தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், ரத்த சம்பந்தமான உறவினர்கள் பெயரில்தான், பினாமி சொத்துகள் இருக்க முடியும். இந்த மூன்று பேரும் என்னுடைய கட்சிக்காரரின் உறவினர்கள் அல்லாத நிலையில், அவர்கள் பெயரில் உள்ள சொத்துகளையும் சேர்த்து எப்படி வழக்கு பதிவுசெய்ய முடியும்?

கம்பெனி பார்ட்னர்கள்

கம்பெனி பார்ட்னர்கள்

கம்பெனியின் பங்குதாரர்களாக, பார்ட்னராக இருந்தார்கள் என்பதை வழக்காக எப்படி போட முடியும்? இது முழுக்க முழுக்க தி.மு.க-வின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட வழக்குத்தான்'' என்றார்.

12000 புடவைகள்

12000 புடவைகள்

போயஸ் கார்டனில் 11.2.1997-ல் கைப்பற்றப்பட்ட 914 பட்டுப் புடவைகளின் மதிப்பு 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய். 6,195 பாலிஸ்டர் மற்றும் காட்டன் புடவைகளின் மதிப்பு 27 லட்சத்து எட்டாயிரத்து 720 ரூபாய் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். 12 ஆயிரம் புடவைகளை ஆறரை நேரத்தில் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். ஒரு புடவையை 2 செகண்டில் எப்படி மதிப்பீடு செய்ய முடியும்? மதிப்பீடு செய்த ரிப்போர்ட்டும் சமர்ப்பிக்கவில்லை.

அசிங்கப்படுத்திய அதிகாரிகள்

அசிங்கப்படுத்திய அதிகாரிகள்

புடவைகளை மதிப்பீடு செய்த பாலசுந்தரத்தை நீதிமன்றத்தில் விசாரிக்கவும் இல்லை. என் கட்சிக்காரர் செல்வ செழிப்போடு வாழ்ந்தவர். வழக்கு நடைபெற்ற காலகட்டத்துக்கு முன்பே அவர் நிறைய புடவைகள் வைத்திருந்தார். என் கட்சிக்காரரை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு செய்யப்பட்டது என்றார் வழக்கறிஞர்.

சான்றுகள் கிடையாது

சான்றுகள் கிடையாது

இந்த வழக்கில் ஏ1 ஆக சேர்க்கப்பட்டுள்ள என் மனுதாரருக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் ஃபங்ஷன் நடந்தால் வருவார்கள், போவார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இந்தப் புடவைகள் அனைத்தும் என் மனுதாரருடையதுதான் என்று சொல்ல முடியும்? இந்தப் புடவைகள் அனைத்தும் வழக்கு நடைப்பெற்ற காலத்தில் வாங்கியது என்பதற்கு எந்த சான்றும் கிடையாது.

செருப்புகள், கைக் கடிகாரங்கள்

செருப்புகள், கைக் கடிகாரங்கள்

அதேபோல போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகளின் மதிப்பு ரூ.2,00,902.45 என்று மதிப்பீடு செய்திருக்கிறார்கள். இந்த செருப்புகள் அனைத்தும் எனது மனுதாரருக்குச் சொந்தமானதல்ல.

'போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட ஏழு விலை உயர்ந்த வாட்ச்களின் மதிப்பு 9,03,000 ரூபாய் என்றும், 91 சாதாரண வாட்ச்களின் மதிப்பு 6,87,350 ரூபாய் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். இவை மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

தங்க ஆபரணங்கள்

தங்க ஆபரணங்கள்

''என் கட்சிக்காரர் ஜெயலலிதாவிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 871 விதமான தங்க ஆபரணங்கள் இருந்தது. 1987-88ல் 7 கிலோ 56 கிராமும், 1988-89ல் 1 கிலோ 26 கிராமும், 1989-90ல் 4 கிலோ 312 கிராமும், 1990-91ல் 8 கிலோ 385 கிராமும் வாங்கியிருந்தார்.

வருமான வரி கட்டினார்

வருமான வரி கட்டினார்

மொத்தம் 4 ஆண்டுகளில் 21 கிலோ 280 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். ஆக, இந்த நகைகள் அனைத்தும் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. இதற்கு முறையாக வருமான வரியும் கட்டியுள்ளார்.

சசிகலாவின் நகைகள்

சசிகலாவின் நகைகள்

வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, 30.3.1991ல் 1 கிலோ 931 கிராம் தங்க ஆபரணங்கள் வைத்திருந்தார். இவையும் வழக்கு காலத்துக்கு முன்பு வாங்கப்பட்டது.

கட்சிக்கு சொந்தமானது

கட்சிக்கு சொந்தமானது

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 468 வகையான நகைகளில், 1992 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு 27 வகையான நகைகள் கொடுத்தார்கள். இதன் மதிப்பு 3 கிலோ 365 கிராம். இந்த நகைகள் அனைத்தும் கட்சிக்கு சொந்தமானது. தலைமைக் கழகத்தில் வைக்க இடம் இல்லை என்பதால் ஜெயலலிதா வீட்டில் வைத்திருந்தார்கள். எனவே இதையும் ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

777 கிராம் தங்கம்

777 கிராம் தங்கம்

சுதாகரனின் திருமணத்துக்கு ஜெயலலிதா பரிசாக 11,94,381.50 ரூபாய் மதிப்புள்ள 777 கிராம் தங்கம் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர்கள், அதைக் கைப்பற்றவில்லை. நீதிமன்றத்தில் குறியீடு செய்யவும் இல்லை. அதனால், இந்த வழக்கில் அந்தத் தொகையையும் கணக்கில்கொள்ளக் கூடாது. ஆக மொத்தத்தில் என் கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே 27 கிலோ 588 கிராம் தங்க நகைகள் இருந்தது என்பது தவறானது.

வெள்ளிப் பொருட்கள்

வெள்ளிப் பொருட்கள்

போயஸ் கார்டனின் 1,116 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றியதாக நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் மதிப்பு 48,80,000 ரூபாய் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், என் மனுதாரரிடம் வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1,250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். வருமானவரி தீர்ப்பாயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பும் வழங்கியுள்ளது" என்று குமார் சொல்ல... நீதிபதி குறுக்கிட்டு, ''அந்த உத்தரவை வைத்து இந்த வழக்குக்குத் தடை வாங்கி இருக்கலாமே?" என்று கேட்க, "அந்த காலகட்டத்தில் தடை வாங்கவில்லை" என்றார் குமார்.

திட்டமிட்டே குறைத்தனர்

திட்டமிட்டே குறைத்தனர்

"நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் என் கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள். ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருவாய்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

சட்டத்திற்கு புறம்பாக

சட்டத்திற்கு புறம்பாக

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையை தொடங்கியது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது வரை சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர்.

விசாரணை அதிகாரி

விசாரணை அதிகாரி

தேவராஜன் என்கிற அரசு தரப்பு சாட்சியில் ஆரம்பித்து கடைசி சாட்சி வரை அனைவரையும் விசாரித்து, முதலில் ராகவன் என்கிற வழக்கறிஞர் மாதிரி குற்றப்பத்திரிகை தயாரித்து கொடுத்தார். அதில் வழக்கறிஞர் நடராஜன் திருத்தம் செய்தார். பிறகு, அப்போதைய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மேலும் சில திருத்தங்களை செய்து, ஒப்புதல் அளித்தார். இதன் பிறகு குற்றப்பத்திரிகையை அப்போதைய தலைமைச் செயலாளர் சரிபார்த்த பிறகே, விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதிலிருந்து விசாரணை அதிகாரி தன்னிச்சையாக செயல்படவில்லை என்பது தெரியவருகிறது.

நால்வரையும் விடுவிக்க

நால்வரையும் விடுவிக்க

எனவே இந்த வழக்கில் அப்போதைய திமுக அரசின் தலையீடு காரணமாக விசாரணை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் இருந்து அவர்கள் நால்வரையும் விடுவிக்க வேண்டும்" என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

சசி தரப்பு இறுதி வாதம்

சசி தரப்பு இறுதி வாதம்

பி. குமாரின் வாதம் நிறைவடைந்ததை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வாதங்கள் தொடங்கின. அவற்றை நாளை பார்க்கலாம்.

English summary
Jayalalitha's lawyer P.Kumar concluded his argument in the special court in Bangalore on her assts case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X