For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாநில உரிமைகளை கபளீகரம் செய்யும் அணை பாதுகாப்பு மசோதா'

By BBC News தமிழ்
|
அணை
Getty Images
அணை

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2010இல் அணைப் பாதுகாப்பு வரைவு மசோதாவை தயாரித்து மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. கடும் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு அந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் 2016-இல் இதே மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்து மாநிலங்களிடம் கருத்து கேட்டபோது எதிரான கருத்துகள்தான் பதிவு செய்யப்பட்டன.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் ஒரு மாநில அரசு தன்னுடைய சொந்த செலவில் கட்டிய அணைகள் அண்டை மாநிலத்தின் எல்லையில் இருந்தால், மத்திய அரசின் அணை பாதுகாப்பு ஆணையத்தின் கீழும் எந்த மாநில எல்லையில் இருக்கின்றதோ அந்த மாநிலத்தின் கீழும் நிர்வாகங்கள் போய்விடும்.

குறிப்பாக, தமிழகத்தில் முல்லை-பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், துணைக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளை தமிழக அரசு கட்டியிருந்தாலும் தமிழக-கேரள எல்லையில் இருப்பதால் இதனுடைய நிர்வாகம் தமிழக அரசைவிட்டுப் போய்விடும்.

அணை
Getty Images
அணை

தமிழகத்தின் நிதியில் கட்டப்பட்டும், கட்டுமானப் பணிகளில் தமிழக அரசு முயற்சியெடுத்தும் இந்த அணைகளை நிர்வகிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.

அணையின் முழுக் கட்டுப்பாடும், பராமரிப்பும் தமிழக அரசுக்கு மறுக்கப்படும். தமிழக அரசின் ஆதிபத்திய உரிமைகளை இந்த அணைகளில் இழக்கும். இந்த மசோதா உகந்ததல்ல, பிரச்சனையானது என்று முடிவெடுத்த பின்னும் திரும்ப அந்த மசோதாவை கொண்டு வருவது எந்த விதத்தில் நியாயம்?

சொந்த செலவில் ஒரு மாநிலம் வேறு மாநிலத்தில் அணையைக் கட்டினால், அதைக் கட்டிய மாநிலத்திற்குதான் அந்த அணைக்கான பராமரிப்பும், நிர்வாகமும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.

ஏற்கனவே முல்லை-பெரியாறு, காவிரி, குமரி மாவட்டத்தில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாறு, பச்சையாறு, அடவிநயினார், செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டத்தில் அழகர் அணை, கொங்கு மண்டலத்தில் ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு, புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி, அமராவதி எனக் கேரளாவோடு பல ஆற்றுப் படுகைச் சிக்கல்கள், கர்நாடகத்தோடு காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு மழைநீர் வரத்தை தடுத்தல், ஆந்திரத்தோடு பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம், இப்போது அணைகள் பாதுகாப்பு மசோதா என்று எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதைப் போல மேலும் சிக்கலை உருவாக்கும்.

இந்தியாவில் மகாராஷ்டிரத்தில்தான் அதிகபட்சமாக 2,354 அணைகள் இருக்கின்றன. அடுத்து உத்தரபிரதேசத்தில் 906 அணைகளும், குஜராத்தில் 632 அணைகளும், கர்நாடகத்தில் 231 அணைகள், தெலங்கானாவில் 184 அணைகள், ஆந்திரத்தில் 167 அணைகள், அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் 123 அணைகள் உள்ளன. பஞ்சாப், ஹரியானா, பிகார், மேற்கு வங்கம் போன்ற பகுதிகளில் கங்கை, சிந்து நதி போன்றவற்றின் நீர்வரத்தால் அணைகள் குறைவுதான்.

உலகளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் 5,254 அணைகள் உள்ளன என 2017 வரை உள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இந்த அணைகளில் 283 பி.சி.எம் (பில்லியன் க்யூபிக் மீட்டர்) நீர் தேக்கப்படுகின்றது. இன்னும் 447 அணைகளின் கட்டுமானப் பணிகள் இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன.

இந்தியாவில் கட்டப்பட்ட அணைகள் 80% கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவையாகும். 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை 12% என்ற கணக்கில் உள்ளது.

இந்த புள்ளிவிவரங்களின்படி 1917ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள திக்ரா அணையும், 1979ஆம் ஆண்டு குஜராத்தில் மச்சு அணையும் பெரும் உடைப்பு ஏற்பட்டு, பல்வேறு சேதங்களை உருவாக்கி ஆபத்துகள் உருவாயின.

இந்தியாவில் அணைகள் மூலம் 36 விபத்துகள் நடந்துள்ளன. ராஜஸ்தானில் 11, மத்திய பிரதேசத்தில் 10, குஜராத்தில் 5, மகாராஷ்டிராவில் 5, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஓர் அணை விபத்து நேர்ந்துள்ளது.

இந்த பிரச்சனையில் 23 விபத்துகள் அணை கட்டி முடித்து 10 ஆண்டுகளில் நடந்தவையாகும். அணை உடைதல் 44 சதமும், உபரி வெள்ள நீரால் கட்டுமானங்கள் பாதிக்கப்பட்டது 25 சதமும், சரியில்லாத ஒப்புக்கு கட்டிய கட்டுமானப் பணிகள் 14 சதம் என்ற இதுபோன்ற காரணங்களால் அணைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. இதில் 100 ஆண்டுகளுக்கு மேலான அணை உடைந்தது இரண்டே இரண்டு முறைதான்.

இம்மாதிரியான அணை சேதாரங்கள் நடப்பது இயற்கையின் சீற்றத்தாலும், கட்டுமான ஒப்பந்ததாரர்களாலும் ஏற்படுகின்றன.

தண்ணீர் குழாய்
BBC
தண்ணீர் குழாய்

இதை வைத்துக்கொண்டு அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவது என்று ஒற்றைக் காலில் நிற்பது மாநில அதிகாரங்களில் தலையிடுவதாகும்.

எதிர்வினைகளை எல்லாம் கவனிக்காமல் மத்திய அரசின் அமைச்சரவை இந்த மசோதாவுக்கு கடந்த 13ம் தேதியன்று ஒப்புதல் அளித்ததுதான் வேதனை அளிக்கின்றது.

இந்த நடவடிக்கை 1979ஆம் ஆண்டு 18 மாநிலங்களில் மத்திய அணைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதற்குப் பின் 1987இல் அணைப் பாதுகாப்பு தேசிய ஆணையும் உருவாக்கப்பட்டது.

மெல்ல மெல்ல நகர்ந்து, அணைகள் பாதுகாப்பு மசோதாவில் மாநில அரசின் உரிமைகளை கபளீகரம் செய்யும் அளவிற்கு நிலைமைகள் வந்துவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் முல்லை-பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், துணைக்கடவு, பெருவாரிப்பள்ளம் போன்ற அணைகளைப் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் எல்லைகளில் உள்ள அணைகளின் உரிமைகள் பறிபோகும்.

மேலும் சிக்கலை உருவாக்கி வழக்குமன்றங்கள் வரை மாநிலங்கள் நதிநீர் பிரச்சனைகளுக்கு செல்லவேண்டியதுதான். உதாரணத்திற்கு மகாராஷ்டிரத்திற்கு எல்லைகளில் உள்ள அணைகள் குஜராத்தோடும், மத்திய பிரதேசத்தோடும், தெலங்கானாவோடும், கர்நாடகத்தோடும் போராட வேண்டிய நிலைமைகள் வரலாம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையில்லாத தலைவலி.

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 262-ன்படி மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை சட்டத்தின் நோக்கங்களுக்கும் தீர்வுகளுக்கு மாறாக இந்த மசோதா அமையும்.

குறிப்பாக, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தோடு நதிநீர்ச் சிக்கல்களில் தமிழகம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த மசோதாவால் மற்றொரு பிரச்சனையில் இந்த மாநிலங்களுக்கிடையே தள்ளப்படும் என்ற ஆபத்து உள்ளது.

மத்திய அரசும் அணைப் பாதுகாப்புக்கு என்று சில நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்று விளக்கம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை.

ஏனெனில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஜூன் 12இல் காவிநீர் திறக்கப்படவில்லை. இப்படி ஒவ்வொரு அணையிலும் இம்மாதிரி சண்டித்தனங்கள் அரங்கேறும்.

அணையில் பழுதுபார்க்க வேண்டும், சீர்திருத்த வேண்டுமென்றால் மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்த்துதான் மாநில அரசு இருக்க வேண்டிய துயரமான நிலை ஏற்படும்.

புவியியல் ரீதியாக அணைகளால் பயன்படும் மாநிலத்திற்குதான் அந்த அணையைப் பற்றிய அக்கறையும், ஆர்வமும் இருக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கு அணை பாதுகாப்பு மசோதாவால் பெருங்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சமஷ்டி அமைப்பில் இப்படி ஒவ்வொரு அதிகாரத்தையும் மாநிலங்களிடமிருந்து கபளீகரம் செய்து அபகரித்தால் எந்த விதத்தில் நியாயமாகும்?

பிரதமர் நரேந்திர மோதி, கூட்டுறவு சமஷ்டி முறை என்று சொல்லிக் கொண்டு சமஷ்டி அமைப்பின் அடிப்படையையே தகர்த்துக்கொண்டு வரும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் கொண்ட இந்தியாவில் மேலும் சிக்கல்கள் உருவாகும்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
Dam Safety Bill as an “attack on State autonomy, says many people in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X