For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 35 சதவீதம் குறைந்தது – காரணம் என்ன?

By BBC News தமிழ்
|
தங்கம்
Getty Images
தங்கம்

இன்று (29.01.2021 வெள்ளிக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை கடந்த 2020-ஆம் ஆண்டில் 35 சதவீதம் சரிவைடந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூ.ஜி.சி) தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது: கொரோனா பேரிடா் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் வரலாறு காணாத விலை உயா்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டில் தங்கத்துக்கான தேவை 35.34 சதவீதம் சரிவடைந்து 446.4 டன்னானது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 690.4 டன்னாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில் தங்கத்துக்கான தேவை கடந்த 2020-ஆம் ஆண்டில் ரூ.2,17,770 கோடியிலிருந்து 14 சதவீதம் சரிந்து ரூ.1,88,280 கோடியானது.

அதேநேரம், ஆபரணங்களுக்கான தங்கத்தின் தேவை அளவின் அடிப்படையில் 544.6 டன்னிலிருந்து 315.9 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில் ரூ.1,71,790 கோடியிலிருந்து ரூ.1,33,260 கோடியாகவும் சரிந்துள்ளது என்கிறது தினமணி செய்தி.

இந்தியாவின் நிகர தங்க இறக்குமதி 646.8 டன்னிலிருந்து 47 சதவீதம் சரிந்து 344.2 டன் ஆனது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலால் கடுமையான பாதிப்புக்குள்ளானதால் சா்வதேச அளவிலான தங்கத்தின் தேவை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு 3,759.6 டன்னாகியுள்ளது. 2019-இல் தங்கத்தின் தேவை சா்வதேச அளவில் 4,386.4 டன்னாக காணப்பட்டது. இதற்கு முன்பு தங்கத்தின் தேவை கடந்த 2009-இல் தான் மிகவும் குறைந்தபட்ச அளவாக 3,385.8 டன்னாக காணப்பட்டது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்காது என சட்டத்தில் எங்கு இருக்கிறது? - உச்ச நீதிமன்றம் கேள்வி

விவசாயி
Getty Images
விவசாயி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், புதிய விவசாயச் சட்டங்களில் எம்.எஸ்.பி என்றழைக்கப்படும் குறைந்தபட்ச அடிப்படை விலையைப் பின் வலிக்கும் சட்டப் பிரிவுகளை எங்களுக்குக் காட்டுங்கள்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதாக தி இந்துவில் செய்தி வெளியாகி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டி என் பார்த்திபன் உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே அமர்வுக்கு நேற்று (ஜனவரி 28, வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

"குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமல் விவசாயிகள் பிழைக்க முடியாது. புதிய வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டின் பேராசைக்கு வழி வகுக்கிறது. அது விவசாய சந்தைய நசுக்கிவிடும்" என தன் மனுவில் பார்த்திபன் குறிப்பிட்டிருந்ததாகக் கூறுகிறது அச்செய்தி.

"ஆக நீங்கள் பழைய முறையே நடைமுறையில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? குறைந்தபட்ச ஆதார விலையை பின் வலிக்கும் சட்டத்தை எங்களுக்குக் காட்டுங்கள்" என தலைமை நீதிபதியான பாப்டே பார்த்திபனின் வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதோடு இந்த மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய அரசிடம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கை வேளாண் சட்டங்களை எதிர்க்கும் மற்ற வழக்குகளோடு உச்ச நீதிமன்றம் சேர்த்திருப்பதாக தி இந்துவில் கூறப்பட்டுள்ளது.

சீன கடன் செயலி நிறுவன உரிமையாளரை கைது செய்ய மத்திய அரசு தீவிரம்

சீன கடன் செயலி நிறுவன உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் செயலி நிறுவனங்களை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சீனாவை சேர்ந்த இருவர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, கடந்த 2-ம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டனர். மேலும், சீன நிறுவனங்களுக்கு சிம் கார்டு விநியோகம் செய்த 4 பேர் உட்பட இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் கடன் செயலி விவகாரத்தில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டாலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் 'ஹாங்' என்ற சீன நாட்டவர் தான். இவர் சிங்கப்பூரில் இருந்து கொண்டே இந்த நிறுவனங்களை இந்தியாவில் நடத்தி வந்தது தெரியவந்தது. ஹாங் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெங்களூருவில் 2 சீனர்கள் கைது செய்யப்பட்டதும், ஹாங் சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அவரை கைது செய்ய அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், ஹாங்கை கைது செய்ய சர்வதேச போலீஸான 'இன்டர்போல்' உதவியும் கேட்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
According to the World Gold Council (WGC), demand for gold in India has fallen by 35 per cent by 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X