• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணஒழிப்பு... மோடியின் வாரணாசி தொகுதியில் 75,000 நெசவாளர்கள் பட்டினி! #Demonetisation

By R Mani
|

-ஆர்.மணி

மோடியின் அறிவிப்பால் - 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது - இந்தியாவில் பாதிக்கப்படாத துறைகளே இல்லை என்று சொல்லாம். அனைத்துத் தரப்பு மக்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள்தான் அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். மோடி எம் பி யாக இருக்கும் உத்திர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இந்த பாதிப்பு சற்றே கூடுதலாக இருக்கிறது என்பதுதான் முரண் நகை.

வாராணாசி பட்டுப் புடவைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. இந்தியர்களின் திருமணங்களில் வாரணாசி பட்டுப் புடவைகள் (பனாரஸ் பட்டு புடவைகள்) ஸ்டேடசின் அங்கமாகவே பார்க்கப் படுகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா இந்தியா வந்தபோது அவரது மனைவி மிட்சேல் ஓபாமாவுக்கு 100 பனாரஸ் புடவைகளை பரிசாக அளித்தார் மோடி. இன்று அந்த வாரணாசி பட்டு நெசவாளர்கள் அடியோடு சரிந்து போய் கிடக்கின்றனர்.

Demonetisation costs 75,000 weavers life in Modi's Varanasi

நாளொன்றுக்கு 150 முதல் 200 ரூபாய் வரைதான் இவர்களது தினக் கூலி. மற்ற தொழில்களைப்போல இயந்திரத்தனமாக இவர்கள் வேலை செய்ய முடியாது. கிரியேடிவிட்டி என்று சொல்லப்படும் ஒரு விதமான கற்பனை, கலைத் திறனுடன்தான் இவர்கள் அனு தினமும் பணியாற்றுகின்றனர். இது அவர்களது கைவண்ணத்தில் வெளிவந்து பட்டுச் சேலைகளாக பெண்களை அலங்கரிக்கின்றன.

ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற அறிவிப்பால் புதிய ஆர்டர்களை வியாபாரிகள் நெசவாளர்களுக்கு கொடுப்பது அறவே நின்றுவிட்டது. இதன் காரணமாக கடன் அதிகரிப்பதால் புதியதாக பட்டாடை நெய்வதற்கான சிறப்பு நூலை வாங்க முடியாமல் நெசவாளர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே செய்த வேலைக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைத்தான் வியாபாரிகள் கொடுத்திருக்கின்றனர். இதனை மாற்றுவதற்கு வங்கிகள் முன்பு மணிக்கணக்கில் நாள்தோறும் இவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர் நெசவாளர்கள்.

வாரணாசியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா கிளையில் சுமார் 28,000 நெசவாளர்களுக்கு வங்கி கணக்கு இருக்கிறது. கால் கடுக்க நின்றாலும் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குத்தான் பணம் கிடைக்கிறது. அத்தனை வாடிக்கையாளர்களும் ஒரே நேரத்தில் வங்கிக்கு வருவதால் இந்த வங்கிக் கிளை திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.

இந்த 28,000 நெசவாளர்களைத் தவிர மற்ற பல ஆயிரக் கணக்கான நெசவாளர்களுக்கும், இந்த தொழிலை நம்பியிருக்கும் உப தொழில்களில் உள்ளவர்களுக்கும் வங்கிக் கணக்குகள் கிடையாது. அவர்களது நிலைமைதான் பரிதபாகரமாக இருக்கிறது. இவர்களுக்கு வியாபாரிகள் தங்களது பாக்கியை பழைய 500 ரூபாய் நோட்டுக்களில்தான் கொடுக்கின்றனர். இதனை இனிமேல் தரகர்கள் மூலம், அதிக கமிஷனுக்குத்தான் இவர்களால் மாற்று முடியும். கடந்த 15 நாட்களில் வாரணாசிக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமே சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறது வாரணாசி வஸ்திர உத்தியோக் சங்கம் என்கிற பட்டு நெசவாளர்களுக்கான அமைப்பு.

'கைத்திறி மட்டுமின்றி, விசைத்தறி நெசவும் இன்று முற்றிலுமாக முடங்கிக் கிடக்கின்றது. பட்டாடை நெய்வதுதான் வாரணாசியின் முகமும், அதனது அடையாளமும். இன்று அந்த அடையாளம் முற்றிலுமாக முடங்கிப் போயிருப்பது ஒட்டு மொத்த வாணாசி நகரமும் மூடப் பட்டிருப்பதான காட்சியையே தந்து கொண்டிருக்கிறது' என்கிறார் வாரணாசியின் ஹிந்தி நாளிதழின் செய்தியாளர் ஒருவர்.

மோடியின் அறிவிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி வரும் மாதங்களில் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றே அஞ்சப்படுகிறது. ஏற்கனவே பல இடங்களில் இது தொடங்கி விட்டது. தற்போதய நிலைமையில் கந்து வட்டிக் காரர்களிடம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டு சின்னா பின்னாமாவார்கள் என்று எச்சரிக்கின்றது தேசிய அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. இது நாட்டின் உற்பத்தியை பாதிப்பதுடன் சமூக கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுக்கின்றது.

வெட்டி செலவு எவ்வளவு தெரியுமா?

இதனிடையே மோடியின் அறிவிப்பால் அரசுக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகப் போகிறது என்று கணக்கிட்டிருக்கிறது இந்திய பொருளாதாரத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் செண்டர் ஃபார் மானிடரிங் இண்டியன் எகானமி (CMIE) என்கின்ற அமைப்பு. இந்த அமைப்பின் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தரக் கூடியவையாக இருக்கின்றன.

அக்டோபர் 28 ம் தேதி புள்ளி விவரப்படி 17.8 லட்சம் கோடி ரூபாய் இந்திய சந்தையில் புழக்கத்தில் இருந்தது. இதில் 86 சத விகிதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களாகும். புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கும், அவற்றை வங்கிகள், ஏடிஎம் கள், தபால் அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லுவதற்கும்16,800 கோடி ரூபாய் செலவாகும். மோடியின் முடிவால் வர்த்தகத்துக்கு ஏற்பட்ட இழப்பு 61,500 கோடி ரூபாய், வங்கிகளுக்கான இழப்பு - அதாவது மற்ற பணிகளைச் செய்யாமல் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் ஏற்பட்ட இழப்பு - 35,100 கோடி ரூபாய்களாகும். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு வரிசையில் நின்றவர்களால் ஏற்பட்ட மனித வேலை நாள் இழப்புகள் 15,000 கோடி ரூபாய்களாகும்.

இவை எல்லாமே தாற்காலிக பாதிப்புக்கள்தான். நீண்ட கால பாதிப்புகள் கூடுதலாக இருக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

இந்த மதிப்பீடு என்பது 50 நாட்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்ற பிரதமரின் வார்த்தைகளின் அடிப்படையிலானது. இந்த காலவரையரை தாண்டினால் வரும் நஷ்டம் கூடுதலானதாக இருக்கும். மேலும் இது குறைந்தபட்ச கணக்கீடுதான்,

இன்று நாட்டின் ஒவ்வோர் மட்டத்திலிருந்தும் வரும் தகவல்கள் கவலை தருவனவாகவும், அதிர்ச்சி அளிப்பவையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. காலியாக கிடக்கும் காய், கனி, சந்தைகள், மால்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போனது, உணவு விடுதிகளின் வியாபாரம் கணிசமாக படுத்துப்போனது, தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் ஓடும் நேரம் கணிசமாகக் குறைந்து போனது, வேளாண் பணிகள் பெரியளவுக்கு நின்று போனது போன்றவை ஏற்பட்டிருக்கும் அபாயகரமான சூழலை எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கப் போகிறது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. மோடியின் demonetization அறிவிப்பு கடந்த 50 ஆண்டு கால உலக வரலாறு காணாதது என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் மிக அதிகளவில் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் மிக அதிகப் புழக்கத்தில் இருந்த நாடுகளில்தான் இது அமல் படுத்தப் பட்டிருக்கிறது. அவையும் சிறிய மக்கள் தொகை கொண்ட நாடுகள்தான். குறிப்பாக பொருளாதாரம் அடியோடு சரிந்து கிடந்த நாடுகளில்தான் இது நடந்திருக்கிறது. ஆனால் 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், உலகின் முன்னணி பொருளாதாரமாக வேகமாக வளர்ந்து வரும் நாட்டில், 80 சதவிகித பொருளாதாரம் பணப் பொருளாதாரமாக (cash economy) இருக்க கூடிய நாட்டில், புழங்கக் கூடிய பணத்தில் 86 சதவிகித ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் செல்லாததென்று அறிவித்து, அவற்றை எல்லாம் வங்கிகளுக்குள் கொண்டு வந்து கபளீகரம் செய்வது என்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று ஒருவராலும் யூகிக்க முடியவில்லை.

'இதுவரையில் demonetization செய்யப் பட்ட நாடுகளைப் பார்த்தால் அவை எல்லாமே பொருளாதார வளர்ச்சியில் திண்டாட்டத்தில் இருந்த நாடுகள். நன்றாக இருந்த ஒரு பொருளாதாரத்தில் இந்த நடவடிக்கை என்பது எந்த மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதற்கு இதுதான் உலகிலேயே முதல் முன்னுதாரணமாகப் போகிறது. உலகின் உயர் பொருளாதார வளர்ச்சி கொண்ட ஒரு நாட்டில் demonetization என்பது ரேசில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு காரின் டயர்களை துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டு காரை பஞ்சர் ஆக்கி நிற்க வைப்பதற்கு சமமானதுதான். குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகள் பாரதூரமானவை,' என்கிறார் மஹாத்மா காந்தி தேசீய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை வடிவமைத்த பொருளாதார நிபுனர் ஜீன் டிரேஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Demonetisation has forced nearly 75,000 weavers to starvation in PM Modi's own constitution Varanasi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more