For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி மர்ம மரணம்: சி.ஐ.டி அறிக்கை வெளியிட ஹைகோர்ட் தடை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களூருவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி தூக்கில் சடலமாக தொங்கியதின் ‘மர்ம முடிச்சு' இன்னும் அவிழ்ந்த பாடில்லை. ஆனால் அந்த மரணத்தை வைத்து தினம் தினம் ரவியை கொலை செய்து வருகின்றனர் ஆளும் கட்சியினர் என்று ரவியின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரவியின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு மறுத்த கர்நாடக அரசு சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் ரவியின் மரணம் குறித்து சிஐடி தயாரித்துள்ள இடைக்கால அறிக்கையை வெளியிட கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோலார் மாவட்டத்தில் மணல் திருட்டு மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவியின் மரணத்திற்கு காரணம் ஆளும் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் மிரட்டல்தான் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

DK Ravi case: Court restrains CID from preparing interim report

அதே சமயம், அதிகாரி ரவி, தன்னுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெற்ற பெண் அதிகாரி ஒருவரை ஒரு தலையாக காதலித்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் வேறு ஒரு தரப்பில் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் கீழே பணியாற்றும் அதிகாரிக்கும், கோலார் எம்.எல்.ஏ. வர்தூர் பிரகாசுக்கும் இடையே, நடந்த டெலிபோன் உரையாடல் தற்போது ‘வாட்ஸ் அப்பில்' வேகமாக பரவி வருகிறது.

எம்.எல்.ஏவின் மிரட்டல்

அதிகாரி: நமஸ்காரம்.

எம்.எல்.ஏ: நான் சொல்வதை 2 நிமிடம் கேள்.

அதிகாரி: சொல்லுங்கள்.

எம்.எல்.ஏ: நாளை அல்லது அதற்கு மறுநாள் 12-ந்தேதி அமைச்சரவை கூட்டம் இருக்கிறது. 13-ந்தேதி எனக்கு இங்கே புதிதாக துணை ஆணையர் வேண்டும். அது நடக்கவில்லை என்றால், நீ ‘சஸ்பெண்ட்' செய்யப்படுவாய். உன் வாழ்க்கை முழுவதும் இதற்காக நீ வருத்தப்பட செய்து விடுவேன்.

அதிகாரி: ஆனால் துணை ஆணையரும் (டி.கே.ரவி), இதற்காக நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டரும் நச்சரிக்கிறார்களே!

எம்.எல்.ஏ: உன் நல்லதுக்காக சொல்கிறேன். அடுத்த ஆண்டு உனக்கு பதவி உயர்வு வர இருக்கிறது. லோக் ஆயுக்தாவில் 5 லட்சம் ரூபாய்க்கு புகார் கொடுப்பேன். அங்கு போய் புகார் காப்பியை எடுத்துக்கொண்டு கூப்பிடு. துணை ஆணையர் சொல்வதை கேட்காதே. இன்னும் 2 இரவுகள் தான் இருக்கிறது.

அதிகாரி: ஓகே.. சார்....

இந்த டெலிபோன் உரையாடல் அதிகாரி ரவிக்கு விடுத்த மிரட்டலாக கருதப்பட்டது.

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன்

இதனிடையே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியும், அவருடன் ஒன்றாக படித்த மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்திருப்பதை, இவ்வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சம்பவம் நடந்த நாளில் மட்டும் 44 முறை, ரவி அந்தப் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு செல்போனில் அழைப்பு விடுத்து பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.

கடைசி நேரத்திலும்

ரவி, கடைசியாக அப்பெண் அதிகாரியுடன் தான் செல்போனில் 16 விநாடிகள் பேசியுள்ளார். ரவியின் தொலைபேசி தொடர்புகளை ஆய்வு செய்ததில் பலமுறை இருவரும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னிரவு நேரத்தில் கூட இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முதல்நாள் கூட ஒருவருக்கொருவர் 8 முறை செல்போனில் பேசியுள்ளனர்.

பலாத்கார புகார்

ரவி இறந்த நான்கு மணி நேரத்தில், இந்த வழக்கில் புலனாய்வு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணை காவல் ஆணையரை அழைத்த அந்த ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி, ''எங்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. திருமண உறவை முறித்துக்கொள்ளும்படி ரவி என்னை தொந்தரவு செய்தார். ரவியால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன், தொடர்ந்து அவர் என்னிடம் பலாத்காரத்திற்கு முயன்றதற்கு நான் உடன்படவில்லை" என்று கூறியுள்ளார்.

உண்மையா வதந்தியா?

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள், தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்தப் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியது குறித்து, சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தகவல்

ரவி தனது மரணத்திற்கு முன்னதாக தனது தோழிக்கு ‘வாட்ஸ் அப்' மூலம் கடைசியாக அனுப்பிய செய்தியில், நான் உனது சினேகிதன் மட்டுமல்ல. காதலரும்கூட. உன்னைப் போன்ற ஒரு அழகான பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ளாமல் போனால், என் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை. நான் விரைவில் ஒரு நித்திய வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் போகிறேன். இறைவன் சிவபெருமான் என் ஆன்மாவுக்கு அமைதி தரட்டும். பிரியாவிடை பெறுகிறேன். உன்னை நமது அடுத்த ஜென்மத்தில் சந்திக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் ரவிதான் அனுப்பினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிஐடி அறிக்கை வெளியிட தடை

கர்நாடக அரசிடம் சிஐடி தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளியிட மாநில அரசு திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், சிஐடியின் இடைக்கால விசாரணை அறிக்கையை வெளியிட தடை விதிக்கக் கோரி, மண்டியா மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி ரோஹினிசிந்தூரிதாசரியின் கணவர் சுதிர் ரெட்டி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை (ரிட்) தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்றம் தடை

இந்த மனு தொடர்பான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல்நசீரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசு, சிஐடி-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் விசாரணை முழுமையடையாமல் சிஐடியின் இடைக்கால அறிக்கையைப் பகிரங்கப்படுத்தத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார்

எதிர்கட்சிகள் வியூகம்

சிஐடி இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதற்கான போராட்ட வழிமுறைகள் குறித்து வியூகம் வகுக்க பெங்களூரில் இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களின் கூட்டம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சிஐடியின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பது, சிபிஐ விசாரணையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கான வியூகம் வகுக்கப்படும் என்று தெரிகிறது.

தொடர் தர்ணா

ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, பெங்களூரு ஆனந்த்ராவ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவினர் தர்னா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒருநாள் அடையாள தர்ணாவாக நடத்த திட்டமிட்டிருந்த பாஜக, தனது முடிவை மாற்றிக் கொண்டு தொடர் தர்ணா போராட்டமாக மாற்றியுள்ளது.

தினம் தினம் படுகொலை

டி.கே.ரவியின் மரணம் கர்நாடகாவில் கடந்த ஒருவார காலமாக கடும் புயலை கிளப்பிவருகிறது. அவரை ஹீரோ அளவிற்கு கொண்டாடும் கோலார் மாவட்ட மக்கள் போராடத் தொடங்கினர். இளைய தலைமுறையினரும் அரசியல் கட்சியினரும் சமூக வலைத்தளங்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எழுதி வந்தனர். ஆனால் இந்த ஹீரோ இமேஜை உடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு புகார்களை கூறி அவரை தினம் தினம் படுகொலை செய்து வருகிறது ஆளும் காங்கிரஸ் அரசு என்று குற்றம் சாட்டுகின்றனர் ரவியின் பெற்றோர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும். சிபிஐ விசாரணை நடைபெற்றால் மட்டுமே ரவியின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சு விலகும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

English summary
The Karnataka high court on Sunday ordered the CID not to make or publish any interim report on its inquiry into the mysterious death of IAS officer D K Ravi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X