
காங்கிரஸ் இருப்பை இழந்துவிட்டது.. வாக்குகளை வீணாக்காதீர்கள்! அசாதுதீன் ஓவைசி பரபரப்பு!
ஜபல்பூர்: இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தனது இருப்பை இழந்துவிட்டதாகவும், அவர்களுக்கு வாக்களித்து மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, காங்கிரஸ் கட்சி பெரும்பாலான தேர்தல்களில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதேபோல் புதுச்சேரி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. தற்போதைய சூழலில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உட்கட்சி பிரச்னைகள், அதிருப்தி தலைவர்களின் குற்றச்சாட்டுகள் என கட்சிக்குள்ளும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அதேபோல் பெட்ரோல் டீசல், விலைவாசி உயர்வு, எல்லைப் பிரச்னைகள், வேலையில்லா திண்டாட்டம் என பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தும், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்லவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
அதேபோல் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், மாநில கட்சிகளிடையே நம்பிக்கையை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து, மக்கள் தங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார்.
சமாஜ்வாதியால் பாஜகவை வீழ்த்த முடியாது.. தோல்விக்கு யாரை கைக்காட்டப் போகிறீர்கள்.. ஓவைசி காட்டம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி சில பகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்காக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஜபல்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் காங்கிரஸ் கட்சி நீர்த்து போன சக்தியாக மாறிவிட்டது. அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து, வாக்கினை வீணாக்காதீர்கள். அதேபோல் பாஜக அரசு எல்லைப் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, சீன ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், அண்மையில் வெளியிடப்பட்ட அகில இந்திய ஆய்வு அறிக்கையின்படி, இஸ்லாமியர்கள் அனைத்து துறைகளிலும் பின் தங்கியுள்ளனர். இதற்கு யார் காரணம்? இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அரசியல்ரீதியாக இணையாத வரை இங்கே எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.