For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென கிளம்பிய திராவிட நாடு கோரிக்கையும் இதுவரை உலகம் சந்தித்த தேச பிரிவினைகளும்!

திராவிட நாடு கோரிக்கை திடீரென கிளம்பியுள்ளது. இதுவரையிலான தேசங்களின் பிரிவினைகளை அலசுகிறது இந்த கட்டுரை

Google Oneindia Tamil News

பா. கிருஷ்ணன்

மாட்டிறைச்சி பிரச்சினையை அடுத்து கேரளத்தில் திராவிட நாடு கொள்கை குறித்து திடீரென்று பேச்சு எழு்பியுள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றில் அவ்வப்போது பிரிவினை வாதம் கோஷமாக எழுந்ததுண்டு. ஆட்சியாளர்களின் அணுகுமுறையாலும் கோரிக்கைகளை வைப்போரின் கொள்கை மாற்றங்களாலும் அந்தப் பிரிவினை கோரிக்கைகள் கடந்த காலங்களில் மறக்கப்பட்டுள்ளன அல்லது, கைவிடப்பட்டுள்ளன. திராவிட நாடு கொள்கை பெரியார் ஈ.வெரா. காலத்திலேயே தோன்றியதுதான். அதாவது, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரிக்க முகமது அலி ஜின்னா வலியுறுத்தியதற்கு முன்பே இந்தக் கோஷம் தோன்றியது.

DravidaNadu and Secession deamands

ஒரு நாட்டின் குறிப்பிட்ட நிலப் பரப்பைச் சேர்ந்தவர்களுக்கான அரசியல், பொருளாதார உரிமைகள், தேவைகள் ஆகியவை தங்களது மொழி, மதம், இனம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மறுக்கப்படுவதாக இருந்தால் இதுபோன்ற பிரிவினைக் கோரிக்கைகள் தோன்றும். இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைக்கும் சமயத்தில் மத ரீதியில் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்தது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா போன்றோர் கருதியதே மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்ததற்குக் காரணம்.

அப்படிப் பிரிந்த பாகிஸ்தான் இரு பகுதிகளாக இயங்கிவந்தது. இந்திய நிலப் பரப்பின் மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் என்றும், கிழக்குப் பகுதியில் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அமைந்திருந்தது. பாகிஸ்தானில் வசிப்போர் உருது, ஹிந்துஸ்தானி ஆகிய மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால், கிழக்கு பாகிஸ்தானில் வசிப்போர் அனைவரும் வங்க மொழியைப் பேசுகிறார்கள். இதுதான் 1971 ஆம் ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் வங்கதேசம் எனத் தனி நாடாகப் பிரிவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

இந்திய துணைக் கண்டப் பரப்பில் முதல் பிரிவினை மத அடிப்படையிலும் இரண்டாவது பிரிவினை மொழி அடிப்படையிலும் அமைந்தது. இந்தியாவுக்குள் திராவிட நாடு கோரிக்கையை பெரியாரைத் தொடர்ந்து அண்ணா முன்னெடுத்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் பெரியார் நாட்டு விடுதலையை விட சமூக விடுதலையையே பிரதானமாகக் கொண்டு போராடிவந்தார். திராவிட நாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி வந்த அண்ணா தலைமையிலான திமுக சீனப் படையெடுப்பை அடுத்து உருவான புதிய அரசியல் சூழ்நிலையில் 1962ம் ஆண்டு கைவிட்டது.

திமுகவினரின் கோஷம் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்பதாக இருந்தது. "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?" என்று நூலை எழுதிய திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறன் பின்னாளில், "எந்த மாநிலம் செயல்படுகிறதோ அது செழிக்கும்" (The states which perform will shine) என்று கோட்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலை உருவானது. இது முதிர்ச்சியான அணுகுமுறையாக உருவானது. அதற்கேற்ப திராவிடக் கட்சிகள் மத்திய ஆட்சியில் இடம்பெற்று தமிழகத்துக்குத் தேவையானதைப் பெற்றுத் தரும் வகையில் அரசியல் வலிமை பெறத்தொடங்கின.

திராவிட நாடு கொள்கையை அடுத்து நாட்டில் பெரிதாக இருந்தது காலிஸ்தான் இயக்கம். இது சீக்கிய சமயம் சார்ந்ததாக அமைந்தது. இந்தியாவில் உள்ள பஞ்சாப், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகள் காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக வேண்டும் என்பதே அந்த இயக்கத்தின் நோக்கம். அந்த அமைப்பு ஆயுதப் போராட்டமாக மாறியதும், வழிபாட்டுத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை ஆயுதக் கிடங்காக மாற்றப்பட்டதும் இந்திய ராணுவ நடவடிக்கைக்குக் காரணமாக ஆனது. அதில், காலிஸ்தான் இயக்கம் ஒடுக்கப்பட்டது. எனினும், அதன் பின் விளைவாக பொற்கோயிலில் ராணுவ நடவடிக்கை எடுத்ததால் கோபமடைந்த தீவிரவாதிகள் இந்திரா காந்தியைக் கொன்றனர்.

பின்னர், ராஜீவ் காந்தி பஞ்சாப் மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை மறைந்துவிட்டது. அதே காலக்கட்டத்தில் அசாமில் மாணவர்கள் இளைஞர்கள் தனி நாடு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். அதையடுத்து 1979ம் ஆண்டு அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்பா) என்ற தீவிரவாத, பிரிவினை வாத இயக்கம் தோன்றி போராடியது. இந்த அமைப்பின் பல்வேறு கோரிக்கைகளில் தங்களது தேசிய இன அடையாளத்தை காப்பாற்றுவதே முக்கியமாக இருந்தன. ஆனால், அவர்கள் தீவிரவாதமாகச் செயல்பட்டு வருவதும், கொலைகள் செய்வதாலும் தடை செய்யப்பட்டது.

இலங்கையில் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாலும் தனித் தமிழீழம் என்ற கோரிக்கை 1970ம் ஆண்டுகளிலேயே ஏற்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளில் பல நாடுகள் பிரிந்திருக்கின்றன.

அவற்றில் குறிப்பிடத் தக்க பிரிவினை சோவியத் யூனியன் பல நாடுகளாகப் பிரிந்ததுதான். 1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து படிப்படியாக 14 நாடுகள் பிரிந்து சென்றன. 14 நாடுகள் பிரிந்து தனியாகப் போனதை அடுத்து, சோவியத்தின் பிரதான புவியியல் அமைப்பு கொண்ட நாடு ரஷிய கூட்டமைப்பாக நின்றது. பிரிந்துபோன நாடுகள் அனைத்தும் மொழிச் சிறுபான்மைகளாகவே சோவியத் ஒன்றியத்தில் இருந்தன.

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியவை பால்டிக் நாடுகளாக ஆயின. மத்திய ஐரோப்பாவுக்கும் வட ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள பால்டிக் கடலை ஓர் எல்லையாகக் கொண்ட நாடுகள் பால்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகியவற்றுடன் மேற்கண்ட முன்னாள் சோவியத் நாடுகளும் இடம்பெற்றுள்ளன. கஜகஸ்தான், கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் ஆகியவை மத்திய ஆசிய நாடுகளாயின. பெலாரஸ், மோல்டோவா, உக்ரைன் ஆகியவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளாக உருவாயின. இவை தவிர அஜர்பைஜான், ஜார்ஜியா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் தெற்கு காகேசிய நாடுகள் என்று தங்களது குழுவை அடையளப்படுத்திக் கொண்டுள்ளன. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் நிலப்பரப்புடைய பகுதியே காகேசிய மண்டலம் என அழைக்கப்படுகிறது.

மேற்கு ஆசிய நாடுகளில் தனி நாட்டுக்காகப் போராடி வரும் நாடுகளில் குறிப்பிடத் தக்கது பாலஸ்தீனம். மறைந்த போராளி யாசர் அராபத் தலைமையில் 1988ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உலக அளவில் தனிநாட்டுக்குரிய அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை. காரணம், பாலஸ்தீனப் பகுதி தனது பகுதி என்று இஸ்ரேல் கூறி வருகிறது. இந்தியா உள்பட ஐ.நா. சபையில் இடம்பெற்றுள்ள 198 நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரித்துவிட்டன. ஐநா சபை அதற்கு 2012 ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பார்வையாளர் நாடு (observer state) என்ற நிலையை அளித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

இந்தோனேசியாவிலிருந்து அண்மையில் பிரிந்த நாடு கிழக்கு திமோர். தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியாவின் தீவுப் பகுதியில் கிழக்கே அமைந்துள்ள பகுதியே கிழக்கு திமோர் நாடாகப் பிரிந்தது. இந்நாடு உருவானதற்கு மதம்தான் காரணம். இந்தோனேசியா முஸ்லிம் நாடு ஆகும். அதன் திமோர் பகுதியில் வசிப்போர் 96 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்க சமயத்தவர். மேலும் போர்ச்சுகீசிய மொழி பேசுவோர் ஆவர். மக்களின் ஒருமித்த விருப்பத்தின் அடிப்படையில் இந்நாடு உருவானது.

இதுபோல் அரசியல் வரலாற்றில் புதிதாக நாடுகள் உருவாவதும் உண்டு. அவ்வாறு உருவாவதற்கு மிக முக்கியமான காரணத்தை அறிந்து அது தொடர்பான பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும்போது, தனி நாடு கோரிக்கை கைவிடப்படுவதும் வழக்கமாக நடைபெறுகிறது.

English summary
Columnist Paa Krishnan analysis the recent alleged Dravidian separate state objective said to be raised by some section. He also says if the basic aspirations which caused secession views are fulfilled, the separatism is given up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X