
குஜராத்தில் நிலநடுக்கம்.. அதுவும் உலகின் மிக உயரமான பட்டேல் சிலை அருகில் - நடந்தது என்ன?
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பட்டேல் சிலை அருகே நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சர்தார் சரோவர் அணை அருகே சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மத்திய பாஜக அரசு சிலை அமைத்தது. ரூ.2,989 கோடி மதிப்பில் 177 அடி உயரம் கொண்ட இந்த சிலையே உலகின் மிக உயரமான சிலையாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் வல்லபாய் பட்டேலின் நினைவாக இரும்பு தகடுகளை கொண்டு இந்த நிலை நிறுவப்பட்டது, ஒற்றுமை சிலை என பெயரிடப்பட்டிருக்கும் இதற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு வல்லபாய் பட்டேல் சிலை அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.1 என்ற ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் 12.7. கிமீ ஆழத்திலும், அதன் மையப்புள்ளி குஜராத்தின் கெவாடியா பகுதியின் தென் கிழக்கே 12 கிமீ தூரத்திலும் உணரப்பட்டு இருப்பதாக காந்திநகரில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என நர்மதா மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது. வல்லபாய் பட்டேல் சிலை நிலநடுக்கம், சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களின்போதும் சேதமடையாத அளவுக்கு திடமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதன் மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் பட்டேல் கூறியுள்ளார்.