For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசிடம் விருதுகளை திருப்பி ஒப்படைப்பது 'விளம்பரம்...அரசியல்' - மாதவன் நாயர் 'கண்டுபிடிப்பு'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து படுகொலைகளும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருவதைக் கண்டித்து எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் விருதுகளை மத்திய அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனால் இஸ்ரோவின் முன்னாள் தலைவரான மாதவன் நாயரோ, இந்த படுகொலைகளும் ஒடுக்குமுறைகளும் 'ஏதோ சில சம்பவங்கள்' எனக் குறிப்பிட்டு இதற்காக விருதுகளை திருப்பி கொடுப்பதா எனவும் இது விளம்பரம்.. அரசியல் எனவும் கருத்து தெரிவித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி அண்மையில் இஸ்லாமிய முதியவர் இக்லாமுஸ்லிம் முதியவர் மதவெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். முன்னதாக கர்நாடகத்தில் கல்பர்கி இந்துத்துவா கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

Ex-Isro chief Nair opposes return of awards

மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் குர்ஷித் அகமது கசூரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பா.ஜ.க. மூத்த தலைவரான சுதீந்திர குல்கர்னியின் முகத்தில் கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர்.

இப்படியான சம்பவங்கள் தொடருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளை எதிர்ப்பின் அடையாளமாக திருப்பி அனுப்பி வருகின்றனர். முதலில் நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்கள் விருதுகளை திருப்பி ஒப்படைத்தனர்.

மேலும் ரோமிலா தாபர், இர்பான் ஹபீப், கே.என்.பணிக்கர், மிருதுளா முகர்ஜி உள்ளிட்ட 53 வரலாற்று ஆசிரியர்களும் இந்த நிலைமை தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்த நிலையில், பத்ம பூஷண் விருது பெற்ற பி.எம்.பார்கவா, அசோக் சென், பி.பல்ராம் ஆகிய 3 விஞ்ஞானிகள், தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவித்தனர்.

ஆனால் இத்தகைய தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கும் விருதுகளை திருப்பி ஒப்படைப்பதற்கும் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா போன்ற பெரிய தேசத்தில் சில சம்பவங்கள் நடக்கலாம்; அதற்கு அரசாங்கத்தை பொறுப்பாளி ஆக்க முடியாது; சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில்தான் விருதுகள் வழங்கப்படுகின்றனர்.

அரசாங்கம் அளித்த அந்த கவுரவம் குறித்து பெருமை கொள்ள வேண்டும்; விருதுகளை திருப்பி ஒப்படைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

விருதுகளை திரும்ப ஒப்படைப்பது விளம்பரத்துக்காகத்தான்; இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது என்று மாதவன் நாயர் கூறியுள்ளார்.

மாதவன் நாயரின் இந்த கருத்தும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

English summary
Eminent space scientist G Madhavan Nair on Thursday disapproved the return of awards by scientists and writers and called their action a mere show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X