For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியர்களின் இதயத்தை நிறுத்தும் உப்பு... எச்சரிக்கும் ஆய்வு

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட இந்தியர்கள் 119% அளவிற்கு உப்பு சாப்பிடுவதாக சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: உப்பிட்டவரை உள்ளளவும் நினை.... உப்பில்லா பண்டம் குப்பையிலே... இப்படி தமிழில் உப்பை வைத்து பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன. ஒரு சிட்டிகை உப்பு அதிகமானால் கூட அதுவும் வாயில் வைக்க முடியாது, அந்த உணவும் குப்பைக்கு போக வேண்டியதுதான்.

இந்தியாவில் உணவில் உப்பும், உரைப்பும் சேர்த்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் எப்படி என்றால் மனிதர்கள் எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவைவிட இந்தியர்கள் 119%அதிகளவில் உப்பு சாப்பிடுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது 'இந்தியா ஸ்பென்ட்' ஆய்வு நிறுவனம்.

உப்பு அதிகம் சேர்ப்பதால் இந்தியர்கள் இதயநோய் தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தை தழுவுகின்றனர். இன்றைக்கு 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே இதயநோய் தாக்குதல் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் உப்பு, கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்வதுதான்.

இதயநோய் மரணங்கள்

இதயநோய் மரணங்கள்

2010ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை கார்டியா வாஸ்குலர் எனப்படும் இதயநோய் தாக்கத்தால் மட்டும் 23 சதவிகிதம்பேர் இறந்துள்ளனர். இந்திய மக்களின் இறப்பு கணக்கெடுப்பின்படி இந்த விகிதத்தை அறிவித்துள்ளார்கள். இதில், 21.5 சதவிகிதம் கிராமத்திலும் 29.2 சதவிகிதம் நகரத்திலும் இதயநோய்களால் இறந்துள்ளனர்.மேலும் வரும் 2030ல் இந்தியாவில் ரத்தகொதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 213 மில்லியனைத்தொடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மரணங்கள்

அதிகரிக்கும் மரணங்கள்

இதயநோய்களால் இறப்பவர்கள்தான் இந்தியாவில் அதிகளவில் இருக்கிறார்கள். அதற்கடுத்த இடத்தில் சுவாசப் பிரச்னைகளால் இறப்பவர்கள் இருக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்கள்தான் அதிகளவில் உப்பை உணவில் சேர்த்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். கிராமங்களைவிட நகரங்களில்தான் அதிகளவு உப்பை சேர்த்துக்கொள்கின்றனர். ஆண்கள்தான் அதிகமான அளவில் உணவுப் பழக்கத்தாலும் உப்பு சேர்ப்பதாலும் நகரங்கள், கிராமங்கள் இரண்டிலும் பெண்களைவிட அதிகமான அளவு இதய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.

கடனாளியாகும் இந்தியர்கள்

கடனாளியாகும் இந்தியர்கள்

இதய நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அதிகளவு செலவு ஆவதால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இந்திய நடுத்தரக் குடும்பங்கள் இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 27 சதவிகிதம்பேர் இதனால் வீட்டு வருமானத்துக்கு வெளியே கடன் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உணவில் உப்பு சேர்ப்பதை இந்தியாவில் குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.

உப்புக்காக நடந்த ஆய்வு

உப்புக்காக நடந்த ஆய்வு

சுதந்திர போராட்டத்தின் போது உப்புக்காக யாத்திரை போனார் காந்தி. இப்போது இந்தியர்கள் உப்பு சாப்பிடும் அளவு பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சோடியம் குளோரைடு எனப்படும் ரசாயனம்தான் நாம் சாப்பிடும் உப்பு. உப்பு சாப்பிடும் அளவு பற்றிய ஆய்வை நடத்தியிருப்பவர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் ஹெல்த் என்னும் நிறுவனம், உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஆய்விதழுக்காக இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

உப்புக்கருவாடு...ஊறவச்ச சோறு

உப்புக்கருவாடு...ஊறவச்ச சோறு

நம் ஊரில்தான் ஊறுகாய், அப்பளம், கருவாடு, உப்புக்கண்டம் என உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இந்த உப்புக்கள் எல்லாம் ரத்தத்தில் சேர்ந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் உப்பு சாப்பிடுவது அவசியம்தான். எந்த அளவிற்கு என்றால், 19 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ஒருநாளைக்கு 5 கிராம் உப்பு சாப்பிட்டால் போதுமானது என்று உலக சுகாதார அமைப்பு. இந்தியர்கள் சுமார் 10.98 கிராம் சாப்பிடுவதாக சொல்கிறது சமீபத்திய ஆய்வு.

உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?

உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா?

இந்தியர்கள் அதிக அளவில் உப்பு, சர்க்கரை ஆகியவைகளை சேர்த்துக்கொள்வதினால்தால் நோய்களுக்கு ஆளாகின்றனர். உப்பு எந்த அளவிற்கு சேர்க்கிறோமோ அந்த அளவிற்கு ஹைபர்டென்சன் எனப்படும் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அது இதய பாதிப்புக்கு காரணமாகிறது. இந்தியாவில் 2010ஆம் ஆண்டில் இருந்து 2013 வரை 23 சதவிகித இறப்புகள் உப்பு அதிகமாக உட்கொள்வதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அந்த ஆய்வு. எனவேதான் உப்போ, சர்க்கரையோ அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொட்டாசியத்திற்கு எதிரியான சோடியம்

பொட்டாசியத்திற்கு எதிரியான சோடியம்

உலக சுகாதார நிறுவனக் கூற்றின்படி, அதிகமான சோடியம் சேர்த்துக்கொள்வது போதுமான அளவு பொட்டசியம் உடலில் சேராமல் போவது இதனால்தான் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தையும் கொண்டு வருகிறது. தவிர, ஊறுகாய், பாஸ்ட் புட் போன்ற உணவுகளை தவிர்த்துவிட்டு, பழங்களை அதிகளவில் மக்கள் சாப்பிட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கான இந்தியர்கள்

லட்சக்கணக்கான இந்தியர்கள்

உணவில் உப்பு சேர்ப்பவர்களை மையமாக வைத்து 222,214 இந்தியர்களை குளோபல் ஹெல்த் நிறுவனத்தினர் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு நடத்தியதில், உப்பை சேர்த்துக்கொள்ளும் அளவு நபருக்கு நபர் மிகுந்த மாறுபாடு இருந்துள்ளது. உப்பை உட்கொள்ளும் அளவில் 5.22 முதல் 42.30 கிராம்கள் வரை மாறுபாடுகள் இருக்கிறதாம்.

சிறுநீர் பரிசோதனை

சிறுநீர் பரிசோதனை

உப்பை சேர்த்துக்கொள்ளும் அளவுகள் பற்றி 1986ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 2015ஆம் ஆண்டு வரை பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், தேவையான அளவு அல்லது நடுத்தர அளவுக்கு மட்டுமே இந்தியர்கள் உப்பை பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வின் முடிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

21 வெவ்வேறான ஆய்வுகளில் 24 மணி நேரத்துக்குள் சேகரிக்கப்பட்ட சிறுநீரை மையமாகக் கொண்டும் 24 மணி நேரத்துக்குள் அவர்கள் எடுத்துக்கொண்ட உணவை மையமாகவைத்தும் இத்தகைய ஆய்வுகள் இதற்குமுன்னர் நடத்தப்பட்டுள்ளன.

உப்பை அதிகம் சேர்க்கும் மாநிலங்கள்

உப்பை அதிகம் சேர்க்கும் மாநிலங்கள்

இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கத்திய மாநில மக்கள் உப்பை அளவுக்கதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். மாநிலத்துக்கு மாநிலம், இடத்துக்கு இடம் உப்பை உட்கொள்வதில் இந்தியர்களிடையே பெரும் மாறுபாடு தெரிகிறதாம்.

திரிபுரா அதிகம்

திரிபுரா அதிகம்

திரிபுரா மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான அளவு உப்பை உணவில் பயன்படுத்துகிறார்கள். நகரங்களிலும் கிராமங்களிலும் 13.14 கிராம் சராசரியாக உப்பை பயன்படுத்துகிறார்களாம். திரிப்புராவைச்சேர்ந்தவர்கள் 3 மடங்கு கிட்டத்தட்ட 14 கிராம் உப்பு சாப்பிடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் விரைவாக வர அதிக வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கிறது அந்த ஆய்வு .

குறைவான உப்பு

குறைவான உப்பு

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உப்பை ஓரளவு குறைவாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். 6 முதல் 7 கிராம் வரை மட்டுமே தினமும் உப்பை பயன்படுத்துகிறார்கள். இதே மாநிலங்களில் மகாராஷ்டிரா தவிர, இந்த அளவைவிட குறைவாக உப்பை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியர்களின் மரணங்கள்

இந்தியர்களின் மரணங்கள்

இந்தியாவில் இதயநோய் தாக்கி 25.1% ஆண்களும், 20.8% பெண்களும் உயிரிழக்கின்றனர். சுவாசக் கோளாறினால் சராசரியாக 5.8% சதவிகித ஆண்களும், 6.6% பெண்களும் மரணிக்கின்றனர். நீரிழிவு நோயினால் 2.2% ஆண்களும், 2.4% பெண்களும் உயிரிழக்கின்றனர் காசநோய், மலேரியா, ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்களினாலும் மரணங்கள் நிகழ்கின்றன. அதிக அளவு உப்பு உட்கொள்வதன் மூலமே இதயநோய்கள் பாதிப்பும் மரணங்களும் தாக்குகின்றன. உலக சுகாதார நிறுவனம் 30 சதவிகித மக்களிடையே உலகளவில் உப்பை உணவில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து பல்வேறு நோய்களைத் தடுக்க 2025 ஆண்டுக்குள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆரோக்கியமற்ற உணவுகள்

ஆரோக்கியமற்ற உணவுகள்

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் உள்ளது. பருப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகிய உணவுகளை குறைவாகவே சாப்பிடுகிறார்கள். துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலும் அதிகளவு உப்பு, இனிப்பு, உடலுக்குத் தீமை தரும் கொழுப்புகள்தான் அதிகம் உள்ளன. இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளில் உள்ள அதிக உப்பானது உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், பக்கவாதம் போன்ற விரும்பாத விளைவுகளை உடலுக்குச் செய்கின்றன' என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை எழுத்தாளர் கிளாரி ஜான்சன். இதனால் உடனடியாக நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உப்பு விழிப்புணர்வு

உப்பு விழிப்புணர்வு

நாடு முழுவதும் உப்பை சரியாக உணவில் பயன்படுத்த மக்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் உப்பின் அளவும் உணவில் குறையும், இதய நோய்கள் வருவதும் தடுக்கப்படும். அதனால் ஏற்படும் செலவும் மக்களுக்குக் குறையும். உயர் ரத்த அழுத்த அபாயமும் ஏற்படாது' என்கிறார் இந்த ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் விவேக் ஜா.

அளவான உப்பு வளமான ஆரோக்கியம்

அளவான உப்பு வளமான ஆரோக்கியம்

இந்த ஆய்வு நிறுவனம் 'தேசிய உப்பு குறைத்தல்' நிகழ்வையும் இந்தியாவில் நடத்தவிருக்கிறது. இதன்மூலம் மக்களின் நல வாழ்வும், தேவையற்ற சிகிச்சை செலவுகளும் தடுக்கப்படும் என்கிறார்கள். இந்த நிகழ்வின்மூலம் கடைகள், தெருவில் உணவு விற்பவர்கள், உணவகங்கள், உணவு தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் அனைவரிடமும் உப்பு பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

உப்பு எவ்வளவு

உப்பு எவ்வளவு

உப்பை பயன்படுத்தும் அளவுகள் எவ்வளவு என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. அதன்படி பெரியவர்களுக்கு - 5 கிராமுக்கு கீழே மட்டும்தான் உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு - 2 வயதில் இருந்து பதினைந்து வயது வரை அவர்களின் தேவைக்கு ஏற்ப மட்டுமே உப்பை உணவில் சேர்க்க வேண்டும். எல்லா உப்பிலும் அயோடினை அவசியமாக சேர்க்கிறார்கள். அயோடின் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும்.

உப்பை குறைப்போம்...

உப்பை குறைப்போம்...

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவு உப்பை எடுத்துக்கொண்டால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்றைக்கு சர்க்கரை, நீரிழிவு நோய்களுக்கு கொடுக்கப்படும் விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. இனி உப்பு சேர்ப்பது பற்றியும், உப்பு அதிகரித்தால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதிக அளவில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

English summary
An average Indian consumes 10.98 grams of salt per day–119% more than the recommended limit of five grams per day by the World Health Organization (WHO)–according to an IndiaSpend analysis of a study conducted by the Australia-based George Institute of Global Health (GIGH), published in the Journal of Hypertension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X