For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளாஷ் பேக் 2016: செல்லாத ரூபாய் நோட்டும்... செத்துப் பிழைத்த மக்களும்...: மறக்க முடியுமா

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு ஏழை நடுத்தர மக்களை பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. 75க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ம் தேதி அறிவித்துள்ளார்.

நாட்டில் கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்த நிதித் துறையிலும் விரைவில் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தார். அதன்படி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மோடி பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அவசர தேவையை கருதி நவம்பர் 11ஆம் தேதி வரை மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பால் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, பஸ் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள், அரசு கூட்டுறவு அங்காடிகளில் மட்டும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை அஞ்சல் நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

இந்த காலக்கெடுவுக்குள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாதவர்கள் வங்கிகளில் தகுந்த அடையாள சான்றுகளை சமர்ப்பித்து வரும் மார்ச் 31ஆம் தேதி வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். நாடு முழுவதும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று மோடி அறிவித்தார்.

நள்ளிரவில் ஏடிஎம் வாசலில் வரிசை

நள்ளிரவில் ஏடிஎம் வாசலில் வரிசை

மோடி அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் ஏடிஎம் வாசல்களில் குவிந்தனர். முடிந்த அளவு அவர்களின் அக்கவுண்டுகளில் இருந்த பணத்தை எடுத்தனர். விடிய விடிய ஏடிஎம் வாசல்களில் வரிசையிருந்தது.

வரிசையில் ஏழை மக்கள்

வரிசையில் ஏழை மக்கள்

நவம்பர் 10ம் தேதியன்று வங்கிகள் திறந்த உடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வங்கிகளில் திரண்டனர். ஆனால் அவர்களுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கு பதில் இரண்டு 2000 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டன. ஏழை, நடுத்தர மக்களின் துயரம் கட்டுக்கடங்காமல் போனது.

கவலையடைந்த சிறு வியாபாரிகள்

கவலையடைந்த சிறு வியாபாரிகள்

சிறிய வியாபாரிகளான காய்கறி விற்பவர்கள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்களிடையே கவலை எழுந்துள்ளது. பதற்றமடைய வேண்டாம் என்று பிரதமர் முதல் ரிசர்வ் வங்கி வரை வரை கூறினாலும், பதற்றமும் பரபரப்பும் அதிகரித்தது.

ஏடிஎம்கள் செயலிழந்தன

ஏடிஎம்கள் செயலிழந்தன

நவம்பர் 11ம் தேதி முதல் ஏடிஎம்கள் இயங்கும் என்று கூறினாலும் பல்லாயிரக்கணக்கான ஏடிஎம்கள் இன்னமும் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. நோ சர்வீஸ் போர்டுதான் பல இடங்களில் காணப்பட்டதால் பணம் கிடைத்த ஒரு சில ஏடிஎம் மைய வாசல்களில் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர்.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

பணம் கொடுக்காமல் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்த ஏடிஎம் மிசின்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் மக்கள். ஒப்பாரி வைத்து அழுது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முதலில் சிரமத்தை சந்தித்தவர்கள் நாளாக நாளாக அதையே பழகிக் கொண்டனர்.

வரிசையில் ராகுல்காந்தி

வரிசையில் ராகுல்காந்தி

டெல்லி சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்களோடு மக்களாக ராகுல் காந்தி வரிசையில் நின்றார்.அப்போது அவருடன் அங்கிருந்தவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

முடங்கிய விற்பனை

முடங்கிய விற்பனை

பெரு விற்பனை நிலையங்கள் பாயின்ட் ஆப் சேல் என்று சொல்லப்படும் ஸ்வைப்பிங் மிஷின்களை வைத்திருந்ததால் அவர்களின் வியாபாரம் முற்றிலும் முடங்கவில்லை. ஆனால் சிறு வியாபாரிகளின் வியாபாரம் முற்றிலும் முடங்கியது.

பணமில்லா பரிவர்த்தனை

பணமில்லா பரிவர்த்தனை

ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்று மோடி அறிவித்தாலும், படிப்பறிவு இல்லாத பல பாமர மக்களின் பாடு படு திண்டாட்டமானது. இருந்த பணமும் செல்லாமல் போனதே, அதை மாற்ற வங்கிக்கு போனால் விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறதே என்று பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

சம்பள நாட்கள்

சம்பள நாட்கள்

மோடியின் அறிவிப்புக்குப் பின்னர் சம்பள பணத்தை எடுக்கவே படு திண்டாட்டமாகிப் போனது. நூறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள், முதியோர் பென்சன் எடுக்க வங்கிக்கு சென்றவர்கள் வரிசையில் காத்திருந்தும் பணமில்லாமல் திரும்பும் நிலையே பல கிராமங்களில் ஏற்பட்டது.

திருமணம் சுப நிகழ்வுகள்

திருமணம் சுப நிகழ்வுகள்

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்த பின்னர்தான் கர்நாடகாவில் 500 கோடி ரூபாயில் திருமணம் செய்த சம்பவமும் நிகழ்ந்தது. அதே நேரத்தில் 500 ரூபாயில் திருமணம் நடந்த சம்பவமும் நிகழ்ந்தது. திருமண செலவிற்காக 2.5 லட்சம் மட்டும் வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதிலும் ஏகப்பட்ட நிபந்தனை விதித்தது.

பலியான உயிர்கள்

பலியான உயிர்கள்

மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்புக்குப் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் பலரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் 75க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியுள்ளது செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு.

விசாரணை அப்புறம் வாபஸ்

விசாரணை அப்புறம் வாபஸ்

செல்லாத ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவித்தாலும் அதற்கும் பல நிபந்தனைகள் விதித்தனர். 5000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் விசாரணை செய்யப்படும் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானது. மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அந்த அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.

புத்தாண்டில் விடியுமா?

புத்தாண்டில் விடியுமா?

நவம்பர் 8ம் தேதிக்கு முன்பாக 500 மற்றும் 1000 என்று சர்வ சாதாரணமாக புழங்கியவர்கள் எல்லாம் 100 ரூபாய்க்கு கூட தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 நாட்களில் நிலை சீராகும் என்றார்கள், 20 நாட்கள் ஆனது, 45நாட்கள் ஆனது ஆனாலும் நிலைமை சீரடையவில்லை. புத்தாண்டிலாவது விடியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
பண முதலைகளுக்கு வைத்த குறியில் சிறு சிறு மீன்கள்தான் உயிரிழந்து விட்டன. 2016ம் ஆண்டு பல நடுத்தர வர்க்கத்தினரை ஏழைகளாக்கியது என்னவோ உண்மைதான்.

English summary
Since the implementation of demonetisation at midnight on 8 November, more than 75 people have been reported dead in incidents directly or indirectly caused by the central government move.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X