
நேபாளம் டூ காரைக்கால்.. அச்சுறுத்தும் காலரா நோய்! இதுக்கும் அந்த “உணவு” தான் காரணமா?
காரைக்கால்: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த சில நாடுகளுக்கு முன்பாக காலரா நோய் அதிகளவில் பரவிய நிலையில், தற்போது காரைக்காலிலும் காலரா பரவத் தொடங்கி இருப்பதால் இதற்கும் பானிபூரி தான் காரணமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி உணணும் நொருக்கு தீனி வகையாக பானி பூரி விளங்கி வருகிறது.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகையான இது, தமிழ்நாட்டிற்கும் வட இந்தியர்களோடு சேர்ந்து வந்துவிட்டது.
பானிபூரி சாப்பிட்டால் காலரா பரவுமா? நேபாளத்தில் விதிக்கப்பட்ட தடையின் பின்னனி

பானி பூரி
தொடக்கத்தில் நகரங்களில் மட்டுமே இருந்த பானிபூரி தற்போது கிராமங்கள் மூளை முடுக்குகளிலும் எளிதில் கிடைக்கிறது. வட இந்திய உணவு என்று ஒதுக்காமல் அதன் சுவை காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் பானி பூரியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். அவ்வப்போது பானி பூரிக்கு எதிராக உடல்நலம் சார்ந்து வாட்ஸ் அப்பில் பதிவுகள் பகிரப்பட்டாலும் அதை படித்துக்கொண்டே மறு நொடி பானி பூரி சாப்பிடுபவர்களாக மக்கள் மாறிவிட்டனர்.

காத்மாண்டுவை கலங்கடித்த காலரா
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நேபாளம் தலைநகர் காத்மாண்டு சுற்றுவட்டார பகுதிகளில் காலரா நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக உதய்பூர் சுற்றுவட்டாரத்தில் காலரா நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. கடந்த 19 ஆம் தேதி ஒருவருக்கு காலரா நோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 12 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவாரம் தடை
பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பானி பூரிக்கு அசுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் காலரா நோய் பரவியுள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பானி பூரி விற்பனைக்கு ஒருவாரம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு உணவு பிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரைக்காலிலும் காலரா
இந்த நிலையில் புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் பொதுமக்கள் காலரா, வயிற்றுப்போக்கு காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 700 பேர் காலரா, வயிற்றுப்போக்கு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த ஒரு மாதமாகவே காலரா பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்?
இதன் காரணமாக சுகாதார அவசர நிலை பிறப்பித்துள்ள மாவட்ட ஆட்சியர் மன்சூர், ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று என்று அறிவுறுத்தியுள்ளார். இதற்கும் பானிபூரிதான் காரணமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்திட்டு வந்தனர். இந்த நிலையில், சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.