அவர் வாரிசுனா.. இடம் தரணுமா? முக்கியமான நபரை கழற்றிவிட்ட பாஜக.. கோவாவில் எதிர்பாராத திருப்பம்!
கோவா: கோவா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி கோவா மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது. கோவா, உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கோவாவில் மீண்டும் வென்று எப்படியாவது ஆட்சியை பிடிக்கலாம் என்ற முனைப்பில் அம்மாநில ஆளும் பாஜக உள்ளது.
Hinduphobia எதிரான ஆக்ஷன் தேவை.. வலதுசாரி அடிப்படைவாதம் ஒன்றும் பயங்கரவாதம் இல்லை.. ஐநா இந்திய தூதர்

கோவா சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் கோவா சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 34 வேட்பாளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை கோவாவில் 40 தொகுதிகளிலும் பாஜக தனியாக களமிறங்குகிறது. அங்கு பெரும்பான்மை பெற 21 இடங்கள் தேவை. எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அங்கு உருவாகாத காரணத்தால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கோவாவில் களமிறங்கி உள்ளது.

கோவா பாஜக
பல கட்ட ஆலோசனைக்கு பின்பே அங்கு முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் சிலரின் மனைவிக்கு தேர்தலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஸ்வஜித் ரானேவின் மனைவி திவ்யா ரானே, அமைச்சர் மோன்சர்ட் மனைவி ஜெனிபர் போன்றவர்களுக்கு அங்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது. அதாவது கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

பாஜக வேட்பாளர்
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உட்பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கோவாவில் பாஜகவின் அடையாளமாக இருந்தவர் மனோகர் பாரிக்கர். மனோகர் பாரிக்கர் முதல்வராக இல்லை என்றால் அங்கு ஆட்சியே நடக்காது என்ற நிலைதான் 3 வருடங்களுக்கு முன்புவரை பாஜகவில் இருந்தது. 2019ல் மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்தார். இவர் பஞ்சிம் தொகுதியில் 1994 - 2019 வரை எம்எல்ஏவாக இருந்தார்.

மனோகர் பாரிக்கர்
இதே தொகுதி அவர் மகன் உட்பாலுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக அங்கு எம்எல்ஏவாக இருக்கும் அடான்சியோ பாபுஷ் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். உட்பாலுக்கு வேறு இரண்டு தொகுதிகளை வழங்க பாஜக முன் வந்ததாகவும், ஆனால் உட்பால் பஞ்சிம்தான் வேண்டும் என்று கேட்டதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், அம்மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெற வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. பாஜக கட்சியில் முக்கியமான நபராக இருந்தவர் மனோகர் பாரிக்கர்.. அவரின் மகனுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.