ஆட்டம் ஆரம்பம்! தேர்தல் முடிவுக்கு முன்பே கூட்டணியை உடைக்கும் பாஜக! கோவாவில் குதிரை பேரம்?
பனாஜி: ‛‛கோவாவில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் ஆதரவை கோருவோம். இதுதொடர்பாக மேலிட தலைவர்கள் பேசி வருகின்றனர்'' என பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. பிரமோத் சாவந்த் முதல்வராக உள்ளார். இங்குள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 332 வேட்பாளர்கள் களத்தில் நின்ற நிலையில் மொத்தம் 79.61 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுக்கள் மார்ச் 10ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உ.பி:பைனாகுலரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறையை 3 ஷிப்ட் போட்டு அகிலேஷ் வேட்பாளர்கள் கண்காணிப்பு
இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக தனித்து களம் இறங்கியது. எதிர்கட்சியான காங்கிரஸ், கோவா ஃபார்வர்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி தனித்தும், கோவாவின் பழம் பெரும் கட்சியான மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடன்(எம்ஜிபி) கூட்டணி அமைத்து மேற்கு வங்க முதல்வரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தேர்தலை சந்தித்தது.

தொங்கு சட்டசபை
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ், பாஜக உள்பட எந்த கட்சியினருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதனால் ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, சுயேச்சைகள் கிங்மேக்கராக இருக்கலாம் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

எம்ஜிபி ஆதரவுடன் ஆட்சி
இந்நிலையில் தான் தேர்தல் முடிவுக்கு முன்பே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் (எம்ஜிபி) ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‛‛கோவாவில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது. ஆனால் பாஜக 22 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால் சுயேச்சைகள் மற்றும் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடன் ஆதரவை கேட்போம். இதுதொடர்பாக மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடன் டெல்லி மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்'' என்றார்.

முடிவுக்கு முன்பே...
ஆனால் தற்போது மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி திரிணாமுல் கூட்டணியில் உள்ளது. இதன்மூலம் தேர்தல் முடிவுக்கு முன்பே பிற கட்சியின் ஆதரவை பெற பாஜக தயாராகி உள்ளது. பிரமோத் சாவந்த் இவ்வாறு கூறிய நிலையில் 2 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியின் சுதீன் தாவலிகார் கூறுகையில், ‛‛தேர்தல் முடிவுக்கு பிறகு எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை கூறுவோம். ஆனால் பிரமோத் சாவந்த் முதல்வராக ஒருபோதும் எங்கள் கட்சி ஆதரவு அளிக்காது '' என்றார்.

முந்தைய வரலாறு
பாஜக, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி இடையேயான இந்த பாகுபாட்டுக்கும் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. அதாவது 2017 கோவா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இருப்பினும் சுயேச்சைகள், தீபக் தாவாலிகள் கட்சி, கோவா பார்வர்டு கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. மனோகர் பாரிக்கர் முதல்வராக செயல்பட்டார். அவர் மரணமடையவே பிரமோத் சாவந்த் முதல்வரானார். இதையடுத்து அவர் 2019ல் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியை சேர்ந்த 2 பேரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு முறிந்தது.

3 இடங்களுக்கு வாய்ப்பு
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அக்கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி 3 முதல் 5 இடங்கள் வரை வெல்லலாம் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. இதில் மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி 3 இடங்கள் வரை வெல்லலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் காங்கிரசுக்கு முன்பே பாஜக காய்நகர்த்தி வருகிறது.

முதல்வர் யார்
முன்னதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்திடம், ‛‛மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் உங்களுக்கு முதல்வர் பொறுப்பு கிடைக்குமா'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, ‛‛கோவாவில் பாஜக என் தலைமையில் தேர்தலை சந்தித்துள்ளது. மீண்டும் வெற்றி பெற்று என் தலைமையில் ஆட்சி அமைப்போம் என மாநில தலைவர், மேலிட தலைவர்கள் பலமுறை கூறியுள்ளனர். இதனால் மீண்டும் ஒருமுறை என் தலைமையில் கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கும் என நம்புகிறேன்'' என்றார்.