"உங்க நேர்மை பிடிச்சு இருக்கு.." பவர் கட் சிக்கல்.. ஓப்பானாக உண்மைகளை போட்டு உடைத்த கோவா மின்வாரியம்
கோவா: கோவா மாநிலத்தில் மழை காரணமாக மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அப்போது கோவா மின்வாரியம் பதிவிட்ட ட்வீட்கள் வைரலாகி உள்ளது.
நாடு முழுக்க நிலக்கரி பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்சார உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்சார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நொடி வரை.. மத்திய மின்சாரம் நமக்கு வரவில்லை.. குஜராத் நிலை தெரியுமா? செந்தில் பாலாஜி பளீர்!.

கோவா
இதனிடையே இயற்கை சீற்றம் காரணமாகவும் சில மாநிலங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் நேற்று திங்கள்கிழமை பெய்த இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று காரணமாக அங்குப் பல பகுதிகள் மின்சார சேவை பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மின் கம்பிகள் கூட முறிந்து விழுந்தன. இதனால் கோவா மாநிலத்தில் பல பகுதிகளில் மின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வைரல்
அப்போது கோவா மக்கள் பலரும் தங்கள் பகுதியில் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எப்போது சீராகும் என்றும் ட்விட்டர் தளத்தில் கோவா மின்வாரியத்தின் பக்கத்தை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர். விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவா மின்வாரிய பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். அப்போது கோவா மின்வாரியம் சார்பில் போடப்பட்ட ட்வீட் உடனடியாக இணையத்தில் தீயாகப் பரவ தொடங்கியது.

எனக்கும் மின்சாரம் இல்லை
அதாவது கோவா மின்வாரியம் தனது ட்விட்டரில், "எனக்கும் இங்கு லைட்கள் இல்லை. மின் சப்ளை மீட்டெடுக்கப்படவில்லை என்றால் மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜ் தீர்ந்து.. உங்களிடம் இருந்து விரைவில் துண்டிக்கப்படுவேன்" என்று பதிவிடப்பட்டு இருந்தது. திங்கள்கிழமை நடு இரவில் கோவா மின்வாரியத்தின் இந்த ட்வீட்டை கண்டு பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.

சிறப்பு சலுகை இல்லை
கோவா மின்வாரியம் தனது ட்விட்டரில், "நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண நுகர்வோர் தான். இப்போது நான் அலுவலகத்தில் இல்லை. ட்விட்டரில் தளத்தில் இருக்கும் ஒரே டிபார்ட்மென்ட் நபர் நான் மட்டும் தான். ஆனால், எனக்கு எந்த சிறப்புச் சேவையும் இல்லை. நீங்கள் எதிர்கொள்ளும் அதே சிக்கலைத் தான் நானும் தொடர்ந்து கொள்கிறேன்" என்று அடுத்த ட்வீட் போடப்பட்டு இருந்தது.

ஹேக் செய்யப்படவில்லை
இன்னும் சிலர் கோவா மின்வாரியத்தின் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக பதிவிட்டனர். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கோவா மின்வாரியம் தனது ட்விட்டரில், "ஒரு ஹேக்கர் தனது உறக்கத்தை தியாகம் செய்து இவ்வளவு தாமதமாக வேலை செய்து, உங்களுக்கு ரிப்ளே செய்வார் என்று நான் நினைக்கவில்லை. அழிவை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கம். இந்த ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை" என்று பதிவிட்டு இருந்தார்.

கோவா மின்துறை
இந்த ட்வீட்களை வரவேற்கும் வகையிலேயே பலரும் பதிவிட்டு வந்தனர். இருப்பினும், இன்று மாலை அந்த ட்வீட்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டது. கோவா அரசு சார்பில் உள்ள ட்விட்டர் தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள தளங்களில் ஒன்று மின்வாரியத்தின் ட்விட்டர் பக்கமாகும். கோவா முன்னாள் மின்துறை அமைச்சர் நிலேஷ் கப்ரால் மற்றும் அப்போதைய மின்துறை செயலர் குணால் ஆகியோரின் முன்னெடுப்பால் தான் இந்த பக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.