இதுதான் ரியல் குடும்ப அரசியல்! ஜோடி ஜோடியாக களமிறங்கும் வேட்பாளர்கள்.. கோவா தேர்தலில் சுவாரசிய தகவல்
கோவா: கோவா சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
உத்தரப் பிரதசேம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் நாட்டிலேயே சின்ன மாநிலமான கோவாவில் வரும் பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
மருமகள் எதிர்த்து போட்டியிட்டதால்.. அப்படியே ரிவர்ஸ்போன மாமனார்.. கோவா தேர்தல் கலகலப்பு!

5 தம்பதிகள்
கோவாவில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆதமி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இருப்பினும், அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் உண்மையான போட்டி! இந்நிலையில், கோவா தேர்தலில் சுவரஸிய நிகழ்வாக மொத்தம் 5 தம்பதிகள் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றன.

கோவா சட்டசபையில் 25%
நாட்டிலேயே சிறிய மாநிலமாகக் கோவா மொத்தம் 40 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டது. இதில் தான் இப்போது 5 தம்பதிகள் போட்டியிடுகின்றனர். இவர்கள் 10 பேரும் தேர்தலில் வெற்றிபெற்றால் இவர்கள் மட்டும் கோவா சட்டசபையில் 25%ஆக இருப்பார்கள். பாஜக சார்பில் 2 தம்பதிகளும் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு தம்பதியும் தேர்தலில் களமிறங்குகின்றனர். மற்றொரு தம்பதியில் கணவர் பாஜக சார்பிலும் மனைவி சுயேச்சையாகவும் களமிறங்குகின்றனர்.

சுகாதார அமைச்சர்
தற்போது ஆளும் பாஜக அரசில் சுகாதார அமைச்சராக உள்ள விஸ்வஜித் ரானே அம்மாநிலத்தின் வால்போய் தொகுதியில் இருந்தும், அவரது மனைவி தேவியா என்பவர் போரியம் தொகுதியில் இருந்தும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த போரியம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேவியாவின் மாமனார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக
அதேபோல பனாஜி சட்டமன்றத் தொகுதியில் அடனாசியோ மான்செராட்டே, தலீகாவ் தொகுதியில் இருந்து அவரது மனைவி ஜெனிஃபர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தனர். கடந்த 2019இல் இந்த தம்பதி உட்பட 8 எம்எல்ஏக்கள் அப்படியே காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக துணை முதல்வர்
அதேபோல கோவா துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேகர் மற்றும் அவரது மனைவி சாவித்ரி காவ்லேகர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இதில் சந்திரகாந்த் காவ்லேகர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரது மனைவிக்கு பாஜக வாய்ப்பளிக்க மறுத்த நிலையில், அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இருவரும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் & திரிணாமுல்
மேலும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மைக்கேல் லோபோ மற்றும் அவரது மனைவி டெலிலா ஆகியோரும் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர். இது தவிர மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிரண் கண்டோல்கர் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதில் எத்தனை ஜோடிகள் தேர்தலில் வெல்கிறார்கள் என்பது மார்ச் 10இல் தெரிந்துவிடும்.