For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா?

By BBC News தமிழ்
|

ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது.

ஆடைகள் இல்லாமல் குழந்தைகள் மார்பகத்தை தொடுவது, அதாவது நேரடியாக உடலில் கை வைக்காமல் இருந்தால் வெறும் இந்திய தண்டனை சட்டம் 354 (IPC 354 - Outraging a woman's modesty. அதாவது, ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல்) கீழ்தான் வரும் என்றும் கடும் தண்டனை விதிக்கப்படும் போக்ஸோவுக்கு கீழ் வராது என்றும் அந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது.

இத்தீர்ப்பு குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

எந்த வழக்கில் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்கு முன் போக்ஸோ மற்றும் IPC 354 குறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்.

போக்ஸோ (POCSO Act)

POCSO - Protection of Children from Sexual offences

இது இந்தியாவில் குழுந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்க உருவான சட்டம். இந்த சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 படி, குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது, அல்லது மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொட வைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்வது. இதில் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அபராதமும் உண்டு.

இந்திய தண்டணை சட்டம் 354 (IPC 354)

ஒரு பெண்ணுடைய அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தெளிவுடன் அவளை வன்முறையில் தாக்குவது, தாக்க முனைவதும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்

இப்போது இந்த தீர்ப்பு எந்த வழிக்கில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்

வழக்கு பின்னணி

2016ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செல்வி (அப்போது வயது 12, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொய்யாப்பழம் வாங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் செல்வி திரும்பி வராததால் அவரது தாய் செல்வியை தேடிச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டருகே வசிக்கும் நபர் ஒருவர் செல்வியை சதீஷ் (வழக்கின் குற்றவாளி, வயது 39) அழைத்து சென்றதாகக் கூறி அவரது வீட்டையும் காண்பித்துள்ளார். வீட்டிற்குள் செல்வியின் தாய் சென்ற போது சதீஷ் மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதை பார்த்துள்ளார். தனது மகள் குறித்து கேட்டதற்கு இங்கு அப்படி யாரும் இல்லை என்று கூறியுள்ளார் சதீஷ்.

கீழ்தளத்தில் தனது மகளை தேடிவிட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றார் செல்வியின் தாய். அங்கு வெளியே தாழிடப்பட்டிருந்த அறையை திறந்த போது அங்கு செல்வி அழுது கொண்டிருந்ததை தாய் பார்த்துள்ளார். அறையில் இருந்து வெளியே அழைத்து வந்து, என்ன நடந்தது என்று குழந்தையிடம் விசாரித்தபோது, "கொய்யாப்பழம் தருவதாக கூறி தன்னை அவரது வீட்டிற்கு சதீஷ் அழைத்து வந்ததாகவும், அங்கு தன் மார்பகங்களை அழுத்தி, ஆடைகளை கழற்ற முயன்றதாகவும்" செல்வி விவரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து செல்வியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்துள்ளார் அவரது தாய். பின்னர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை.

தன் கையை பிடித்து கொய்யாப்பழம் தருவதாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற சதீஷ் தன் ஆடையை கழற்ற முயன்று, மார்பகங்களை தொட்டதாகவும், தான் கத்திய போது, வாயை கையால் அடைத்ததாகவும் செல்வி அன்றே சாட்சியம் அளித்தார்.

இந்த வழக்கில் கடந்தாண்டு தீர்ப்பளித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம், இந்திய தண்டனை சட்டம் 354,363 மற்றும் 342, அதோடு போக்ஸோ சட்டம் பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் சதீஷுக்கு தண்டனை வழங்கியது.

போக்ஸோ சட்டம் பிரிவு 8 படி, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 342ன் படி ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும், ஐபிசி 363 படி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவை அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேல் முறையீடு

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் சதீஷ்.

இதில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி புஷ்பா, "வழக்கு மற்றும் வாதங்களை வைத்து பார்க்கும் போது சதீஷ் சிறுமியின் ஆடைகளை கழற்றி மார்பகங்களை தொட்டார் என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை. 12 வயது சிறுமியின் ஆடைக்குள் கை விடப்பட்டு, மார்பகங்களை அழுத்தியதாக தெரியவில்லை. குற்றவாளி நேரடியாக சிறுமியின் உடலை தொடவில்லை என்பதால், இது 'பாலியல் வன்முறை' என்ற வார்த்தைக்குள் வராது. ஆகவே இது போக்ஸோ சட்டத்திற்குள் வராது. இது இந்திய தண்டனை சட்டம் 354ன் கீழ் நிச்சயம் வரும். இது ஒரு பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றமே தவிர பாலியல் வன்முறை குற்றம் கிடையாது."

"எனவே சதீஷ் மீதான போக்ஸோ சட்டத்தை ரத்து செய்து ஐபிசி 354ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது செல்லும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆடைகளை கழற்றாமல் ஒரு பெண்ணின் அந்தரங்க உறுப்பை தொடுவது .குற்றமில்லையா என இந்த தீர்ப்பு பல விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி உள்ளது.

"குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்"

"போக்ஸோ சட்டத்தின் முக்கிய நோக்கமே குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் குற்றங்களை குறைத்து அவர்களை பாதுகாப்பதுதான். இப்போது இந்த தீர்ப்புப்படி பார்த்தால், போக்ஸோ சட்டம் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போகிறது," என்கிறார் குழந்தைகள் நல செயற்பட்டாளரும், பச்பன் பச்சாவ் அந்தோலன் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சென்னையை சேர்ந்த நாதர்ஷா மாலிம்.

பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்
Getty Images
பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்

அவர் மேலும் கூறுகையில், "ஆடைகளோடு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொட்டாலும், ஆடைகள் இல்லாமல் தொட்டாலும் அது குற்றம்தான். ஆடைகளோடு குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தால் அது தவறில்லையா?" என்று மாலிம் கேள்வி எழுப்புகிறார்.

இந்த தீர்ப்பால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரிக்கும் என்று கூறும் அவர், ஏற்கனவே போக்ஸோ சட்டத்தில் பெரும்பாலானோர் தண்டிக்கப்படுவதில்லை என்கிறார்.

இதனால் குற்றவாளிகள் தப்பித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகமாகலாம் என்றும் நாதர்ஷா மாலிம் தெரிவித்தார்.

"தவறான தீர்ப்பு தவறான முன்னுதாரணமாகி விடும்"

இது குறித்து மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறுகையில், "நாம் 2021ஆம் ஆண்டில் இருக்கிறோம். இந்த காலத்தில் பாலியல் வன்முறை (sexual assault) என்பது சொற்கள் வழியாகவோ, சொற்கள் இல்லாமலோ, தவறான எண்ணத்துடன் அணுகுவது கூட குற்றம்தான். அதற்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுப்பதற்கான சட்டங்கள் என, இவை அனைத்திலும் பாலியல் வன்முறை என்பது நேரடியாக தாக்குவது என்பது மட்டும் இல்லை. நேரடியாக அல்லாமல் பாலியல் ரீதியாக எந்த விதமான தாக்குதல் (verbal or non verbal) நடத்தினாலும் அது குற்றமாகும் என்று சட்டம் சொல்கிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கையில், இந்த வழக்கில் பாலியல் வன்முறை நிகழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இருந்தும் நீதிபதி இதுபோன்ற தீர்ப்பு அளித்துள்ளது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

"இந்த தவறான தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும். இதுபோன்ற வழக்குகளை நீதிபதிகளில் இருந்து, அதனை கையாளும் வழக்கறிஞர்கள் வரை பச்சாதாபத்துடன் அணுக வேண்டும்."

மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டு இருக்கையில், குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் இந்தத் தீர்ப்பு உள்ளது என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
The Mumbai High Court, modifying a sessions court order that held a man guilty of a minor's sexual assault, ruled that groping a child without "skin-to-skin contact with sexual intent" does not amount to the offence under the Prevention of Children from Sexual Offences (POCSO) Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X