குஜராத் சட்டசபையில் 'படேல் கிளர்ச்சி'யால் அமளி - காங். எம்.எல்.ஏ.க்கள் 'கூண்டோடு' சஸ்பென்ட்!
காந்திநகர்: இடஒதுக்கீடு கோரி படேல் சமூகம் நடத்தி வரும் கிளர்ச்சி குஜராத் சட்டசபையில் எதிரொலித்தது. இந்த பிரச்சனையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதாக ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் தங்களது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிளர்ச்சியில் 10 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குஜராத் சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. இப் போராட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
அதனால் அடுத்தடுத்து 3 முறை சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை கூடியபோதும், அமளி நீடித்ததால் சபையில் இருந்த 54 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ஒருநாள் சஸ்பென்ட் செய்து சபாநாயகர் கண்பத் வாசவா உத்தரவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். உடனே சபைக்காவலர்களை அழைத்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த அமளியில் பங்கேற்காத எதிர்க்கட்சி தலைவர் சங்கர்சிங் வகேலாவும், சபைக்கு வராத 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சஸ்பென்ட் நடவட்டிக்கையில் இருந்து தப்பினர்.