“எவ்ளோ பெரிய ஆளா வேணாலும் இருங்க.. ஆனா” - 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஐகோர்ட் அதிரடி!
அமராவதி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராம வேளாண் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவருக்கு வேலையும் வழங்காமல், பதிலும் அளிக்காமல் இழுத்தடித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாத காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவித்திடுக! நீதித்துறை விழாவில் முதல்வர் முன்வைத்த 3 கோரிக்கைகள்!

ஐகோர்ட்டில் வழக்கு
ஆந்திர மாநிலம் கர்னுால் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர், கிராம வேளாண் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால், 2019ஆம் ஆண்டு அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்ற உத்தரவில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதனால் மனுதாரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி பி.தேவானந்த் நேற்று விசாரித்தார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் கிராம வேளாண் உதவியாளர் பணிக்குத் தகுதியற்றவர் என வாதாடினார்.
இதையடுத்து நீதிபதி, அதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்னர்தானே கூறியிருக்கிறீர்கள். 2019 அக்டோபரில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இன்னும் ஏன் அமல்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜெயில்
மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய சிறப்பு தலைமை செயலர் பூனம் மல்லகொண்டையா, அப்போதைய வேளாண் துறை சிறப்பு ஆணையர் அருண்குமார், அப்போதைய கர்னுால் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன் ஆகிய மூவருக்கும் தலா ஒரு மாத சிறைத் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அருண்குமார், வீரபாண்டியன் ஆகியோர் சிறை தண்டனை வழங்குவதை தவிர்க்குமாறு கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

நிறுத்தி வைப்பு
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதற்கு தண்டனை அவசியம் எனக் கூறி, அவர்களின் தண்டனையை ஆறு வாரங்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியான பூனம் மல்ல கொண்டையா, 13ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்ற பதிவாளர் முன் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.