For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்? - விவரிக்கும் மாலன்

By BBC News தமிழ்
|
அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?
Getty Images
அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்கள், குறிப்பாக 1971க்குப் பிறகு ஆளுமைகளின் மோதல்களாகவே இருந்து வந்திருக்கிறது. எதிரெதிராக இரு கட்சிகள் அல்லது இரு கூட்டணிகள், அவற்றைத் தலைமை தாங்கும் ஆளுமைகளுக்கிடையேயான பலப் பரிட்சையாகவே தேர்தலைக் கருதி வந்திருக்கின்றன. 1971ல் காமராஜர் - கருணாநிதி, அதன் பின் கருணாநிதி - எம்.ஜி.ஆர், அதன் பின் கருணாநிதி -ஜெயலலிதா என்ற பலப் பரிட்சைகளே இங்கு அரசியலாகப் பரிணமித்திருக்கின்றன.

இந்தப் பலப் பரிட்சைகளில் வலு சேர்த்துக்கொள்ள முரண்பட்ட சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளைக் கூட்டுச் சேர்த்துக்கொள்வதும் நடந்திருக்கிறது. சோஷலிசம் பேசிய காமராஜரும், சுதந்திரப் பொருளாதாரம் பேசிய ராஜாஜியும் ஒன்று சேர்த்துக் கருணாநிதியை எதிர்த்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து கருணாநிதியை எதிர்த்திருக்கிறார்கள். அதே கம்யூனிஸ்ட்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியோடு இணைந்து எம்.ஜி.ஆரை எதிர்த்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஒரு சில தேர்தல்களில் எம்ஜி.ஆரை எதிர்த்திருக்கிறது. ஒரு சில தேர்தல்களில் கருணாநிதியை எதிர்த்திருக்கிறது. காங்கிரஸ் 1991ல் ஜெயலிதாவுடன் சேர்ந்து கருணாநிதியை எதிர்த்தது. மறுதேர்தலில் அது தமிழ் மாநில காங்கிரசாக அவதாரம் எடுத்து ஜெயலலிதாவை எதிர்த்தது. தே.மு.தி.க ஒரு தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்தது. மறு தேர்தலில் ஆதரித்தது. பா.ம.க., ம.தி.மு.க. என்ற கட்சிகளும் இந்த விளையாட்டுகளுக்கு விலக்கல்ல. 2001ல் பா.ஜ.க., தி.மு.கவோடு இணைந்து ஜெயலலிதாவை எதிர்த்தது.

இதன் காரணமாக ஆங்கில ஊடகங்கள், தமிழகச் சட்டமன்றத் தேர்தலை, "பலவான்களின் மோதல்" (Clash of Titans) என்றே வர்ணிப்பதுண்டு. இந்த பலவான்களின் மோதலில் அடிவாங்கி மூலையில் சுருண்டது என்னவோ சித்தாந்த அரசியல்தான். இந்திய அரசியல் 1989க்குப் பின் கூட்டாட்சி, தனியார்மயமாதல்- உலகமயமாதல், இந்துத்வா எனப் பல சித்தாந்த மாற்றங்களை எதிர்கொண்டது. ஆனால் அவை தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிரொலிக்கவில்லை. இங்கு தேர்தல் என்பது திராவிடப் பலவான்களின் மோதல்தான்.

ஆனால், வரவிருக்கும் தேர்தல் இந்த வழக்கத்திலிருந்து வேறுபடும் என்பதற்கான சமிக்ஞைகள் அமித்ஷாவின் அண்மைய தமிழக வருகையில் வெளிப்பட்டிருக்கின்றன.

அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க என்று சொல்லப்பட்டாலும் அமித்ஷாவின் வருகை அரசியல் காரணங்களுக்கான பயணம் என்பது அவர் வரும் முன்னரே அப்பட்டமாக புலப்பட்டது. இதில் கவனம் பெற வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் அவரை தமிழகத்திற்கு அழைத்தது தமிழக பா.ஜ.க. அல்ல, அ.தி.மு.க. என்பதுதான். அவர் அழைக்கப்பட்டது அவரது துறைசாராத திட்டங்களைத் தொடங்கி வைக்க. நீர்த் தேக்கத்தைத் அர்ப்பணிக்க நீர்வளத் துறை அமைச்சரோ, மெட்ரோ ரயில் பணிக்கு அடிக்கல் நாட்ட இரயில்வே அமைச்சரோ, எண்ணை சேமிப்பு தொடர்பான திட்டங்களுக்கு எரிசக்தித் துறை அமைச்சரோ அழைக்கப்படவில்லை. மாறாக அவற்றோடு நேரடியாகத் தொடர்பில்லாத உள்துறை அமைச்சரை அழைத்தது தமிழக அரசு.

அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?
Getty Images
அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?

காரணம், அ.தி.மு.கவிற்கு அதன் தேர்தல் தொடர்பான திட்டங்களை இறுதிசெய்ய வேண்டிய அவசியம் எழுந்திருந்தது. தி.மு.க. களப்பணி தொடர்பாக தனது அமைப்பு ரீதியான கூட்டங்களை நடத்த ஆரம்பித்து, பரப்புரை திட்டங்களை அறிவித்துவிட்டமையாலும் காலம் தாழ்த்தாமல் தானும் களமிறங்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.கவிற்கு ஏற்பட்டது.

ஆனால், தேர்தல் பணிகளைத் தொடங்கும் முன்பாக கூட்டணியை இறுதி செய்துகொள்ள வேண்டும் என நினைத்தது. பா.ஜ.க. தங்களோடு கூட்டணியில் தொடரப் போகிறதா, அல்லது தனித்துப் போக எண்ணுகிறதா, தொடர்ந்தாலும் விலகினாலும் தான் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை என்ன? தன்னுடைய உத்திகள் என்னவாக இருக்க வேண்டும், பரப்புரையின் மையப் பொருண்மை என்னவாக இருக்க வேண்டும், தன்னுடைய சாதனைகளை மாத்திரம் சொன்னால் போதுமா, அல்லது தான் செய்யத் தவறியவற்றுக்கு மத்திய அரசின் மீது பழி போட வேண்டுமா, தி.மு.க. மாநிலத்தின் உரிமைக் குரலை அதன் பரப்புரையின் மையப் பொருளாக்கினால் அதை எவ்விதம் எதிர்கொள்வது போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டுமானால் பா.ஜ.கவிற்கும் தங்கள் கட்சிக்குமான உறவு தொடருமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க. இருந்தது.

இவை குறித்து தமிழக பா.ஜ.க. என்ன நினைக்கிறது என்பதை அதன் செயல்பாடுகளைக் கொண்டு ஊகிக்க முடியவில்லை. அது மோதல் மனப்பாங்கில் இருந்தது. அது நட்பு பாராட்டியிருந்தாலும் இறுதி முடிவிற்காக எப்படியும் பா.ஜ.கவின் தேசியத் தலைமையிடம்தான் பேசியாகவேண்டும். அதனால் இப்பொழுதே அதைப் பேசி முடித்துவிடலாம் என்று அ.தி.மு.க. முடிவெடுத்தது.

மரபுகளுக்கு மாறாக, அரசு மேடையிலேயே, அமித்ஷா முன்னிலையிலேயே, கூட்டணி தொடரும் என்று அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். அதனை அடுத்துப் பேசிய முதல்வரும் வழிமொழிந்தார். அமித்ஷாவும் தன் பங்கிற்கு நல்லாட்சி தொடர மோதி அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார்.

அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?
Getty Images
அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?

ஆனால், அதோடு அவர் நின்றுவிடவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறேன் அதனால் அரசியல் பேசப் போகிறேன் என்று அறிவித்துவிட்டு, அவரும் மரபுகளைத் தூக்கிக் கடாசிவிட்டு, தேர்தல் பரப்புரை எவ்விதம் அமையும் எனக் கோடி காட்டினார்.

மோதி அரசு மூன்று விஷயங்களை உறுதியாக எதிர்த்து வருகிறது. ஒன்று குடும்ப ஆட்சி, இரண்டு ஊழல், மூன்று ஜாதிய அரசியல். பல மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தன. அங்கெல்லாம் மக்கள் குடும்ப ஆட்சிக்கும் ஊழலுக்கும் எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அது தமிழ்நாட்டிலும் நடக்கும் என்றார் அமித் ஷா.

2019 தேர்தலில் ராகுல் காந்தியை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது, கர்நாடகத்தில் காங்கிரஸ், தேவகவுடாவின் மகன் குமாரசமியின் கட்சி இவற்றைவிட அதிக இடங்கள் பெற்று தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது, மகாரஷ்டிரத்தில் பால்தாக்ரேவின் மகன் உத்தம் தாக்ரேவின் சிவசேனையைவிட அதிக இடங்கள் பெற்று தனிப் பெரும் கட்சியாக வென்றது, அண்மையில் பிஹாரில் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்விக்குப் பெரும் சவாலாக விளங்கி அவர் ஆட்சியைப் பிடிப்பதை தடுத்தது இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் குடும்ப ஆட்சி என்பதை பா.ஜ.க. வெற்றிகரமாக வீழ்த்தி வந்திருக்கிறது எனத் தெரியும். எனவே அதைத் தன் பரப்புரையின் மையப் புள்ளியாகக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

தி.மு.க. தரப்பிலிருந்து உடனே இதற்கான எதிர்வினை வந்துவிட்டது. அ.தி.மு.கவில் வாரிசுகள் இல்லையா, பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் அவர்கள் எல்லாம் வாரிசுகள்தானே என்ற ரீதியில் தி.மு.க. பொதுச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க. எதிர்ப்பது குடும்ப ஆட்சியை; வாரிசுகளை அல்ல. அமித்ஷா 'பரிவார்வாதி பார்ட்டி' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பரிவார் என்ற இந்திச் சொல்லுக்குக் குடும்பம் என்று பொருள். அதாவது ஒரு அரசியல் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு நெருக்கமான, அது பெரும்பாலும் அவர்கள் தந்தை சார்ந்திருக்கிற, கட்சியில் சேர்ந்து பணியாற்றுவதுண்டு. குடும்பம் எந்தக் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறதோ அந்தக் கோயிலுக்கே அடுத்த தலைமுறையினரும் போவதுபோல, எந்த மடத்தில், சர்ச்சில், ஜமாத்தில் தங்கள் குடும்பம் இணைந்திருக்கிறதோ அங்கேயே தாங்களும் தொடர்வதைப் போலக் குடும்ப வழக்கமாகத் தொடரும் உறவைப் போன்றது அது. அதற்கும் ஒரு குடும்பத்தின் கையில் ஒரு கட்சி இருப்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார். அவர் மகனும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆக இருந்தார். ஆனால் அவரின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் இல்லை. நேரு பிரதமராக இருந்தார். அவரது மகள் இந்திரா, பேரன் சஞ்சய், பின் இன்னொரு பேரன் ராஜீவ், பின் பேரனின் மனைவி சோனியா, அவரது கொள்ளுப் பேரன் ராகுல், கொள்ளுப் பேத்தி பிரியங்கா என்று அவரது குடும்பத்தின் கையில் காங்கிரஸ் இருக்கிறது.

துரைமுருகன் தி.மு.கவின் பொதுச் செயலாளர். அவர் மகன் தி.மு.க. எம்.பி. ஆனால் தி.மு.கவில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கதிர் ஆனந்திடம் இல்லை. கருணாநிதி தலைவராக இருந்தார். அவர் மகன் ஸ்டாலின் கட்சியில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார். கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஒரு மகன் மத்திய அமைச்சர், ஒரு மகன் மாநிலத்தில் துணை முதலமைச்சர், மகள் மாநிலங்களவை உறுப்பினர், பேரன் மத்திய அமைச்சர். இதுதான் குடும்ப ஆட்சி. இதைத்தான் குறிப்பிடுகிறார் அமித்ஷா.

அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?
Getty Images
அமித்ஷா தமிழக வருகை: அரசியலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும்?

அவர் குறிப்பிடும் ஊழல், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் பிரசினையாக இருந்ததில்லை என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுவதுண்டு. அதற்கு ஆதாரமாக ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பின்பும் 2016ல் அவர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்ததைச் சொல்வதுண்டு. ஆனால் அது ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஆளுமைக்குக் கிடைத்த வெற்றி என்றே கொள்ள வேண்டும். 2ஜி வழக்கு தொடர்பாக ஆ. ராசா 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அது அந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. 119 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 23 இடங்களில் மாத்திரமே வெற்றிகண்டது. ஆட்சியை இழந்தது மட்டுமல்ல, முதன்மையான எதிர்க் கட்சியாகக் கூடச் சட்டமன்றத்தில் நுழைய முடியவில்லை.

இந்தத் தேர்தலிலும் தி.மு.கவின் மீதான ஊழல் புகார்கள் மீண்டும் எழுப்பப்படலாம் என்பதை அமித்ஷாவின் பேச்சு கோடிகாட்டுகிறது. " ஊழல் பற்றிப் பேசும் முன் தி.மு.க. தன் குடும்பத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று அமித் ஷா பேசினார். 2 ஜி விசாரணை மீண்டும் தொடங்கியிருப்பதாலும் அமித் ஷா உள்துறை அமைச்சர் என்பதாலும் இதை வெறும் மேடை முழக்கம் எனத் தள்ளிவிட முடியவில்லை.

பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் அ.தி.மு.கவிற்கு அனுகூலம் உண்டா? நிச்சயம் சில பிரச்சனைகள் இருக்கின்றன. எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது இழுபறியாகி பின் இறுதியில் முடிவு எட்டப்படலாம் என்பது முதல் பிரசினை. மதச்சார்பற்ற வாக்குகள்- (அப்படி ஒன்றிருந்தால்) அ.தி.மு.கவிற்கு கிடைக்காமல் போகலாம் என்று தி.மு.க. மக்களவை உறுப்பினர் ரவிகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

சிறுபான்மையினர் வாக்குகள் எப்போதுமே பா.ஜ.கவிற்குக் கிடைக்க வாய்ப்பில்லை. பா.ஜ.கவின் வியூகம், சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.கவிற்கு மொத்தமாகக் கிடைத்துவிடாமல் பார்த்துக்கொள்வதாக இருக்கும் (பிஹாரைப் போல). சிறுபான்மையினர் வாக்கு வங்கியைப் போல இந்துக்கள் வாக்கு வங்கி என்ற ஒன்று உருவாகிவருகிறது என்று கருதப்படுகிறது. அப்படி ஒன்றிருந்தால் அதில் பெரும் பகுதி பா.ஜ.கவிற்குத்தான் கிடைக்கும்.

இன்னும் சொல்லப்போனால் அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணியைத் தொடர்வதற்கான காரணங்களில் ஒன்று, அந்த வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்வதுதான். ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.கவிற்கு வாக்களித்து வந்த ஆத்திக இந்துக்கள் பா.ஜ.கவிற்குப் போய்விடக்கூடாது என்பது அதன் நோக்கமாக இருக்கலாம். வேல் யாத்திரை அடித்தளத்தில் ஏற்படுத்தியிருக்கும் சலனங்களை அது உளவுத்துறை மூலம் அறிந்திருக்க வாய்ப்புண்டு.

2019 மக்களவைத் தேர்தலில் தேசிய முற்போக்குக் கூட்டணிக்குப் பெருந்தோல்வி கிட்டியது உண்மைதான். ஆனால் அதே அளவு உண்மை மக்கள் நாடாளுமன்றத்திற்கு ஒரு விதமாகவும் சட்டமன்றத்திற்கு ஒரு விதமாகவும் வாக்களிக்கிறார்கள் என்பதும்.

பா.ஜ.கவை தமிழர்களுக்கு எதிரான கட்சியாக தி.மு.க. இந்தத் தேர்தலில் முன்னிறுத்தும் என்பதை பா.ஜ.க. உணர்ந்தே இருக்கிறது. அதை மனதில்கொண்டே பத்தாண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. தமிழகத்திற்கு செய்தது என்ன? நாங்கள் என்ன செய்தோம் என்று என்னால் பட்டியலிடமுடியும் என்று அமித்ஷா சவால் விடுகிறார்.

தி.மு.கவிற்கு சில அனுகூலங்கள் இருப்பதைப் போல சில சவால்களும் இருக்கின்றன. உதயநிதி களம் இறங்கி பரப்புரை செய்யும் போது குடும்ப ஆட்சி என்பதற்கு சரியான பதிலை அதனால் தரமுடியாது. சாமர்த்தியமாகவோ, சமாளிப்பாகவோ அதற்கு அது பதில் கூற முற்படும். அ.தி.மு.க. தனது சாதனைகளை - குறிப்பாக 7.5% இட ஒதுக்கீடு, 11 மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றை முன்வைக்கும். அத்துடன் அமித்ஷா எழுப்பிய கேள்வியும் எதிரொலிக்குமானால் திமுகவின் பரப்புரை Proactiveஆக இருப்பதற்கு பதில் reactive ஆக மாறக் கூடும். அதாவது எதிராளியைத் தாக்குவதற்கு பதில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும்.

அ.தி.மு.கவை பா.ஜ.கவின் அடிமை ஆட்சி என தி.மு.க. சொல்லிவருகிறது. ஆனாலும் நீட், புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை அ.தி.மு.க. எதிர்த்து வருகிறது. என்றாலும் பா.ஜ.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்த விஷயங்களைத் தி.மு.க. பரப்புரையில் பேசும். ஆனால் இணக்கமாக இருக்கும் கட்சியிலேயே இவற்றில் மாற்றம் கொண்டு வர முடியவில்லையே, முரண்பட்டு மோதும் கட்சியால் எப்படி மாற்றங்கள் கொண்டுவர முடியும் என மக்கள் யோசிப்பார்கள். தி.மு.க. 38 மக்களவை உறுப்பினர்களைப் பெற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதனால் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .

ஒன்று நிச்சயம், வரவிருக்கும் தேர்தல் பலவான்களின் மோதல் அல்ல. கருத்துக்களின் மோதல். அதற்கான ஆரம்பப் புள்ளியை அமித் ஷா வைத்திருக்கிறார்.

BBC Tamil
English summary
How Amit Shah trip will change TN political game explains Malan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X